ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

நாகம்மாள் புதினத்தில் புதினக்கூறுகள் (Novel elements in Nagammal novel)

ச. அன்புத்தங்கம், முனைவா் பட்ட ஆய்வாளா் (பகுதிநேரம்), தமிழ்த்துறை, கோபி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோபி செட்டிபாளையம் 638 453 | நெறியாளர்: முனைவர். மு கருப்புசாமி, உதவி பேராசிரியர்,  கோபிகலைஅறிவியல்கல்லூரி (தன்னாட்சி), கோபிசெட்டிபாளையம் - 638453, ஈரோடு மாவட்டம் 01 Feb 2024 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்

      புதினங்கள் மேற்கத்திய நாடுகளின் தொடர்பால் தமிழிலக்கியத் தளத்தில் கிளைத்தப் புத்திலக்கிய வகைமையாகும். புதினங்களின் பல்வேறு வகைமைகளுள் வட்டாரப் புதினங்கள் எனும் வகைமையை கொங்கு மண் எழுத்தாளரான ஆர். சண்முகசுந்தரம் உருவாக்கினார். நாகம்மாள் எனும் பெண் கதைமாந்தரின் வழி கொங்கு மண்ணுக்கான மனிதப் பிரதியை கதைக்களம் எங்கும் உலவும்படிச் செய்தார். கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் கணவனை இழந்த நாகம்மாள் கைக்குழந்தையுடன் உணர்வுக்கும் உரிமைக்கும் போராடித் தவிக்கிறாள். சமூகத்தின் விமர்சனங்களுக்கும் வீண்பழிகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறாள். கொங்கு வட்டாரத்தில் நாகம்மாள் போன்ற பல பெண்கள் அடுக்களைப் புகையில் மறைந்து கிடக்கும் காலத்தில் ஆர் சண்முகசுந்தரம் முதன்மைக் கதைமாந்தர் எனும் புதிய வெளிச்சத்தைக் கொடுத்து நாகம்மாளை கதை நகர்வின் புதிய அச்சாணியாக மாற்றுகிறார். நாகம்மாள் வட்டார இலக்கியத்தின் புதுமுகம். அதில் புதினங்களுக்கான கூறுகள் இயைந்துள்ளதா எனும் சிக்கலை முன்வைக்கும் வகையில், நாகம்மாள் புதினத்தில் புதினக்கூறுகள் எனும் இவ்வாய்வு அமைகின்றது.     

Research Summary

novel is a type of literature that has entered the Tamil literature platform in relation to the West countries. Among the various types of novels the category of local literature called by Kongu region writer R. Created by Shanmugasundaram. Through a female  named Nagammal, he made a human version of local Kongu  to roam everywhere in the story. Having lost her husband in a joint family life, Nagagammal fights for feelings and rights with her infant child. She is made to be responsible for society's criticisms and slanders. At a time when many women like Nagammal in Kongu wattaram are disappearing in the oven smoke, R. shanmugasundaram gives a new light to the main story and turns Nagammal into a new symbol of storytelling. New face of Nagammal local  literature. In order to present the question whether there are new elements in it, Nagammal novel new elements are proposed.

Key words: Konguwattaram, R. Shanmugasundaram, novel elements

திறவுச் சொற்கள்: கொங்கு வட்டாரம், ஆர். சண்முக சுந்தரம், புதினக்கூறுகள்

முன்னுரை

      கொங்கு மண்ணைக் கதைக் களமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாகம்மாள் புதினம் 1941 ஆம் ஆண்டு ஆர்.சண்முகசுந்தரத்தால் படைக்கப்பட்டது. மணிக்கொடி எழுத்தாளரான சண்முகசுந்தரம் வட்டார மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு முதல் வட்டார இலக்கியம் தோன்றுவதற்கு வித்திட்டார். குடியான வாழ்க்கையையே ஆதாரமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல்1 என, கு.பா.ரா நாகம்மாள் புதினத்துக்குப் புகழாரம் சூட்டுகின்றார்.

      1941 இல் வெளிவந்த இந்நாவலை, நான் சிறிய இதிகாசமாகவே (MINOR CLASSIC) கருதுகிறேன். கடந்த கால நூற்றாண்டுக் காலத்தியத் தமிழ் நாவல்களில், ஒரு தலை சிறந்த படைப்பாக மதிக்கிறேன்2 எனும் தி.க.சங்கரன் அவர்களின் மதிப்பீடு குறிப்பிடத்தக்கது. பலரால் வியந்து பாராட்டப்பெற்ற நாகம்மாள் புதினத்தில் புலப்படும் புதினக்கூறுகளை ஆய்ந்தறிவது இவ்வாய்வின் நோக்கமாகும்.

      ஆர். சண்முகசுந்தரத்தின் படைப்புகளுள் நாகம்மாள் புதினத்தை ஆய்வு எல்லையாகக் கொண்டு இவ்வாய்வு அமைகின்றது. நாகம்மாள் புதினத்தில், கொங்கு வட்டார இலக்கிய வகைமைக்கு வலிமை சேர்க்கும் வகையில் புதினக் கூறுகள் கையாளப்பட்டுள்ளன என்பதை நிறுவுவது இவ்வாய்வின் கருதுகோளாகும்.

புதினக் கூறுகள்

      ஒவ்வொரு புதினங்களில் சில தனித்தன்மைகள் காணப்படினும், அனைத்துப் புதினங்களிலும் காணலாகும். சில அடிப்படைக் கூறுகள் பொதுக்கூறுகளாக அறியப்படுகின்றன. அதன்வழி கதைச் சுருக்கம், தலைப்புப் பொருத்தம், கதை வடிவம், கதைக்கரு, கதைத் தொடக்கம், கதைப்பின்னல், கதைமாந்தர்கள், உத்திகள் மற்றும் கதை முடிவு ஆகிய கூறுகளின் அடிப்படையில் நாகம்மாள் புதினத்தின் தன்மை ஆராயப்படுகின்றது.

1. கதைச் சுருக்கம்

      கொங்கு நாட்டின் சிவியார் பாளையத்தில் நாகம்மாளின் கணவனின் தம்பி சின்னப்பனின் மனைவி ராமாயி நாகம்மாளின் மகள் முத்தாயா உள்ளிட்டோர் வேளாண் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். பத்தாண்டுகளுக்கு முன்பு ஊர்த்திருவிழாவில் நடந்த விபத்தில் நாகம்மாளின் கணவன் இறந்துவிட நாகம்மாள் சின்னப்பன் குடும்பத்துடன் இணைந்து கூட்டுக்குடும்பமாக வாழ்கிறாள். அண்மையில் நாகம்மாளின் மனத்திற்குள் தனது சொத்துக்கான உரிமை குறித்த சிந்தனைகளும் பாகப்பிரிவினை எண்ணமும் முலைவிட தொடங்கியிருந்தது.

ராமாயியின் அம்மா காளியம்மாள், சின்னப்பனுக்கு எதிரான ஊர்க்கட்சியினர், கெட்டியப்பன் உள்ளிட்டோரின் சூழ்ச்சிக்குள் நாகம்மாள் சிக்கியிருந்தாள். ஊர்க்கட்சியினர் கெட்டியப்பனைக் கருவியாகப் பயன்படுத்தி நாகம்மாளைப் பாகப்பிரிவினை கேட்டுத் தூண்டி விடுகின்றனர். தனக்கும் தன்  மகளுக்கும் பாதுகாப்பும் உரிமையும் இல்லாது போவதாக உணர்ந்த நாகம்மாள் தொடர்ந்து குடும்பத்திற்குள் தன் எதிர்ப்பைக் காட்டிவருகிறாள். இதன் விளைவாக சின்னப்பன் வேளாண் நிலத்தில் ஏற்றம் இறைக்க நாகம்மாள் தன் உரிமைக்காகச் சண்டையிடுகிறாள். நாகம்மாளுக்கு ஆதரவாக கெட்டியப்பன் செங்காளி உள்ளிட்டோர் வருகின்றனர். பேச்சுப்பூசலாகத் தொடர்ந்த பிரச்சனை கைகலப்பாக மாறுகிறது. ஆத்திரம் அடைந்த கெட்டியப்பன் சின்னப்பனின் தலையைக் கைத்தடியால் அடித்து விடுகிறான். சின்னப்பன் மண்ணில் விழுந்து உயிர் துறக்கிறான். ராமாயி, முத்தாயா சின்னப்பனின் பிணத்தின்மீது விழுந்து அழுகின்றனர். கதை இத்துடன் இரத்த வெள்ளத்தில் உறைந்து நிறைவுறுகிறது. கதைக்களம் கொங்கு நாட்டின் சிவியார்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

2. தலைப்புப் பொருத்தம்

      ஒரு படைப்புக்குத் தலைப்பு என்பது அப்படைப்புக்குள் நுழைய வாயிலாக அமைகின்றது. படைப்பின் தலைப்பிலேயே படைப்பாளரின் கலைத்திறனும், படைப்பாளுமையும் வெளிப்படுகிறது. இத்தகு வெளிப்பாடு அப்படைப்பை நுகரச் சொல்லி வாசகரைத் தூண்டுகிறது.

      தலைப்பு என்பது கதையின் பெயர். சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பதில்தான் கதாசிரியனின் தனித்திறமை அடங்கியிருக்கிறது3 படைப்பின் தலைப்பு சுருக்கமாகவும், பொருட் செறிவாகவும் கவர்ச்சிகரமானதாகவும் இருத்தல் வேண்டும். மேலும் அப்படைப்பின் நோக்கு, போக்கு, இயல்பு, உள்ளீடு போன்றவற்றைச் சுருக்கமாகச் சொல்வதாக இருக்க வேண்டும். நாகம்மாள் புதினத்தின் தலைப்பு இத்தன்மையுடையதாகும்.

      நாகம்மான் புதினத்தின் முதன்மைக் கதைமாந்தர் நாகம்மாள். நாவலின் தொடக்கம் முதல் நிறைவு வரை நாகம்மாள் பயணிக்கிறாள். நாவலின் தொடக்கம் நாகம்மாளின் அறிமுகமாகவும், முடிவு நாகம்மாளுக்காக நிகழ்த்தப்பட்டதாகவும் அமைகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு முதன்மைக் கதைமாந்தரின் பெயரால் அமைக்கப்பட்டத் தலைப்பு பொருத்தமுடையதாக அமைகின்றது.

3. கதை வடிவம்

      ஒரு படைப்பின்; வடிவம் அக மற்றும் புற வடிவங்களைக் கொண்டுள்ளது. அகவடிவம் புதினத்தின் பொருண்மையாக அமையும். ஆனால், புறவடிவம் கதையின் அமைப்பு மற்றும் நீட்சியை வெளிப்படுத்தும். பக்கங்கள், பகுதிப் பகுப்புகள் ஆகும்.

       ஒரு படைப்பின் புறவடிவமே அதனைச் சிறுகதையா அல்லது நெடுங்கதையா என்பதைத் தீர்மானிக்கும். புதினத்தின் புறவடிவத்தை உணர்தல்வழி, அதன் கனப்பரிமாணம் புலப்படும்.

      சிறுகதையைப் படிப்பது வீட்டிற்குள் அமர்ந்த வண்ணம் ஜன்னல் வழியே வெளியுலகை எட்டிப் பார்ப்பது போன்றது. நாவலைப் படிக்கும் அனுபவம் வேறானது. ஒரு கிராமத்திற்குச் சென்று அங்கு நடக்கும் தேர்த்திருவிழாவைச் சுற்றிக் காண்பது போல், நாவலில் பல்வேறு அனுபவங்களையும் உணர்கிறோம். நாவலில் அதன் எல்லை பரந்துபட்டிருப்பதால் அது சிறுகதையைவிடப் பன்மடங்கு நீண்ட வடிவத்தைப் பெற்றுவிடுகின்றது.4 எனும் கருத்தாக்கம் புதினத்தில் நெடுமையின் தேவையை உணர்த்துகின்றது. இத்தகு நெடுமைப் பண்பு அகவடிவில், மனித வாழ்வின் நீள அகலத்தையும் கனபரிமாணத்தையும் விளக்கத் துணை நிற்கிறது. புதினத்தின் கதைப்போக்கு நெடுமைப்பண்பால் பன்முகப் பரிமாணத்தை அடைகின்றது. புதினங்களின் அகவடிவம் எவ்வளவு இன்றியமையாததோ அதே அளவு புறவடிவம் இன்றியமையாதது. ஒரு புதினத்தின் அகவடிவம் அகச்சுவர்களெனில், புறவடிவம் வெளிச்சுவர் போன்றது. கதையின் முறைமை மற்றும் வளர்ச்சிப்போக்கை, வடிவம் எனும் அமைப்பாக்கம் செம்மைப்படுத்துகின்றது.

அக வடிவம்

      புதினத்தின் அகவடிவம் கதைப்பொருண்மை சார்ந்ததாகும். கரு, கதைப்பின்னல், கதை வளர்ச்சி ஆகியவையே அகவடிவமாக அமைகின்றன. நாகம்மாள் புதினத்தின் கதைக்கரு நாகம்மாளின் சொத்துரிமைக்கான வேட்கை மற்றும் பாகப் பரிவினைப் போராட்டமாகவும் அமைகின்றது. நாகம்மாளைச் சுற்றி பின்னப்படும் செறிவானக் கதைப்பின்னலும், காளியம்மாள், கெட்டியப்பன், மணியக்காரர் போன்ற எதிர்நிலைக் கதைமாந்தர்களால் கதை வளர்ச்சி பெறுகின்றது.

புற வடிவம்

      ஒரு புதினத்தின் பக்கங்கள் மற்றும் பகுதிப் பாகுபாட்டின் வழி அதன் புறவடிவத்தை அறிய இயலும்.     ஒரு கதைக்குப் பக்கங்கள் அதன் குறு மற்றும் நெடு வடிவத்தைத் தீர்மானிப்பவையாக உள்ளன. பக்கங்களை எண்ணிக்கைக் குறிகளெனப் புறந்தள்ளிவிட முடியாது. அவை, கருத்துக்களின் இருக்கைகளாகும். படைப்பாளர்கள் சிலர் திட்டமிட்டு வெற்று உரைகளால் பக்கங்களை நீட்டித்தலுமுண்டு. ஆர்.சண்முகசுந்தரம் எந்தப் பக்கத்தையும் வீணாகப் புதினத்துள் நுழைக்க முயலாதவராக உள்ளார். நாகம்மாள் புதினம் 120 பக்கங்கள் கொண்ட செறிவான புதினமாக அமைகின்றது. புதினங்களின் பகுதிகள் 27 அத்யாயங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. சமகாலத்தியப் பிற புதினங்களோடு ஒப்பிடுகையில் நாகம்மாள் புதினம் குறும் புதினமாக அமைகின்றது.

4. கதைக்கரு

      ஒவ்வொரு படைப்புக்கும் படைப்புக்குரியக் கரு இன்றியமையாதது. குறிப்பாகக் கதைகள் ஏதேனும் ஒரு கருவை மையமிட்டுப் பிறக்கின்றன. துலங்கலுக்குக் காரணமாய் தூண்டல் அமைதல் போல கதைக்குக் காரணமாய் கரு அமைகின்றது. பாகப்பிரிவினையால் சிதைவுறும் நாகம்மாளின் குடும்பக் கதை புதினத்தின் கதைக்கருவாகும். மேலும், கூடாஉறவு கேட்டைத் தரும் எனும் கருத்தை மெய்ப்பிப்பதாக இப்புதினப் போக்கு அமைகின்றது.

5. கதைத் தொடக்கம்

      புதினத்தின் தொடக்கம் என்பதனைக் கதையின் தொடக்கமாக ஆர்.சண்முகசுந்தரம் அமைப்பதில்லை. ஒரு ஊரில்... எனக் கதையை முன்னிலிருந்து தொடங்கும் தன்மை ஆர். சண்முகசுந்தரத்திடம் இல்லை. கதையை இடையிலிருந்தோ, முடிவிலிருந்தோ தொடங்கி, வாசகர்களைத் தன்னிச்சையாகக் கதைக்குள் ஆட்படுத்தும் இயல்பு சண்முகசுந்தரத்திடம்; தென்படுகிறது. நாகம்மாள் புதினத்தின் தொடக்கம் வெங்கமேட்டு சந்தையிலிருந்து தொடங்குகின்றது.

      சந்தைக் கூட்டம் மெதுவாகக் கலைய ஆரம்பித்தது. சோளத் தட்டுகளைக் கடித்து அசைபோட்டுக் கொண்டிருந்த காளைகள், மணிகள் ஒலிக்க எழுந்து நின்று வண்டிபயில் பூட்டத் தயாராயின. சக்கரத்தடியில் கிடந்த சாக்குகளை வண்டியில் சிலர் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.5 என்பது இக்கதையின் தொடக்க வரிகளாகும். வெங்கமேட்டுச் சந்தையில் நாகம்மாள் அறிமுகப்படுத்தப்படுகிறாள். வெங்கமேட்டுச் சந்தை கொங்குநாட்டுச் சந்தையின் அடையாளமாக அமைகின்றது. 

6. கதைப் பின்னல்

      படைப்பாளரின் சிந்தனைச் சூழலுக்கேற்ப உருவாகிய கரு, கதையாக விரிவுபடுத்தப்பட்டுக் கதை நிகழ்வுகளாகப் பின்னப்படுகிறது. கதைப்பின்னல் என்பது நாடகத்தில் அல்லது கதையில் சம்பவங்கள் அமைக்கப்பட்டுள்ள முறைமை ஆகும். நெகிழ்ச்சிக் கதைப்பின்னல் (Loose Plot) செறிவுக் கதைப்பின்னல் (Carorganit Plot) எனக் கதைப்பின்னல் இரு வகைப்படுகின்றன. செறிவுப்பின்னல் காரண காரியத் தொடர்போடு அமைகின்றன. இதனைப் புதிய நிகழ்ச்சிகளே தீர்மானிக்கின்றன. சண்முகசுந்தரத்தின்; நாகம்மாள் புதினம் 'செறிவுக் கதைப்பின்னல் எனும் தன்மை கொண்டுள்ளது.

7. கதைமாந்தர்கள்

நாகம்மாள், சின்னப்பன் (நாகம்மாளின் கணவனின் தம்பி), ராமாயி (சின்னப்பனின் மனைவி), முத்தாயா (நாகம்மாளின் மகள்), காளியம்மாள் (ராமாயியின் அம்மா), கருப்ப கவுண்டர் (ஊர் மணியக்காரர்), கெட்டியப்பன் உள்ளிட்டக் கதைமாந்தர்கள் நாகம்மாள் புதினத்தை நகர்த்திச் செல்கின்றனர். நாகம்மாள் புதினத்தின் பதினேழு அத்தியாயங்களில் நடமாடும் முதன்மைக் கதைமாந்தராக அமைகிறாள். காளியம்மாள், கெட்டியப்பன், மணியக்காரர் ஆகியோர் புதினத்தின் திருப்புமுனைகளுக்குக் காரணமான எதிர்நிலைக் கதைமாந்தராக அமைகின்றனர். தொடக்கத்தில் இணக்கமான குடும்ப உறவு கொண்டிருந்த நாகம்மாள் சின்னப்பன், ராமாயி ஆகியோருக்குள் பாகப்பிரிவினை விரிசலை ஏற்படுத்தி பகைமையை வளர்க்கிறது. இங்ஙனம் நாகம்மாள் புதினத்தின் கதைமாந்தர்கள் எளியவர்களாக சமூகத்தின் பிரதிகளாக அமைக்கப்பட்டுள்ளனர்.

8. உத்திகள்

      ஒரு படைப்பினை உருவாக்குவதற்கு படைப்பாளன் மேற்கொள்ளும் புதிய அணுகுமுறை உத்தி எனப்படுகிறது. படைப்பாளர் நுட்பமான ஆளுமையை அறிந்துகொள்ள உத்தி துணைநிற்கின்றது. ஒரு கலைஞன் தன் துறையின் செவ்விய வெளியீட்டிற்குப் பயன்கொள்ளும் ஆற்றலும் ஆக்கமறையுமாக உத்தி விளக்கம் கொள்கிறது. பொதுவாகப் படைப்பாளன் தான் கூறவந்த செய்தியான உள்ளடக்கித்தினை வெளிப்படுத்தும் முறையே உத்தி6 என வரையறுக்கப்படுகின்றது.

      நாகம்மாள் புதினத்தில் பயன்படுத்தும் உத்திகள் வட்டார இலக்கியத்திற்கானப் பாதையை நாகம்மாள் புதினத்திற்கு அமைத்துக் கொடுக்கிறது.

      நாகம்மாள் புதினத்தில் நினைவுகளைச் சார்ந்த அடிமன ஓட்டமும் நனவோடை உத்தியாகக் கையாளப்படுகின்றது. சின்னப்பன் நாகம்மாளின் தொடக்கக் கால பண்புகளை நினைத்துப் பார்க்கிறான். கணவன் இழப்பிற்குப் பிறகு நாகம்மாளுக்குள் கிளைத்த இறுக்கமும் மென்மையற்ற தன்மையும் சின்னப்பனுக்கு மன அழுத்தத்தைத் தருகின்றது. எழுந்து போங்க, பால் கறக்க நேரமாவலையா? என்னத்துக்கு விருமத்தி பிடிச்சாப்பலே உக்காந்திட்டே இருக்கிறீங்க7 என்றாள் ராமாயி) எனும் கூற்று சின்னப்பனுக்குள் நிகழ்ந்த நினைவுப் போராட்டத்துக்குச் சான்றாகின்றது.

      நாகம்மாள் புதினம் 1942 இல் இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த காலத்தில் உருவாக்கப்பட்டது. மணிக்கொடி எழுத்தாளர்கள் வளர்ச்சி பெற்ற சூழலில் தனக்கென்று ஒரு புதிய நடையை ஆர். சண்முகசுந்தரம் கட்டமைக்க முயன்று இருக்கிறார். எளிய மனிதர்களின் வாழ்வியலில் அவர்களின் பேச்சு வழக்கு நடையுடன் காட்சிப்படுத்த முனைந்த சண்முகசுந்தரம் கொங்கு வட்டார நடையைக் கையாள்கிறார். ரொம்பச் சங்கட்டமாய் இருக்குதுங்க சுல்லி வலசிலிருந்து வாரனுங்க நம்ம - உம் சின்னக் கவணனுக்குத்தானுங்க8 போன்ற வட்டாரச் சொல்லாடல்கள் இப்புதினத்தில் விரவிக் காணப்படுகின்றது.  மேலும், பழமொழி, முன்னோக்கு, பின்னோக்கு, கதைக்குள் கதை போன்ற பல உத்திகளைப் படைப்பாளர் கையாண்டுள்ளார். 

9. கதை முடிவு

      நாகம்மாள் புதினத்தின் முடிவு துன்பமாக அமைகின்றது. பாகப்பிரிவினையால், பழி தீர்க்கும் வன்மத்தால் சகஉயிரைக் கொல்லும் மானுடமற்றப் பிரதியை அடையாளப்படுத்துகின்றது. இப்புதினத்தில் தீமை தான் நினைத்ததை சாதித்துக் கொள்கின்றது. வாசகர்கள் அந்தோ எனப் பரிதாபப்பட்டு கனத்த இதயத்துடன் முடிவை ஏற்கும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். சின்னப்பன் குற்றுயிருடன் மீண்டு வந்திடக்கூடாதா எனும் ஏக்கத்தைக் கதை முடிவு அளிக்கின்றது. 

சின்னப்பன் நிலை கொள்ளாது பூமியில் சாய்ந்தான். சிரசினின்று ரத்தம் மளமளவென்று  பெருகியது. வாழைக்குருத்தைப்போல அவன் அங்கங்கள் சுருங்கின. முதலில் சுவாசம் பலமாகிப் பின் மெதுவாக அடங்கிற்று. குழந்தை ஹோவெனக் கத்தி ராமாயியைத் தழுவிற்று. ராமாயி ஹோவெனக் கதறிக் கொண்டே சின்னப்பன் மேல் விழுந்தாள்9

      கணவனை இழந்த இன்னொரு நாகம்மாளாக ராமாயி உருவானாள் எனும் அவலச்சுவையுடன் நாகம்மாள் கதை நிறைவுற்றது.

முடிவுரை

      நாகம்மாள் என்னும் கதைமாந்தரை மையமாகக் கொண்டு எழுந்த இப்புதினம் சுயஉரிமைகள் எதுவுமற்று கணவன் மறைவுக்குப் பிறகு சார்ந்து வாழும் ஒட்டுண்ணி வாழ்க்கையை உடைத்தெறிகிறது. தன் உரிமைக்காகவும் தன் மகள் எதிர்காலத்திற்காகவும் குடும்பத்தில் சிக்கலை உருவாக்கும் நாகம்மாள் இரக்கமற்றப் பெண்போல வெளிப்படையாகத் தோன்றினாலும் மறைமுகமாக அவள் தன் உரிமைப் போராளியாக வெளிப்படுகிறாள். கொங்கு நாட்டின் பெண்களுக்கு சொத்துரிமை வழங்குவதில் உள்ள சிக்கல்களை இப்புதினம் மறைமுகமாக உரைக்கின்றது. சின்னப்பன் நாகம்மாளுக்கு சொத்துரிமை உண்டுதானே என ஒரு முறை சிந்தித்து இருந்தால் நாகம்மாள் குடும்பம் அல்லாத உறுப்பினர்களின் உறவைத் துணையாகக் கொண்டிருக்க மாட்டாள் எனும் மாற்றுப் பார்வையை இப்புதினம் வழங்குகிறது. நாகம்மாள் 1942 கால கட்டத்தில் கணவனை இழந்து குடும்ப உறுப்பினா்களைச் சார்ந்து வாழும் கொங்கு மண்ணின் பிரதி என்பதை நிறுவுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

துணைநின்றவை

1. ஆர்.சண்முகசுந்தரம், நாகம்மாள், காலச்சுவடு பதிப்பகம், சென்னை. ப. 1

2. கண. முத்தையா, தமிழ் நாவல்கள், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை ப.

3. இரா. தண்டாயுதம், தமிழ்ச் சிறுகதை முன்னோடிகள், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை ப.90

4. மா. இராமலிங்கம், நாவல் இலக்கியம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை. ப.16

5. ஆர்.சண்முகசுந்தரம், நாகம்மாள், காலச்சுவடு பதிப்பகம், சென்னை. ப. 11

6. சுப்பிரமணியன், ச.வே, கம்பன் இலக்கிய உத்திகள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம். ப. 38

7. ஆர்.சண்முகசுந்தரம், நாகம்மாள், காலச்சுவடு பதிப்பகம், சென்னை. ப. 44

8. ஆர்.சண்முகசுந்தரம், நாகம்மாள், காலச்சுவடு பதிப்பகம், சென்னை. ப. 70

9. ஆர்.சண்முகசுந்தரம், நாகம்மாள், காலச்சுவடு பதிப்பகம், சென்னை. ப. 120