ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சி. சிவசேகரத்தின் புதுக்கவிதை விமர்சனங்கள் - ஓர் ஆய்வு (C. Sivasekharam’s Criticisms on New Poetry - A Study)

கோ.குகன், சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ் கற்கைகள் துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை | K. Gukan, Senior Lecturer, Department of Tamil Studies, Eastern University, Sri Lanka 31 Jan 2024 Read Full PDF

Abstract

In the evolution of Tamil poetry, a discernible progression unfolds, encompassing conventional poetry, modern poetry, prose poetry and new poetry. However, articulating their origins, growth, and decline in a strictly chronological manner proves challenging. The traditional Prosodic form, inherently rooted in communal possession, delved into themes of land, religion, and divinity. Concurrently, dissenting prose poetry emerged, deviating from the established Prosodic conventions. The coexistence and interplay of conventional, modern, and prose poetry coincided with the advent and maturation of new poetry, distinguished by its distinctive form, content, and strategic approach. Despite these historical developments, the contemporary Tamil milieu leans towards the potential prevalence of new poetry. However, the introduction of poetic forms to Tamil was met with varied resistance. Notably, individuals anticipating the future necessity of new poetry engaged in critical assessments of Tamil publications featuring such verses. Within these reviews, an elucidation of the characteristics inherent to new poetry transpires. This study delves into the critique offered by C. Sivasekharam, a prolific commentator on Eelam's new poetry scene. Through an exploration of his critiques, poets of this era gain insight into the fundamental nature of new poetry.

Keywords: C.Sivasekharam, New Poetry, Criticism on New Poetry

 
1.    அறிமுகம் :
மரபுக் கவிதைக்கும் புதுக்கவிதைக்குமிடையே ஒரு தெளிவான பிரிகோடிடக்கூடிய அளவிற்கு தமிழ்க் கவிதையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் புதுக்கவிதை ஒரு தனித்துவமான இலக்கிய வடிவமாக நிலைபெற்றுள்ளது. புதுக்கவிதை தமிழுக்கு அறிமுகமாகியபோது பல்வேறு வகையான எதிர்ப்புகள் காணப்பட்டன. பண்டிதர்கள் மட்டுமன்றி நவீன இலக்கிய ஈடுபாடுடையவர்களும் இதனை எதிர்த்தனர். இதனால் புதுக்கவிதையை எதிர்க்கும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டனவேயன்றி அதன் இயல்புகளை விளக்கும் வகையிலான கருத்துக்கள் பெரும்பாலும் வெளிவரவில்லை. இந்நிலையில் ஈழத்து இலக்கிய விமர்சனத்தில் புதுக்கவிதையின் இயல்புகளை அதிகம் விளக்க முயன்றவர்களில் சி. சிவசேகரம் குறிப்பிடத்தக்கவராவார். 
க.கைலாசபதி, இ.முருகையன் போன்ற ஈழத்து இலக்கிய விமர்சகர்கள் புதுக்கவிதையைக் கடுமையாக எதிர்த்தார்கள். மரபுக் கவிதையின் மீதான பிடிப்பு இதற்கு முக்கியமான காரணமாகும். அதாவது மரபார்ந்த யாப்புக் கட்டுப்பாடுகளை மீறுவதுதான் புதுக்கவிதை என்று விளங்கிக் கொள்ளப்பட்ட ஆரம்ப காலத்தில் மரபு மீறப்படக்கூடாதது என்ற அடிப்படைவாதம் காரணமாக மரபுக் கவிதையில் எவ்வகைப் பொருளையும் கையாளலாம் என்று விவாதித்தனர். இதனால் புதுக்கவிதையின் இயல்புகளை விளக்குவதற்கு அவர்கள் பெரும்பாலும் முயற்சிக்கவில்லை. ஆயினும் புதுக்கவிதை சமூக இயைபைப் பெற்றுக்கொண்ட பின் அதனை ஒரு புதிய முயற்சியாக ஏற்றுக்கொண்டனர். காலப்போக்கில் தமிழுக்குப் புதுக்கவிதையின் முக்கியத்துவம் உணரப்பட்ட நிலையில் அதன் இயல்புகளைப் பற்றிச் சில இலக்கிய விமர்சகர்கள் எழுதினர். அவர்களுள் முக்கியமானவர் சி.சிவசேகரம். இவர் தமிழ் இலக்கிய விமர்சனங்கள் பாராட்டுரைகளாக அல்லது காழ்ப்புணர்வு காரணமான தாக்குதல்களாக அமைகின்ற ஆரோக்கியமற்ற இலக்கியச் சூழலில் தான் உண்மையாக உணர்பவற்றையும் சரி என்று தோன்றுபவற்றையும் வெளிப்படையாகச் சொல்வதற்காகவே இலக்கிய விமர்சனத்துக்குள் நுழைந்ததாகக் கூறுகின்றார்(1995:10 72). அந்த வகையில் தமிழ்ப் புதுக்கவிதையை வளர்த்தெடுக்க வேண்டும் என்று கருதி அதன் இயல்புகளை விளக்குவதற்கு முற்படுகின்றார். ஆயினும் புதுக்கவிதை குறித்த சி. சிவசேகரத்தின் பார்வை முரண்பாடானது என்றும் க. கைலாசபதி போன்றோரின் புதுக்கவிதை குறித்த கருத்துக்களின் எச்சசொச்சமே அவருடைய விமர்சனங்கள் என்றும் ராஜமார்த்தாண்டன் மதிப்பிடுகின்றார் (2003:123-126). இந்நிலையில் சி. சிவசேகரத்தின் இலக்கிய விமர்சனங்களை முழுமையாக நோக்குகின்ற போது தமிழில் வளர்க்க வேண்டிய புதுக்கவிதையின் இயல்புகளை அவர் தெளிவாக விளக்கியுள்ளமையைக் காண முடியும். இவ்வியல்புகளை “சி. சிவசேகரத்தின் புதுக்கவிதைக் கோட்பாடு” என்று கருதலாம். ஏனெனில் எந்தவொரு இலக்கிய விமர்சனமும் ஏதாவது ஒரு இலக்கியக் கோட்பாட்டின் பின்னணியிலேயே மேற்கொள்ளப்பட முடியும்(ம.நதிரா 2014:54). அந்தவகையில் சி. சிவசேகரம்  புதுக்கவிதையின் இயல்புகள் என்று கருதியவற்றை அவரது புதுக்கவிதை விமர்சனங்களினூடாக விளங்கிக்கொள்வது இந்த ஆய்வின் பிரதான நோக்கமாகும். இதனூடாக உலகளாவிய ரீதியில் புதுக்கவிதையின் இயல்புகளை விளங்கிக்கொள்வதும் ஈழத்து இலக்கிய விமர்சனச் சூழலை விளங்கிக் கொள்வதும் தமிழ்ப் புதுக்கவிதையாளர்களை அறிந்து கொள்வதும் சாத்தியமாகும். 
சி. சிவசேகரம் 1980 களின் நடுப்பகுதியில் தொடங்கி 1990 களின் நடுப்பகுதி வரை (1984 – 1993ஃ94) பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதிய புதுக்கவிதை விமர்சனங்கள் அவரது “விமர்சனங்கள்” என்ற நூலில் இடம்பெற்றுள்ளன. அவ்விமர்சனங்களும் அந்நூலில் தொகுபடாமல் விடுபட்ட “புதிய போத்தலில் சாக்கடை நீர்” என்ற தலைப்பில் 1980 இல்  “அலை” ( ஆனி - ஆவணி) இதழில் எழுதப்பட்ட கட்டுரையும் இந்த ஆய்வுக்கு அடிப்படைத் தரவுகளாக அமைகின்றன. அவற்றில் சி. சிவசேகரம் குறிப்பிடுகின்ற புதுக்கவிதையின் இயல்புகளை விபரிப்பதும் அவை ஈழத்து இலக்கிய விமர்சகர்களின் புதுக்கவிதை பற்றிய கருத்துக்களோடு எந்தளவு இயைபுடையதாக அமைகின்றன என்பதை வரலாற்று ரீதியாக நோக்குவதும் இவ்வாய்வில் இடம்பெறுகின்றது.    

2.    சிவசேகரத்தின் புதுக்கவிதைக் கோட்பாடு
சி. சிவசேகரம் தனது கவிதைகளைப் புதுக்கவிதை என்று கருதாதவர் (1980:362). ஆனால் தமிழில் புதுக்கவிதையை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியவர்(1995:50). புதுக்கவிதை பற்றிய தெளிவான அபிப்பிராயம் அவருக்கு இருந்துள்ளமையை இதனால் விளங்கிக்கொள்ளலாம். பொதுவாகத் தமிழ்க் கவிதை பற்றிக் குறிப்பாக சிவரமணி சேரன் சோலைக்கிளி தர்மு சிவராமு கி.பி.அரவிந்தன் போன்ற கவிஞர்களின் கவிதைகளைப் பற்றி சி. சிவசேகரம் விமர்சனங்களை எழுதியுள்ளார். அவ்விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு புதுக்கவிதையின் இயல்புகள் என்று அவர் கருதுபவற்றைப் பின்வருமாறு பட்டியல்படுத்தலாம். 

2.1.    கவித்துவம் அல்லது கவிதைநயம்
மரபுக் கவிதையாயினும் புதுக்கவிதையாயினும் அதன் அளவுகோலாகக் கவித்துவம் அமைய வேண்டும் என்பதைச் சிவசேகரம் வலியுறுத்துகின்றார்(1995:72-77). அவர் “புதுக்கவிதை என்பது மரபுவழிக் கவிதையினின்று சகல விதத்திலும் மாறுபட்டு நிற்கும் ஒன்றென்றால் கவிதை நயங்கூட அற்ற சகல புதுக்கவிதைகளும் தம்பெயருக்குத் தகுதியானவையே. மற்றப்படி யாப்பிலக்கணத்தை எந்தவொரு வகையிலும் மீறும் ஒரு கவிதை புதுக்கவிதையாகிவிடுமானால் எத்தனையோ மரபுவழிக் கவிதைகளைப் புதுக்கவிதைகள் என்று புனர்மதிப்பீடு செய்ய வேண்டி வந்துவிடும்” என்று குறிப்பிடுகின்றார்(1980:360). மரபின் மறுதலிப்பாகப் புதுக்கவிதை அமையும் என்பதில் சிவசேகரத்துக்கு உடன்பாடில்லை. மரபுக் கவிதைகளிலும் சிலவகைகளில் மரபு மீறல் இடம்பெற்றுள்ளது. சிவசேகரம் மரபு என்று குறிப்பிடுவது யாப்பே ஆகும். 
கவித்துவம் என்பது கவிதையின் ஒரு கூறு மட்டுமன்றி முழுமையான அனுபவத்தைக் குறிப்பது. புதுக்கவிதை கவிஞனுக்கு அதிகம் சுதந்திரம் தருவதாலும் மொழியின் சாத்தியப் பாடுகளை அதிகளவில் பரிசீலிப்பதற்கு அல்லது விருத்தி செய்வதற்கு வாய்ப்புத் தருவதாலும் புதுக்கவிதை மூலம் இதனை விருத்தி செய்ய முடியும் என்று குறிப்பிடுகின்றார்(1995:77). எதுகை மோனை என்ற மரபுக்கட்டுப்பாடு கவிஞனின் இயல்பான மொழிக்கையாளுகைக்குச் சவாலாக அமையும் போது கவிஞனின் தனித்துவம் இல்லாமலாகிறது. சிவசேகரத்தின் கருத்துப்படி புதுக்கவிதை ஒவ்வொன்றும் தனக்கான இலக்கணத்தை வகுத்துக்கொண்டே போகிறது(1995:81). ஆகவே புதுக்கவிஞர்கள் தனித்துவமான கவித்துவ வீச்சை அடையாளம்காட்ட வேண்டும். 

2.2.    முழுமையான அனுபவம் :
“தமிழில் ஏற்பட்ட புதுக்கவிதை இயக்கம் அயலிலிருந்து பெற்ற சில கருத்துக்களை அரைகுறையாகப் புரிந்துகொண்டவர்களால் முன்னெடுக்கப் பட்ட காலத்தில்தான் கவிதையின் சில கூறுகளையே கவிதையாகக் காணும் பண்பு மேலோங்கியது” என்று புதுக்கவிதையின் சில கூறுகள் தமிழில் தனிப் புதுக்கவிதைகளாகக் கருதப்பட்ட வரலாற்றைச் சிவசேகரம் சுட்டிக்காட்டுகின்றார்(1995:82-83). படிமம் குறியீடு சிக்கலாகத் தெரிகின்ற சிந்தனைகள் வித்தியாசமான சொற்பிரயோகங்கள் புத்திஜீவித்தனமான புதிர்கள் போன்ற கவிதையின் கூறுகள் அதன் சாராம்சமாகவும் அளவுகோல்களாகவும் கருதப்பட்ட தமிழகக் கவிதைச் சூழல் குறித்தே அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றார்(1995:59-60). வெறும் படிமம் கவிதையாகிவிடாது என்றும் அனுபவ முழுமையைத் தராது என்றும் குறிப்பிடுகின்றார். கவிதை என்பது முழுமையான அனுபவத்தைத் தர வேண்டும். ஈழத்துக் கவிஞர்களில் சிவரமணி சேரன் சோலைக்கிளி கி.பி.அரவிந்தன் போன்றோர் கருத்துச் செறிவானதும் உணர்வுபூர்வமானதுமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளனர். இவ்வனுபவத்தை வாசகனும் பகிர்ந்துகொள்வதாக இருக்க வேண்டும் என்பதைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 
“ஆழமான சிந்தனையின் வெளிப்பாடு சிக்கலான சொல்லடுக்குகளாகக் குவிய வேண்டியதில்லை. படைப்பு வீச்சு வாசகனைப் பயமுறுத்தும் விடயமும் இல்லை. படைப்பாளி யாருக்காக எதைப் படைக்கிறான் அவனது (உடனடியான) கருத்துப் பரிமாறும் நோக்கம் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றுள்ளது என்பதை மட்டுமல்லாது அவனது படைப்பு வாசகனது சிந்தனையை எவ்வளவு தூரம் கிளறுகின்றது என்பதும் முக்கியமானது. நல்ல கவிஞன் பாதையை உணர்த்துகிறான். அல்லாதவன் தானே முழுப் பிரயாணத்தையும் செய்து காட்டுகிறான். அவனது வாசகன் வெறும் பார்வையாளனாக அனுபவத்தைப் பகிர முடியாது அந்நியமாகிறான்”(1995:33)
ஒரே அனுபவத்தைக் கவிஞனும் வாசகனும் ஒரே மனநிலையிலும் உணர்வு பூர்வமாகவும் பகிர்ந்துகொள்வதென்பது சமூக யதார்த்தத்துடன் கவிப்பொருள் ஒன்றி நிற்கிற போதே சாத்தியமாகும். 

2.3.    சமூக யதார்த்தம் அல்லது சமுதாய உணர்வு
தர்மு சிவராமுவின் கவிதை பற்றிச் சிவசேகரம் பின்வருமாறு எழுதுகின்றார். “தர்மு சிவராமுவைத் திறமையற்றவர் என்று ஒதுக்க நான் முயலவில்லை. ஆனால் அவரது சமுதாய உணர்வின் போதாமை பல வி~யங்களை ஆழமாக அணுக முடியாமல் அவரை மறித்துவிட்டது என்பது என் கருத்து. அவரது கவிதைகள் எதையோ சொல்ல முனைகின்றன. ஆனால் சொல்ல முனைந்தது அங்கு இல்லாததாலோ அவரது கவிதை மூலம் ஒரு முழுமையான அனுபவத்தை அவரால் பரிமாறவோ பகிரவோ இயலாது போனதாலோ (கொஞ்சம் சிரமப்பட்டு வாசகனுக்கு ஒரு படி மேலேயே சஞ்சரிக்கும் நிர்ப்பந்தம் காரணமாக) அகப்படாமல் நழுவிவிடுகிறது. பல புதுக்கவிதையாளர்களிடம் காண முடியாத ஒரு வேகத்தை அவரது கவிதைகளில் (எப்போதும் இல்லாவிட்டாலும்) அடிக்கடி காணலாம்”(1995:27). தர்மு சிவராமு பேச வருகின்ற விடயங்கள் சமூக உணர்வற்றிருப்பதால் அவரால் முழுமையான அனுபவத்தைப் பகிர முடியவில்லை என்று சிவசேகரம் குறிப்பிடுகின்ற விடயம் முக்கியமானது. தமிழிற் புதுக்கவிதையின் வருகை தமிழ்க் கவிதை மரபின் நெருக்கடியான நேரடியான விளைவாக அமையவில்லை. சமுதாய நெருக்கடியுடன் புதுக்கவிதை உறவு கொண்ட பின்பே உயிருள்ள கவிதைகள் எழுந்தன(1995:178). ஆகவே சமூகத்தின் உண்மையான பிரச்சினைகள் புதுக்கவிதையின் உள்ளடக்கமாக அமைய வேண்டும். கவிதையின் வெற்றி அதன் உள்ளடக்கத்திலேயே தங்கியுள்ளது. சிறப்பான கவித்துவத்துடன் சமகாலச் சமுதாயத்தைச் சார்ந்ததாக அது அமைய வேண்டும். சமுதாய நெருக்கடிகளால் ஏற்படுகின்ற அக உணர்வும் முழுமையான அனுபவப் பகிர்வுக்கு உதவும். சோலைக்கிளியின் கவிதைகள் பற்றிச் சிவசேகரம் குறிப்பிடுகின்ற பின்வரும் கருத்து இதனைத் தெளிவுபடுத்தும். “அவருடைய கவிதைகள் மிகவும் தன்னுணர்வு சார்ந்தவை. ஒருபுறம் அவரது தனிப்பட்ட அனுபவங்களதும் அந்தரங்க உணர்வுகளதும் வெளிப்பாடாகவும் மறுபுறம் தன்னைச் சூழவுள்ள சமுதாயத்தின் அதிவேகமான சீரழிவின் மீதான கோபத்தின் வெளிப்பாடாகவும் அவரது கவிதைகள் அமைகின்றன. இடையிடையே தன்மன உட்தேடல்களையும் காணலாம்” (1995:97).

2.4.    ஓசைநயம் 
புதுக்கவிதைக்கும் ஓசைநயம் உண்டு. அது மரபுக்கவிதையின் ஓசைநயத்திலிருந்து வேறானது என்பதே சிவசேகரத்தின் தெளிவான கருத்து. யாப்பிலக்கண விதிகளால் உருவாக்கப்படுகின்ற ஓசைநயம் கவிதையின் உள்ளடக்கத்தைச் சிதைக்காத வகையில் அமைய வேண்டும் என்பதைச் சிவசேகரம் வலியுறுத்துகின்றார்(1980:361). அதேநேரம் பேச்சோசையின் சந்தங்களை அடையாளம் கண்டு அவற்றைக் கவிதையில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சோலைக்கிளியின் கவிதைகளில் சொற்கள் இயல்பாகவே வந்து கவிதை வரிகளாக விழும் போது அவற்றிடையே உள்ளார்ந்த ஒரு சந்த உறவு அமைவதையும் அது சீர்ப்படுத்தப்பட்ட பேச்சு மொழியின் சந்தமாக இருப்பதையும் எடுத்துக் காட்டுகின்றார்(1995:95-96). 

2.5.    எளிமையும் தெளிவும்
கவிதை பொதுவாகவே இறுக்கமானதும் சிக்கனமானதுமான சொல்லமைப்புடையது. அதேநேரம் வாசகனைக் கவிதையின் அனுபவத்தைப் பெறாது அந்நியமாக்குவதும் அதன் சிக்கலான சொல்லடுக்குகளே ஆகும். சிந்தனைகளை எளிமையான சொற்களைக் கையாண்டு வெளிப்படுத்துவதன் மூலம் கவிதையின் பொருளை வாசகர்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். இதனூடாகவே கவிஞனின் கருத்துப் பரிமாறும் நோக்கமும் வாசகனது சிந்தனையைக் கிளறும் நோக்கமும் வெற்றிபெற முடியும்(1995:33-34)

கவிதையில் உள்ளடக்கம் உருவம் உத்திமுறை ஆகிய மூன்றும் முக்கியமானவை. தமிழில் புதுக்கவிதை என்பது பெரும்பாலும் அதன் உருவம் காரணமாகவே பேசுபொருளாகியது. இச்சூழலில் இம்மூன்றின் முக்கியத்துவம் பற்றியதாகச் சிவசேகரத்தின் விமர்சனங்கள் அமைந்தன. ஒரு கவிதையில் இம்மூன்றின் இயைபு என்பது அடிப்படையான அம்சம் என்பதை வலியுறுத்தினார். “என்னளவில் யாப்பிலக்கணம் கவிதையில் முக்கியமாக ஓசை தொடர்பான சில சிறப்புக்களைப் பேண உதவுகின்றது. ஆனால் எது கவிதையின் உடலைக் காக்க முனைகின்றதோ அதுவே கவிதையின் ஜீவனைச் சிதைக்க விடக்கூடாது. யாப்பிலக்கணம் கவிதையின் உருவம் தொடர்பான அம்சங்களைப் பேணுகிறது. அதனால் கவிதைக்கு உயிர் கொடுக்க முடியாது. கவிதையின் உயிர் அதன் சிருஷ்டியில் சிருஷ்டி கர்த்தாவின் சிந்தனையில் உண்டாகிறது. எங்கே கவிதையின் ஜீவனை அதன் வடிவம் பற்றிய விதிகள் கட்டுப்பாடுகளாக மாறி விகாரப்படுத்த முனைகின்றனவோ அங்கே கவிதை தனக்கென்றொரு புதிய விதி செய்து அதன் வழியே உருவம் பெறுகிறது. ஆகவே இந்த ஜீவனுக்கும் ரூபத்துக்குமான முரண்பாட்டில் இரண்டுமே முக்கியமானவை. ஆனால் ஜீவன் அடிப்படையானது.”(1980:361) என்று சிவசேகரம் குறிப்பிடுவதிலிருந்து இதனை மேலும் விளங்கிக்கொள்ளலாம். சிவசேகரம் குறிப்பிடுகின்ற கவிஞனுக்கான சுதந்திரமும் தனித்துவமான கவித்துவ வீச்சும் இந்த இயைபிலிருந்து விடுபட முடியாது. அவ்வியைபின் அடிப்படையிலிருந்துதான் கவிஞர்கள் சமகால வாழ்வியல் அம்சங்களை சமுதாய உணர்வோடு வெளிப்படுத்த வேண்டும். கவிஞர்கள் வாசகர்களுடன் பரஸ்பரம் கவிப்பொருளைப் பகிர்ந்து கொள்வதற்கு மேற்படி கருப்பொருளும் எளிமையான சொற்களும் கையாளப்படுவது சிறந்தது. அவ்வாறு சமகால வாழ்வியலோடு கவிப்பொருள் ஒன்றிவிடுகிற போது இயல்பாகவே ஓசைநயம் அமைந்துவிடும். ஏனெனில் யாப்புக்கும் வாழ்க்கைக் கதிக்கும் தொடர்புண்டு. வாழ்க்கையில் பெரும் பிளவுகள் மரபு மாற்றங்கள் ஏற்படின் யாப்பிலும் அது தெரிய வரும். வாழ்க்கையின் சந்தம் மாற மாறக் கவிதையின் சந்தமும் மாறுவது இயல்பு. வாழ்க்கைச் சந்த மாற்றத்தின் உண்மையான கவிதைக் குரலாக அமைபவர்களே புதுக்கவிதையாளர்கள்(கா.சிவத்தம்பிää2010:144-145).   

3.    ஈழத்து இலக்கிய விமர்சனமும் சி. சிவசேகரத்தின் புதுக்கவிதைக் கோட்பாடும்
தமிழகப் புதுக்கவிதை வரலாற்றைக் காலம் பண்பு என்ற இரண்டு அடிப்படைகளுக்கும் பொருந்தும் வகையில் மூன்று காலகட்டங்களாக வகைப்படுத்தி விளக்கிய கைலாசபதி மணிக்கொடி எழுத்துக் குழுவினரின் கவிதைகளைப் புதுக்கவிதை என்று ஏற்றுக்கொள்ளவில்லை. அவற்றைப் “புதிர்க்கவிதை” என்று குறிப்பிட்டார். “குறைப்பிரசவங்கள்” என்றும் “செத்துப்பிறப்பவை” என்றும் புதுக்கவிதைகளின் முழுமையற்ற தன்மையையும் உணர்ச்சியற்ற தன்மையையும் சாடினாhர். தமிழகப் புதுக்கவிதைகளின் பொருள்மரபாக மனமுறிவு பாலியல் தடுமாற்றம் நோய்மை அந்நியப்படல நம்பிக்கை வறட்சி போலித்தன்மை வீண்பகட்டு பொறுப்புணர்ச்சியின்மை போன்ற சமுதாயப் பயனற்ற விடயங்கள் பயின்று வந்த காலத்திலேயே கைலாசபதி இத்தகைய விமர்சனங்களை முன்வைத்தார். சி.சு.செல்லப்பா ந.பிச்சமூர்த்தி போன்றோர் யாப்பற்றமையும் அகநோக்குமே புதுக் கவிதையின் தனிச்சிறப்பியல்புகள் என்று கருதிய போது அனுபவ உணர்வுக்கு இயைந்த வகையில் புதுக்கவிதை அமைய வேண்டும் என்றும் பழமை – புதுமை என்ற வாதம் அவசியமற்றது என்றும் வலியுறுத்தினார் (1973:51-62). கைலாசபதி மரபார்ந்த யாப்பு விதிகளை மீறுவதுதான் புதுக்கவிதை என்ற கருத்தை அடிப்படையில் மறுப்பதையும் நவீன காலத்தில் எழுதப்படும் புதுக்கவிதைகளில் பழைய யாப்பு வகைகளின் கூறுகள் பயின்று வரலாம் என்று குறிப்பிடுவதையும் காணலாம். 
“புதுக்கவிதைப் பற்றார்வலரிற் பெரும்பாலானோர் வெளிப்படையாகவே யாப்பைப் புறக்கணிப்பவர்கள். ஆகவே அதுபற்றி இவ்விடத்தில் ஆசங்கித்தல் வீண் எனத் தோன்றும். எனவே இங்கு நான் குறிப்பிடுவது இலக்கண சுத்தமான யாப்பமைதியையன்று. பழைய யாப்பிலக்கணத்தை அனைவரும் அப்படியே பின்பற்றுதல் வேண்டும் எனவும் நான் வாதிடவில்லை. ஆனால் புதுக்கவிதை இயற்றுவோரும் சிற்சில பழைய யாப்பு வகைகளை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தல் கூடும் என்பதனைத் தமிழ் நாட்டில் வானம்பாடி வட்டத்தினரிற் சிலர் நிரூபித்துள்ளனர். மேலெழுந்த வாரியாகப் பார்க்குமிடத்து இவர்களது ஆக்கங்களிலே யாப்பின் சாயல் புலப்படாது. ஆனால் நுனித்து நோக்குமிடத்துப் பழைய யாப்பமைதிகளின் அடிநிலைக் கூறுகளை அவதானித்தல் கூடும். இறுதி ஆய்விலே எதுகை மோனை என்பனகூட அத்துணை முக்கியமல்ல. அவை இன்றியும் கவிதை இயலும். ஆனால் சொற்கள் சேர்ந்து இசைக்கும் போது உண்டாகும் ஒத்திசை கவிதையின் நிலைபேற்றுக்கு இன்றியமையாதது. சிறப்பாகப் புதுக்கவிதை பேச்சோசையையும் தொனி அழுத்தத்தையும் அடிநாதமாய்க்கொள்வதாக உரிமை பாராட்டப்படுவதால் அவற்றை மெய்யுரு வாக்கிக்காட்டவல்ல ஒத்திசைகள் அத்தியாவசியமாகின்றன. பழைய யாப்புகளுள் வௌ;வேறு விதங்களில் பேச்சுத் தொனியுடன் தொடர்புடைய அகவல் கலிப்பா வெண்பா முதலியவற்றின் அடிநிலைக் கூறுகள் வேண்டிய மாற்றங்களுடன் நவீன மொழிநடைக் கேற்பப் பயன்படக்கூடியவை. நவீன தமிழ்க் கவிஞரிற் சிலர் அறிவுறுத்தும் பண்பைப் பிரதானமாய்க்கொண்ட – அர்த்தபாவ அழுத்தக் கவிதைகளை இயற்றுங்கால் ஆசிரிய யாப்பைத் திறம்படக் கையாண்டிருத்தல் சிந்தித்தற் குரியது.”(1975:68)
வானம்பாடிக் கவிஞர்களே எதிர்கால நம்பிக்கை கொள்கைத் தெளிவு தேசப்பற்று நேர்மை தமிழ் மரபுணர்ச்சி எளிமை பொறுப்புணர்ச்சி சமுதாய நேயம் கூட்டுறவு மனோபாவம் போன்றவற்றைப் பொருள்மரபாக்கினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இடதுசாரி இயக்கங்களையும் கருத்துக்களையும் சார்ந்தவர்கள். பலர் மரபுக் கவிதைகளையும் எழுதியவர்கள். கவிதைக்கு சொற்களின் இயல்பான சொல்லமைதி பொருளமைதி என்பனவே அர்த்தத்தைத் தருகின்றன என்று நம்பியவர்கள். இவையே புதுக்கவிதையின் இயல்புகளாக அமைய வேண்டும் என்பது கைலாசபதியின் நிலைப்பாடாகவுள்ளது. 
இவ்வாறு பார்க்கும் போது ஆரம்பத்தில் புதுக்கவிதைக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த கைலாசபதி 1975 இல் அதனை ஏற்றுக்கொண்டிருப்பதைக் காணலாம். அதாவது மேற்கத்தேயத்தில் சமூக மாற்றத்தின் பின்னணியில் தோன்றிய புதுக்கவிதையை க.நா.சுப்பிரமணியமும் சி.சு.செல்லப்பாவும் தமிழ்ச் சமூகத்தின் உள்ளடக்கம் மாறாத நிலையில் கையாண்டமையே கைலாசபதியன் புதுக்கவிதை எதிர்ப்புக்கான காரணமாயிருக்கலாம். இங்கிலாந்தில் தனிமனித உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் எதிரான இடதுசாரிக் கவிஞர்களால் எழுதப்பட்ட கவிதைகளையொட்டியே புதுக்கவிதை தோன்றியது(சு.அரங்கராசு1991:149). தமிழகப் புதுக்கவிதை வரலாற்றிலும் இடதுசாரிச் சிந்தனை கொண்ட வானம்பாடிக் கவிஞர்களுடனேயே புதுக்கவிதை சமூக இயைபைப் பெற்றுக்கொள்வது கவனத்திற்குரியது. 
கைலாசபதிக்கு முன்னமே தமிழகக் கவிதைகளில் கண்விடுக்காத படிமங்கள் உள்ளன என்றும் எங்களுடைய இலக்கியம் எங்களுடைய வாழ்வியலை அனுபவமாக்கித் தர வேண்டும் என்றும் அதை ஒரு கவிஞன் தனது ஆற்றலுக்கு ஏற்ற விதத்தில் பயன்படுத்தலாம் என்றும் கவிஞனுக்குரிய சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது என்றும் சண்முகம் சிவலிங்கம் சுட்டிக்காட்டியிருப்பது கவனிக்கத்தக்கது (1970:181-182). ஆயினும் அவருடைய கருத்துக்கள் அக்கால இலக்கியச் சூழலில் கவனிக்கப்பட்டதாகவோ தாக்கம் செலுத்தியதாகவோ கருத முடியாது. இதற்கு சண்முகம் சிவலிங்கத்தின் கட்டுரை வெளிவந்த “கவிஞன்” இதழின் விநியோகம் பரந்தளவிலான வாசகரைச் சென்றடையும் வகையில் இடம்பெறாமை காரணமாகலாம். 
மு.பொன்னம்பலம் தமிழில் புதுக்கவிதை தோன்றி அது மீண்டும் பழைய கற்பனாவாதத் தடங்களிலேயே சுற்றுகிறது என்றும் அவற்றில் புதிய தேவைகளின் அருட்டல் இல்லை என்றும் குறிப்பிடுகின்றார்(1976:104). புதுக்கவிதை என்பது புதியதொரு அனுபவத்தைப் புதிய வேகத்தோடு சொல்ல வேண்டும். இங்கு சொல்லுகின்ற முறை என்பது முக்கியமானது(க.பூரணச்சந்திரன் 2016:42-47). மரபுக் கவிதை புதுக் கவிதை என்ற பாகுபாட்டில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதையும் கவிதைக்கு கவித்துவமே முக்கியம் என்பதையும் எம்.ஏ. நுஃமான் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கின்றார்(2000:26-28).  
யாப்பை மீறுதல் சமூக உள்ளடக்கம் அனுபவ உணர்வு ஓசைநயம் ஆகியவை பற்றிய கைலாசபதி சிவசேகரம் ஆகியோரின் கருத்துக்களுக்கிடையே ஒற்றுமை காணப்படுகின்றது. ஆயினும் தமிழ்க் கவிதை அனுபவங்களினூடாக  இவற்றை மேலும் விளக்குவதற்குக் கைலாசபதி  முயற்சிக்கவில்லை. சிவசேகரம் பல ஈழத்துக் கவிதைகளையும் சில தமிழகக் கவிதைகளையும் உதாரணமாகக் கொண்டு விளக்கியுள்ளார். இதனால் கைலாசபதியின் புதுக்கவிதை பற்றிய கருத்துக்களின் எச்சசொச்சமாகவே சிவசேகரத்தின் புதுக்கவிதை பற்றிய கருத்துக்கள் அமைகின்றன என்ற ராஜமார்த்தாண்டனின் மதிப்பீடு சரியாக இருக்கலாம். கைலாசபதியின் இறுதிக்காலத்திலேயே சிவசேகரம் விமர்சனத் துறைக்குள் வந்தவர் என்பது கவனத்திற்குரியது.

மரபுக் கவிதை என்றால் அது முழுமையாக யாப்பிலக்கணத்தைப் பின்பற்ற வேண்டும். அதில் சற்றேனும் பிசகினால் அது மரபுக்கவிதையாக முடியாது. ஏனெனில் யாப்பிலக்கணம் தெரியாத ஒருவர் அதைச் சரியாகப் பின்பற்றவோ மீறவோ முடியாது. அதேநேரம் அவர் எழுதும் ஒரு புதுக்கவிதையில் ஒருசில மரபிலக்கணக் கூறுகள் இயல்பாக வந்துவிடுவதால் அது புதுக்கவிதையில்லை என்றாகாது. ஏனெனில் அந்த மரபிலக்கணக் கூறுகள் இயல்பாக அமைந்தனவே தவிர அவர் கற்றறிந்து அமைத்தவை அல்ல. இந்நிலை சாத்தியமானது என்பதால்தான் மரபுக் கவிதைக் கூறுகளிலிருந்து வளர்வதாக புதுக்கவிதை அமைய வேண்டும் என்று சிவசேகரம் வலியுறுத்துகின்றார். இதன் அர்த்தம் தமிழில் புதுக்கவிதையை ஆக்குபவர்கள் மரபுத் தமிழ்க் கவிதைக்கான இலக்கணக் கூறுகளை அறிய வேண்டும் என்பதும் அவர்கள் தமது ஆற்றலுக்கு ஏற்ப அவற்றில் மாற்றங்களைச் செய்ய முடியும் என்பதும் அப்போதே புதுக்கவிதை தமிழ்க் கவிதையின் வளர்ச்சி நிலையாகப் பார்க்கத்தக்கதாக இருக்கும் என்பதும் ஆகும்.  

4.    முடிவுரை: 
ஈழத்து இலக்கிய விமர்சகர்களின் கவனம் தமிழகப் புதுக்கவிதைகள் மீதும் அவை பற்றிய விமர்சனங்கள் மீதுமே இருந்தது. முக்கியமாக அவற்றின் சமூகப் பொருத்தமின்மை யாப்பை மீறுதல் அகவுணர்வு ஆகிய விடயங்கள் பற்றித் தமது அதிர்ப்தியை வெளிப்படுத்தினர். ஆயினும் வானம்பாடிக் கவிஞர்கள் மரபார்ந்த யாப்பையும் பின்பற்றி சமூகப் பிரச்சினைகளை வெளிப்படுத்தியதால்; புதுக்கவிதை மீதான எதிர்ப்பைக் கைவிட்டனர். ஆயினும் அதனை வளர்க்கும் நோக்கில் ஆரோக்கியமான விமர்சனங்களை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. எதிர்ப்பு எதிர்ப்பாகவே இருந்ததைக் காணலாம். ஒரு இலக்கிய வடிவம் புதிதாகத் தோன்றுகின்ற போது அல்லது அறிமுகமாகின்ற போது அதை நெறிப்படுத்துவதிலும் வளர்ப்பதிலும் இலக்கிய விமர்சனத்தின் பங்கு முக்கியமானதாகும்(தி.சு.நடராசன் 2016:7-9). இந்நிலையில் சிவசேகரம் புதுக்கவிதையின் எதிர்காலத் தேவையை உணர்ந்து சில தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளில் காணப்படும் புதுக்கவிதை இயல்புகளை எடுத்துக்காட்டுகின்றார். அந்தவகையில் ஈழத்தில் விமர்சனங்களினூடாக ஒரு புதுக்கவிதைக் கோட்பாட்டை முன்மொழிந்தவர் என்று கருதக்கூடியவர் சிவசேகரமே ஆவார். மரபுக் கவிதையிலிருந்து வளர்த்தெடுக்கப்படுவதாகப் புதுக்கவிதை அமைய வேண்டும் என்பதே அவரது கோட்பாட்டின் அடிப்படையாகும். 

உசாத்துணைகள்
நூல்கள்
1.    அரங்கராசு சு. 1991 தமிழ்ப் புதுக்கவிதை – ஒரு திறனாய்வு கோவை : மூன்றாம் உலகப் பதிப்பகம்
2.    சிவசேகரம் சி. 1995 விமர்சனங்கள் சென்னை: தேசிய கலை இலக்கியப் பேரவை
3.    சிவத்தம்பி கா. 2007 தமிழின் கவிதையியல் கொழும்பு – சென்னை : குமரன் புத்தக இல்லம்
4.    ……………...2010 ஈழத்தில் தமிழ் இலக்கியம் கொழும்பு – சென்னை : குமரன் புத்தக இல்லம்
5.    நடராசன் தி.சு.2016 திறானாய்வுக் கலை – கொள்கைகளும் அணுகுமுறைகளும் சென்னை : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
6.    பூரணச்சந்திரன் க. 2016 கவிதையியல் - வாசிப்பும் விமர்சனமும் ந்தியா : அடையாளம்
7.    முருகேசபாண்டியன் ந. 2016 அண்மைக்காலக் கவிதைப்போக்குகள் (வரலாறும் விமர்சனமும்) சென்னை : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
8.    ராஜமார்த்தாண்டன் 2003 புதுக்கவிதை வரலாறு சென்னை : யுனைடெட் ரைட்டர்ஸ்
9.    யோகராசா செ. 2007 ஈழத்து நவீன கவிதை கொழும்பு – சென்னை : குமரன் புத்தக இல்லம்
10.    வல்லிக்கண்ணன் 2004 புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் தஞ்சாவூர் : அகரம்

கட்டுரைகள்
1.    கைலாசபதி க. 1973 “தோணி வருகிறது”கைலாசபதி முன்னுரைகள் (2007) கொழும்பு – சென்னை : குமரன் புத்தக இல்லம் (பக். 51 – 62)
2.    ……………… 1975 “முட்கள்” கைலாசபதி முன்னுரைகள் (2007) கொழும்பு – சென்னை : குமரன் புத்தக இல்லம் (பக். 63 – 71)
3.    சண்முகம் சிவலிங்கம் 1970 “இன்றைய தமிழ்க் கவிதை பற்றிச் சில அவதானங்கள்” கவிஞன் இதழ்களின் முழுத்தொகுப்பு (2015) எம்.ஏ. நுஃமான் (தொ.ஆ.) சென்னை : மணற்கேணி பதிப்பகம் (பக். 168 - 183)
4.    சிவசேகரம் சி. 1980 “புதிய போத்தலில் சாக்கடை நீர்” “அலை” ஆனி – ஆவணி மாத இதழ் மு.பு~;பராஜன் அ.யேசுராசா(இணையாசிரியர்கள்) யாழ்ப்பாணம். (பக்.359-362)
5.    நதிரா ம. 2014 இலக்கியக் கோட்பாடுகளும் இலக்கிய விமர்சனக் கோட்பாடுகளும்” நெய்தல் (தொகுதி – 7 எண் - 1) (2014) ஆய்வுச் சஞ்சிகை இலங்கை : கலை பண்பாட்டுப் பீடம் கிழக்குப் பல்கலைக்கழகம் (பக். 52 – 77)
6.    நுஃமான் எம்.ஏ.1969 “பேச்சு மொழியும் கவிதையும்” கவிஞன் இதழ்களின் முழுத்தொகுப்பு (2015) எம்.ஏ. நுஃமான் (தொ.ஆ.) சென்னை : மணற்கேணி பதிப்பகம் (பக். 151 – 158)
7.    ……………. 2000 நேர்காணல் (நேர்கண்டவர் - தி. ஞானசேகரன்)ää ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகை – 03 (மார்ச் 2000) தி. ஞானசேகரன் (பி.ஆ.) கொழும்பு. (பக். 26-28). 
8.    பொன்னம்பலம் மு. 1976 “இனிவரும் இலக்கியம்” “அலை” ஆடி-ஆவணி மாத இதழ் ஐ.சண்முகம் மு.பு~;பராஜன்  இ. ஜீவகாருண்யன் அ.யேசுராசா(ஆசிரியர் குழு) யாழ்ப்பாணம். (பக்.100-106)
9.    யோகராசா செ. 2019 “ஈழத்துப் புதுக்கவிதை முன்னோடி சுவாமி விபுலாநந்தர்” ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகை – 224 (ஜனவரி 2019) தி. ஞானசேகரன் (பி.ஆ.) கொழும்பு : (பக். 17 – 19)