ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

இயந்திரம் நாவலில் - ஆட்சி இயந்திரம்

முனைவர்.ரெ.சுகிதா ராணி, உதவிப்பேராசிரியர், தமிழியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி 31 Jan 2024 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்
 படைப்பிலக்கியத்துக்கு நிகராக மதிக்கப்படும் மொழிபெயர்ப்பு இலக்கியமானது உலகில் வழங்கிவரும் பல்வேறு மொழிகளின் பிரதிகளினூடாக பலதரப்பட்ட மக்களின் கலைரீதியான உணர்வு வெளிப்பாடு கலாச்சாரம் பண்பாடு வாழ்வியல் முறை அரசாட்சி போன்ற யாவற்றையும் எல்லைகள் தாண்டி கொண்டு சேர்ப்பது. இத்தகைய வகையில் தமிழிலக்கிய சூழலில் மொழிபெயர்ப்பு இலக்கியங்களும் தனக்கென ஓர் தனித்த இடத்தைக் கொண்டுள்ளன. புகழ்பெற்ற மலையாள நாவலின் தமிழ் மொழியாக்கமே ‘இயந்திரம்’. கேரள மக்கள் வாழ்க்கையின் ஓர் அத்தியாயத்தைச் சித்தரித்துள்ள இந்நாவலின் வழியாக ஆட்சி இயந்திரத்தை முன்வைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

திறவுச்சொற்கள்  
    அதிகார வர்க்கம், ஆட்சி இயந்திரம், நிருவாகம்

முன்னுரை
    இயந்திரம் நாவலின் ஆசிரியர் மலயாற்றூர் ராமகிருஷ்ணன். கே.வி.ராமகிருஷ்ண அய்யர் என அறியப்பட்ட இவர் படைப்பாளி ஓவியர் சமூக நலத்தொண்டர் என உருவான போது மலயாற்றூர் ராமகிருஷ்ணன் என்னும் பெயரை ஏற்றார். வேருகள் யட்சி அஞ்சு சென்டு துவந்த யுத்தம் ஒடுக்கம்-தடுக்கம் மிருதுல் பிரபு வேழாம்பல் ரக்த சந்தனம் மிருத்தி கவாடம் போன்ற பல புதினங்களையும் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய வேருகள் புதினம் கேரள சாகித்ய அகாதமியின் பரிசைப் பெற்றது. இவரது படைப்புகள் இந்தி தமிழ் கன்னடம் ஆங்கிலம் போன்ற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இயந்திரம் புதினமானது வயலார் பரிசு மற்றும் கேரள இலக்கியப் படைப்பாளி பரிசைப் பெற்றுள்ளது. இத்தகைய சிறந்த படைப்பான இயந்திரம் நாவலில் கட்டமைக்கப்பட்ட ஆட்சி இயந்திரத்தை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆட்சி இயந்திரம்
அரசு என்கிற நிறுவனம் ஆட்சி என்னும் இயந்திரத்தால் தான் இயங்குகிறது. ஆட்சி இயந்திரம் திறமையாக செயல்படாமல் இருந்தால் அரசானது செயலிழந்து விடும். ஆட்சி இயந்திரமானது அதிகார வர்க்கத்தினரை மையமாகக் கொண்டே செயல்படுகிறது. அத்தகைய அதிகார வர்க்கத்தினரைத் துணிச்சலுடன் செயல்பட வைக்கும் அரசே நிலையான ஆட்சியைப் பெறும். அதிகார வர்க்கத்தினரும் தமது கடமையைச் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.  அதிகார வர்க்கத்தினர் ஆசை அலைகளில் சிக்கி தம் கடமையிலிருந்து தவறும் போது ஆட்சி இயந்திரமும் செயலிழந்து விடும்.
அரசு அரசியல்
மக்கள் பலர் ஒன்று கூடிய அமைப்பிற்கு சமுதாயம் என்று பெயர். அச்சமுதாயத்தை ஆளும் அல்லது மக்களைக் காக்கும் அமைப்பு அரசாங்கம் என அழைக்கப்பட்டது.  அரசு அரசியல் அரசாங்கம் மூன்றும் ஒன்றுடன் ஒன்று நெருங்கியத் தொடர்பு கொண்டது. அரசு சமூகத்தைப் போலவே வளர்ந்தும் மாறியும் வரும் ஒரு நிறுவனமாகும். அரசு எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதற்கு இறுதியான முடிவு எதுவும் இதுவரையும் அறியமுடியவில்லை எனினும் பல அறிஞர்கள் அரசு தோற்றம் பற்றிப் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர். “சமுதாயம் வர்க்கங்களாகப் பிளவுபட்ட போது தான் அதாவது மற்ற குழுவின் உழைப்பைத் தொடர்ந்து அபகரித்து வருகிற சுரண்டுகிற ஒரு குழுவைக் கொண்ட மக்கள் குழுக்களாகச் சமுதாயம் பிளவுண்ட போது தான் அரசு தோன்றியது” (பொகுலாவ்ஸ்கி பக்.387) மக்கள் நலனுக்காக தோற்றுவிக்கப்பட்ட அரசானது இன்று ஆட்சி அதிகாரத் திரைமறைவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 
ஆதிக்க வர்க்கத்தினரின் சுரண்டலுக்கு சில நேரங்களில் அரசும் துணை நிற்பதைக் காண முடிகிறது. அரசியலில் பல்வேறு கொள்கைகளின் அடிப்படையில் கட்சிகள் உருக்கொள்கின்றன. இத்தகைய கட்சிகள் சமுதாய நலனில் அக்கறைக் காட்டுவதை விட தம் மக்கள் நலனிலேயே அக்கறைக் காட்டுகின்றன. மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்கு எடுத்துச்செல்லவும் மக்களின் குறைகளை அரசுக்கு தெரிவிக்கவும் நோக்கமாகக் கொண்டு அரசியல் கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டன. “அரசியல் கட்சி சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம் அதற்கென்று மக்கள் நலத்திட்டங்களைக் கொண்டிருக்கும். அது அரசின் அதிகாரத்தைப் பெற்று அரசியல் நெறிப்படி அமைக்கப்பட்ட அமைப்பே அரசியல் கட்சியாகும்” (சுவாமிநாதன்ää கோமதிநாயகம் பக்.147) ஆனால் இன்று அரசியல் கட்சிகளின் நோக்கமே திசைமாறி செல்வதைச் சமூகத்தில் கண்கூடாகக் காணமுடியும்.
“சமுதாய அமைப்பிலும் நடைமுறையிலும் புறநிலையில் மேலாண்மைக் கொண்டிருப்பது அரசியலேயாகும். ஆட்சி என்னும் இயந்திரமே அரசியலால் தான் இயக்கப்படுகிறது. ஆட்சியும் அதனை இயக்கும் அரசியலும் இல்லையானால் சமுதாயம் என்பது இயக்கமில்லா சடப்பொருளாகக் கிடக்கும்” (ப.மகாலிங்கம் பக்.201) என்னும் கூற்றுக்கிணங்க மக்கள் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அரசியல் பின்னிப்பிணைந்துக் காணப்படுகிறது.
நிருவாகத்தை மொத்தமாக நிருவகிப்பது என்பது கடினமான செயல் ஆகும். எனவே அராசாங்க நிருவாகத்திற்கு வசதியாக மாவட்ட அடிப்படையில் நிருவாகம் பிரிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மையம் தலைமைச் செயலகத்தில் செயல்பட்டாலும் மாவட்ட நிருவாகத்தின் பொறுப்பு மாவட்ட ஆட்சி தலைவரிடமே உள்ளது. மாவட்ட நிருவாகத்தைப் பொறுத்தமட்டில் ஆட்சி மையம் என்பது மாவட்ட ஆட்சியாளரே ஆவார்.
அரசு அதிகாரிகள்
இளம் அதிகாரிகள் பயிற்சியில் ஈடுபடும் போதே முதிர்ந்த அதிகார வர்க்கத்தினரால் அவர்களின் அனுபவ அறிவின் வாயிலாக நிரந்தரமான ஆட்சிப்பணியின் முக்கியத்துவம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. கொள்கை வகுப்பதில் உதவிச் செய்து தேசியநலனைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டிய பண்புகள் அரசு அதிகாரியின் பண்புகளாகும். “இளம் அதிகாரிகள் ஆட்சி இயந்திரத்தில் செயல்பட தொடங்கும் போது தங்கள் திறமையைச் சிறப்பாக பயன்படுத்துகின்றனர்” (இந்தியா டுடே பக்.18). அரசுப் பணியாளர் அறத்தின் காவலர் என்னும் உணர்வு இவர்களுக்குள் எப்போதுமே காணப்படுகிறது.
பாலச்சந்திரன் குரியன் மைதிலி போன்றவர்கள் ஒரே காலத்தில் பயிற்சியில் ஈடுபட்டவர்கள். மூன்று பேருமே பயிற்சியாளர்களாக கேரளத்திற்கு நியமிக்கப்பட்டவர்கள். தேயிலைத் தோட்ட முதலாளியான பிலிப்போஸின் மகன் குரியன். நல்ல பின்புலமுள்ள குரியன் தானும் ஆட்சி இயந்திரத்தில் ஓர் சக்கரமாக இயங்க வேண்டும் என்ற ஆவலில் ஆட்சிப்பணி தேர்வு எழுதி தேறியவன். எந்தவித பின்புலமும் இல்லாத பாலச்சந்திரன் துடிப்பான இளமையான நேர்மையான அதிகாரி. கோழிக்கோட்டில் பயிற்சி முடித்து ஒற்றப்பாலம் சப் கலெக்டராக முதலில் நியமனம் பெற்றவன். பயிற்சிக் காலத்திலேயே வேலையைப் பொறுப்பாகச் செய்யக்கூடிய திறமையான அதிகாரி எனப் பெயர்பெற்றதை அறிய முடிகிறது. 
இளமையின் மிடுக்கும் எதையும் செய்து முடிப்பதில் திறமையும் கொண்ட பாலச்சந்திரன் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை நேர்மையாக செய்து முடிப்பதில் வல்லவனாகவே காணப்பட்டான். ஆட்சி இயந்திரத்தில் இளமையும்ää திறமையும் வாய்ந்த அதிகாரிகள் பங்கு பெறும்போது இயந்திரம் திறமையாகச் செயல்படும் என்பது இதிலிருந்துப் புலனாகிறது. இவ்வாறு அதிகார வர்க்கத்தினரைத் துணிச்சலுடன் செயல்பட வைக்கும் அரசானது சில சமயங்களில் அவர்களின் அதிகாரத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்கிறது. ஆளுங்கட்சியினர் நிரந்தரமில்லாதவர்கள் தான் ஆனால் ஆட்சியில் இருக்கும் போது அவர்களுக்கு கீழ் தான் அதிகார வர்க்கத்தினரும் அடி பணிய வேண்டியிருக்கிறது என்பதை உணர்த்தியுள்ளார்.
நியாய விலைக் கடைகளைப் பரிசோதனைச் செய்து முறைகேடுகளுக்குத் தண்டனை விதித்த சம்பவத்திலும் அரிசன அடக்குமுறைக்கு எதிராக அதிகாரியைப் பணி இடைநீக்கம் செய்த சம்பவத்திலும் சப் கலெக்டர் பாலச்சந்திரனின் அதிகாரம் முடக்கப்பட்டு பணி இடைநீக்கத்தை ரத்து செய்கிறார் கலெக்டர். இந்த இரு சம்பவத்திலும் சப் கலெக்டரால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஹோம் மினிஸ்டரின் சொந்த சித்தப்பனும் பங்காளி வகையில் ஒரு சித்தப்பனும் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இதன்மூலம் அரசியல் செல்வாக்கும் சில அதிகார வர்க்கத்தினரின் துணையும் இருந்தால் தவறு செய்பவர்கள் எளிதில் தண்டனையின்றி தப்பிக் கொள்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார் ஆசிரியர். 
அனங்கன்பாறை பிரதேசத்தில் அத்துமீறி நிலத்தைக் கையகப்படுத்தியவர்களை வெளியேற்றுவதற்கு வருவாய் வாரியம் கலெக்டர் சேகரப்பிள்ளையை அறிவுறுத்தியிருந்தது. ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க முடியவில்லை. காரணம் அனங்கன்பாறை வருவாய்துறை அமைச்சரின் தொகுதியில் உள்ளது. அமைச்சரின் வாய்மொழி உத்தரவு கலெக்டரின் அதிகாரத்தை முடக்கிவிட்டது. “அரசியல் தலையீடு மற்றும் வாய்மொழி உத்தரவுகள் அதிகார வர்க்கத்தினரின் செயல்பாட்டைத் தரம் தாழ்த்தியுள்ளது” (இந்தியா டுடே பக்.15). அமைச்சர்களின் உத்தரவுகளுக்கு அடிபணியாத அதிகார வர்கத்தினரைப் பணிஇடமாற்றம் செய்யவும் அமைச்சர்கள் தயங்கவில்லை. அரசு என்பது மாறினாலும் ஆட்சி என்பது மாறுவதில்லை. “தேர்தல் மூலம் அரசு மாறினாலும் இந்த வர்க்க அடிப்படை மாறுவதில்லை” (எல்.ஜி.கீதானந்தம் பக்.113) எனக் குறிப்பிட்டுள்ளதை ஈண்டு காணலாம்.
ஆளுங்கட்சியினரின் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அரசு இயந்திரத்தில் மந்த நிலையே ஏற்படும். அமைச்சர் பாஸ்கரன் நாயர் அனங்கன் பாறையிலுள்ள மக்களை வெளியேற்றுவதில் உள்ள பிரச்சனையில் முதலமைச்சருக்கு எதிராகச் செயல்பட்டார். இதனால் அரசியல்வானம் சூடானது. சட்டசபை ஸ்தம்பித்தது. அமைச்சர் பாஸ்கரன் நாயர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இரண்டு கட்சியிலும் பிளவும் கட்சி மாறுதல்களும் ஏற்படத் தொடங்கின. முதலமைச்சர் ஆளுநரைச் சந்தித்து ராஜினாமாவைச் சமர்ப்பித்தார். இத்தகைய குழப்பங்களால் நிர்வாகம் ஸ்தம்பித்தது. சோம்பலாகவும் மந்தமாகவும் செயல்பட்டுக் கொண்டு இருந்த நிர்வாக இயந்திரம் ஜனாதிபதி ஆட்சியால் முடுக்கிவிடப்பட்டது. நிர்வாகத்தை மாற்றி அமைப்பது என்பது நிறுவனங்களையும் அமைப்புகளையும் மறுசீரமைப்பதே ஆகும். ஆலோசகர் பானர்ஜி ஐ.சி.எஸ் நிர்வாகத்தின் எல்லா கயிறுகளுக்கும் முறுக்கை ஏற்படுத்தினார்.
அனைத்துத் துறைகளும் முடுக்கி விடப்பட்டது. முடிக்கப்படாத வட்டார வளர்ச்சிப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. முடிவடையாத பணிகள் முடிவடையும் தேதியைப் பானர்ஜி டைரியில் குறித்துக்கொண்டார். இவ்வாறு அனைத்து அதிகாரிகளும் தங்கள் கடமைகளை உணர்ந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அரசு நிர்வாகம் என்பதே ஒரு பள்ளத்தில் இருந்து இன்னொரு பள்ளத்திற்கு சென்று கொண்டிருப்பது. அத்தகைய நிர்வாகத்தை உயர்மட்ட அதிகாரிகள் முடுக்கி விடும் போது இயந்திரம் முழுவதும் செயல்படத் தொடங்கும். இன்றைய ஆட்சி இயந்திரத்திலும் சில அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை உரிய நேரத்தில் செயல்படுத்தும் போது அவர்கள் விழித்துக் கொள்ள வாய்ப்புண்டு என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
பதவி ஆசை
மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஆசையென்பது இயல்பாக அமைந்தது. பதவி ஆசை பண ஆசை பொருளாசை நில ஆசை என ஒவ்வொருவரின் விருப்பங்களும் தன் நிலைக்கேற்ப மாறுபடுகின்றன. அதிகார வர்க்கத்தினர் தொடங்கி பாமர மக்கள் வரைக்கும் ஆசைக்கு அடிமையாகாதவர்கள் ஒரு சிலரே உள்ளனர். ஐ.பி.எஸ் பயிற்சியாளனாக இருந்த ஜெயசங்கர் பணத்தாசையும் பதவியாசையும் உடையவனாக இருந்ததை நாவல் உணர்த்துகிறது. காவல்துறை சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் முக்கியப் பணியாற்றி வருகிறது. சட்டம் ஒழுங்கு நிருவாகம் என்பது எளிதான செயலன்று. இத்தகைய சட்டத்தை ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையினரே இன்று ஊழலில் ஈடுபடுவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. காவல்துறையில் உயர் பதவியை அடைய ஆசைப்படும் அதிகாரிகள் அரசியல் அதிகாரத்துக்குத் துணை நின்று ஊழலில் ஈடுபடுகின்றனர். ஐ.பி.எஸ் பயிற்சியாளராக இருந்த ஜெயசங்கர் இன்று ஏ.ஐ.ஜி-யாக இருக்கிறார் எனில் அதன் பின்னணியும் பலவிதமாக இருந்தது. 
அமைச்சர் பிரசன்னன் பிலிப்போஸ் முதலாளி கோபால கிருஷ்ண பணிக்கர் போன்ற பலரின் உதவியுடன் தான் ஜெயசங்கர் இன்று காவல்துறையின் உயர் பதவியில் வீற்றிருக்கிறான். இதிலிருந்து பதவி உயர்வுக்கு பலரின் பரிந்துரைகள் மறைமுகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டன என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. ஐ.ஏ.எஸ் அதிகாரியான குரியன் இளம் வயதிலேயே ஆட்சிபணியில் சிறப்பான ஒரு இடத்தை அடைந்ததும் அவனது பதவி ஆசையே. இளம் அதிகார வர்க்கத்தினர் ஆட்சி பணியில் ஈடுபடும் போது நேர்மறையான அதிகாரிகளாக வளர வேண்டும் என்ற கொள்கை முடிவோடு தான் காலடி எடுத்து வைக்கின்றனர். ஆனால் பதவி ஆசை என்னும் அலைகளில் சிக்கி பதவி உயர்வு என்னும் அக்கரையேற விளையும் போது தங்கள் கடமையிலிருந்து தவறுகின்றனர். 
நேர்மையான பண்பான அதிகாரி எனப் பயிற்சிக் காலத்திலேயே பெயர் வாங்கிய பாலச்சந்திரன் தனது மூத்த அதிகாரியான ஜேம்ஸை முன் உதாரணமாகக் கொண்டு செயல்பட்டான். தான் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த உயர் அதிகாரியான ஜேம்ஸ்-க்கு எதிராகக் குற்றப் பத்திரிக்கைத் தாக்கல் செய்யுமளவிற்கு பதவி ஆசை அவன் கண்ணை மறைத்தது. பதவி ஆசைக்கு முன்னால் அன்பு பாசம் மதிப்பு மரியாதை அனைத்துமே தகர்ந்து போவதைப் பாலசந்திரன் ஐ.ஏ.எஸ் அதிகாரி மூலம் எடுத்துக்காட்டியுள்ளார்.

அரசாங்க நிருவாகத்தில் ஊழல் முறைகேடுகள் பிரிக்க முடியாத அளவுக்கு கலந்துவிட்டதை ஆசிரியர் நாவல் வழி சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சர்களுக்கும் ஆட்சி பணியாளர்களுக்கும் இடையேயுள்ள உறவு சுமூகமாக இருக்க வேண்டும். இல்லையெனில் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது. “ஆட்சி மாறும்போது காட்சிகளும் மாறும் என்பது அரசியல் கலாச்சாரம்” (இந்தியா டுடே ப.18) அமைச்சர்கள் தங்களுக்கு அடிபணியாத செயலர்களைப் பணியிடமாற்றம் செய்துவிட்டு தங்களுக்கு சாதகமானவர்களை நியமித்து அவர்களின் அதிகாரத்தைப் பகடைக் காயாக்கி பயன்படுத்துகின்றனர்.
மனித நேயம்
ஊழல் அரசியல் ஒருபுறமிருக்க அரசியலில் சில மனிதநேயம் மிக்க நல்லுள்ளம் கொண்ட தலைவர்களும் உள்ளனர் என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார் நாவலாசிரியர். “அரசியல் என்பது அதிகாரத்தை ருசிப்பதற்கான வழியல்ல. மக்கள் நலனை உயர்த்துவதே அரசியல் பிரவேசத்தின் நோக்கமாய் இருக்க வேண்டும்” (சி.எஸ்.தேவநாதன் ப.156-157) என்னும் கூற்றுக்கிணங்க அரசியலில் ஈடுபடுபவர்கள் காணப்பட வேண்டும். சமூக மாற்றத்திற்குப் போராடுபவனாகவும் பாட்டாளி மற்றும் ஒடுக்கப்பட்ட வர்க்க நலனுக்காக பாடுபடுபவனாகவும் பரமேஸ்வரன் என்னும் இளம் தலைவனைக் காண முடிகிறது. ஆதிவாசி மக்களின் உணர்வுகளை அரசுக்கு எடுத்துக் கூறுவதும் அவர்களின் நில உரிமைக்காக போராடுவதுமாகவே பரமேஸ்வரனைச் சித்தரித்துள்ளார்.
முதலாளி வர்க்கத்தினர் அதிகார வர்க்கத்தினரைத் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு ஏழை வர்க்கத்தினரைச் சுரண்டுகின்றனர். அட்டப்பாடி ஆதிவாசிகளின் கிராமம். ஒரு நேரத்துக்கு ஆகாரமோ ஒரு குடுவைத் தேனோ கிடைத்தால் அன்றாட வாழ்வைக் கழிக்கும் ஆதிவாசிகள் தமது அன்றாட தேவையைப் பூர்த்திச் செய்ய இயலாதவர்களாக இன்று காணப்படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டிய நாவலாசிரியர் காரணம் முதலாளி வர்க்கத்தினர் அறியாமையில் வாழும் ஆதிவாசிகளின் நிலத்தைச் சுரண்டுவதே என்பதையும் பதிவு செய்துள்ளார். ஆதிவாசிகளை வஞ்சித்து அவர்களின் நிலத்தைக் கைப்பற்றுபவர்களைத் தடுக்கவோ இழந்த பூமியை மீட்டுக் கொடுக்கவோ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. “அரசு என்பது உடைமை வர்க்கத்தினரின் ஸ்தாபனம். உடைமையற்ற வர்க்கத்தினரிடமிருந்து அதைப் பாதுகாக்கவே இது இருக்கிறது”(எங்கெல்ஸ் ப.267) என்னும் கூற்று மேற்சுட்டிய கருத்தை நிரூபிப்பதாக அமைந்துள்ளது.
மார்க்சிய சிந்தனைவாதியான பரமேஸ்வரன் முதலாளி வர்க்கத்தினரால் சுரண்டப்படும் ஆதிவாசிகளின் நிலத்தைப் பாதுகாக்க அவர்களை ஒன்று கூட்டி போராட்டத்தில் ஈடுபடுகிறான். போராட்டம் எந்தவொரு பிரச்சனைக்கும் எளிதான தீர்வைத் தரும் என மக்கள் நம்புகின்றனர். எனவே தான் இன்றையச் சமுதாயத்திலும் எந்தவொரு பிரச்சனையையும் முன்வைத்து ஆங்காங்கே மக்கள் போராட்டம் நடத்துவதைக் காண முடிகிறது. 
நேர்மையான அதிகாரி
“மனிதனின் சிந்தனை எப்பொழுதும் உண்மையானதாகவும் உயர்வானதாகவும் இருக்க வேண்டும். அந்த சிந்தனைத்தான் அவனை உயர்வாகக் காட்டுகிறது” (எல்.கே.அக்னிபுத்திரன் ப.190) என்பதற்கிணங்க ஆட்சி இயந்திரத்தில் செயல்படும் ஒவ்வொரு அதிகார வர்க்கத்தினரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்ற நேர்மையான அதிகாரி ஜேம்ஸ். தொழில் துறையையும் தொழிலாளர் துறையையும் ஒன்றாகப் பெற்றுள்ள அமைச்சர் பிரசன்னன் தனக்கு வேண்டியவர்களுக்காக புதிய டயர் தொழிற்சாலைத் தொடங்குவதற்கான கோப்பில் சாதகமான முடிவைப் பதிவுச் செய்யுமாறு தொழில் துறைச் செயலரான ஜேம்ஸை வற்புறுத்துகிறார். ஆனால் ஜேம்ஸ் அவரின் சிபாரிசை ஏற்றுக் கொள்ளாமல் தனது தீர்க்கமான அபிப்பிராயத்தைப் பதிவு செய்கிறார். அமைச்சரின் வெறுப்பைச் சம்பாதித்த ஜேம்ஸ் வருவாய் உறுப்பினராக பணிமாற்றம் செய்யப்படுகிறார். இதன் மூலம் அதிகார வர்க்கத்தினரின் பணியிடத்தை நிர்ணயிப்பது அரசியல் அதிகாரத்தினரே என்பது புலனாகிறது. 
அமைச்சர் பிரசன்னனைத் தேர்தலில் போட்டியிட செய்து அமைச்சராக்கிய பிலிப்போஸ் முதலாளியின் மகனான குரியனையும் பிரசன்னனையும் இணைத்து ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரிக்க மேலிடம் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜேம்ஸை நியமித்தது. ஜேம்ஸ் குற்றச்சாட்டை நிரூபிப்பார் என எண்ணி ஜேம்ஸை பழிவாங்க நினைத்தவர்கள் அவரின் மகன் ஆன்டனியை அம்பாக பயன்படுத்துகின்றனர். அவனது மோசமான நடத்தையைப் பத்திரிகைகள் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகனது கோவளத்து லீலைகள் என அச்சடித்து இருந்தன. விசாரணை அறிக்கையைத் தட்டச்சு செய்த மறுநாள் ஆன்டனி தற்கொலைச் செய்து கொண்டான். தகர்ந்து போன ஜேம்ஸ் மறுநாள் தலைமைச் செயலரிடம் விசாரணை அறிக்கையையும் தனது ராஜினாமா கடிதத்தையும் ஒப்படைத்தார். 
மறுநாள் காலையில் முதலமைச்சர் ஜேம்ஸை தொலைபேசியில் அழைத்தார். உங்களைப் போன்ற நேர்மையான அதிகாரிகள் தான் இயந்திரத்தில் செயல்பட வேண்டும் எனக் கூறி ராஜினாமா கடிதத்தைக் கிழித்துப் போட்டார். யாரையும் புண்படுத்தாத அறிக்கையை எழுதியதால் தான் இந்த முடிவு என்பதை உணர்ந்த ஜேம்ஸ் பதவியைத் தூக்கி எறிந்து கொண்டு சென்றார். 
முடிவுரை
இன்றைய காலக்கட்டத்திலும் ஆட்சிபணியில் ஒரு துறையில் இத்தனை ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை ஆட்சிப் பணியாளர்களுக்கு இல்லை. எனவே திறமையான அதிகாரிகளாக இருந்தாலும் ஆட்சி மாறும் போது அவர்களின் துறையும் மாற்றப்படுவதைக் காணலாம். ஊழலுக்குத் துணைப்போகாத நேர்மையான அதிகாரிகள் பலமுறை இடமாற்றம் துறைமாற்றம் பெறுகின்றனர். அரசியல் அதிகாரத்துக்கு துணைப்போகும் அதிகார வர்க்கத்தினர் உயர்மட்ட பதவியை எட்டிப் பிடிப்பதால் இன்று நேர்மையான அதிகாரிகள் குறைந்து கொண்டு போவது சமுதாயத்தில் காணப்படும் எதார்த்தமாகும். முடக்கப்பட்ட அதிகார மறைவில் அரசியல் அதிகாரம் செயல்படுவதால் ஆட்சி இயந்திரத்தில் நேர்மையான அதிகாரிகள் ஒரே நிலையில் இயங்க முடிவதில்லை.
பயன்பட்ட நூல்கள்
1.    அக்னிபுத்திரன்.எல்.கே வர்க்கப்போராட்டமும் மானுடவியல் கோட்பாடும் மணிவாசகர் பதிப்பகம் சென்னை மே 2009.
2.    எங்கெல்ஸ் குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் முன்னேற்றப் பதிப்பகம் மாஸ்கோ 1978.
3.    கீதானந்தன்.எல்.ஜி மார்க்ஸீய சிந்தனை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை டிசம்பர் 2006.
4.    சுவாமி நாதன் கோமதிநாயகம் அரசியல் கோட்பாடுகள் தீபா பதிப்பகம் சென்னை டிசம்பர் 1998.
5.    தேவநாதன்.சி.எஸ் உலகப் புகழ்பெற்ற தத்துவ மேதைகள் தனல~;மி பதிப்பகம் சென்னை டிசம்பர் 2003.
6.    பொகுலாவ்ஸ்கி இயக்கவியல் பொருண்முதல் வாதமும் வரலாற்றுப் பொருண்முதல் வாதமும் முன்னேற்றப் பதிப்பகம் மாஸ்கோ 1978.
7.    மகாலிங்கம்.ப திரு.வி.க-வின் சமுதாய நோக்கு செல்லம் பதிப்பகம் சென்னை டிசம்பர் 1998.
8.    மலயாற்றூர் ராமகிருஷ்ணன் இயந்திரம் நே~னல் புக் டிரஸ்ட் புதுதில்லி 2002.
இதழ்கள்
1.    இந்தியா டுடே ஜூலை 2014