ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சங்க இலக்கியங்களில் தமிழர் சடங்குகள் (Tamil Rituals in Sangha Literature)

ஆய்வாளர்:ப. ஜனனி, முதுகலை தமிழ் இலக்கியம், இரண்டாம் ஆண்டு, சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் | நெறியாளர்: முனைவர். சொ.கோகில மீனா, M.A., M.Phil., B.Ed., Ph.D., உதவிப்பேராசிரியர், சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம். 08 Feb 2024 Read Full PDF

ஆய்வு சுருக்கம்:

     மனித வாழ்வில் சடங்குகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. புலம் பெயர்ந்த தமிழர்கள் தாயகம் கடந்த போனாலும் தங்களது சடங்கு என்ற பொருண்மையைத் தாங்கிச் செல்கின்றனர். அங்கும் அவற்றின் வழியே தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர். தமிழர் வாழ்வியலோடு சடங்குகள் சங்கிலித் தொடராய் பிணைந்துள்ளதை அறிய முடிகிறது.

திறவுச் சொற்கள்

  • வழிபாட்டுச் சடங்குகள்  (Rituals)
  • தமிழர்களின்  இயற்கை வழிபாடு( nature worship of  tamils)
  • சங்க இலக்கியங்களில் வழிபாடு( Worship in Sangha literature)
  • இயற்கை வழிபாடு( Nature worship)
  • இறை வழிபாடு(Prayer)
  • எட்டுத் தொகை இலக்கியத்தில் முருக வழிபாடு(Worship of Muruga in the Eightfold Literature)
  • நடுகல் வழிபாடு(Nadukal worship)

முன்னுரை

     உலக மக்களின் தொன்மையான தோற்றத்தை வெளிப்படுத்தவும் அடுத்த தலைமுறைக்கு உண்ர்த்த இலக்கியமும் அவற்றின் ஆய்வுகளும் முதன்மை செய்கின்றன. இவ்வழியில் சங்க இலக்கியம் பற்றிய ஆய்வுகள் தமிழ்ச்  சமூகத்தின் பரிணாம வளர்ச்சியில் பண்பாடு, பாரம்பரியம் என அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கின்றது. இக்கூற்றினை மெய்ப்பிக்க சங்க கால இலக்கியத்தில் உள்ள சடங்குகள் வாயிலாக தற்காலத்தில் தமிழ் இலக்கிய உலகில் ஆய்வுகள் பரவலாக செய்யப்பட்டு வருகின்றன. தமிழர்கள் மிகவும் தொன்றுத் தொட்டு திணை அடிப்படையில் வாழ்ந்த இடைவிடாத மரபுடையவர்கள். அந்த திணை மரபு வழியில் வாழ்வியல் சடங்குகளும், நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் உள்ளடங்கவனவாகும் என்பதை தெளிவாக அறிய முடிகின்றது.

     ஐந்து திணைக்கும் தனித்தனியான சிறப்புக் கூறுகளும், பொதுவான கூறுகளும் உண்டு. இவ்விரண்டும் பிறப்பு சடங்கு, திருமண சடங்கு, வழிபாட்டுச் சடங்கு என்ற வாழ்வியல் சார்ந்த சடங்குகள் தவிர, தொழில் சார்ந்த சடங்குகள் எனப் பல வகையில் உணர்த்துகின்றன. இச்சடங்குகளில் வழிபாட்டு சடங்குகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

வழிபாட்டுச் சடங்குகள்

     தொல் தமிழர்கள் மொழி, பண்பாடு, நம்பிக்கைகள், சடங்குகள், உலகப் பார்வை போன்றவற்றை அறிவதற்கு எட்டுத்தொகை துணைபுரிகின்றன. சமூக பண்பாடு, வாழ்வின் அடித்தளமாகக் கையாளப்பட்டுள்ளதை போன்றே ஒவ்வொரு நிலத்திற்குரிய தெய்வங்கள் குறித்தும் இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. அதனை,

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மே மைவறை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையாற் சொல்லவும்  படுமே”

                                        (தொல். அகம். 5,1-6)

                      என்று தொல்காப்பியர் பாடல் வழி அறிய முடிகின்றது. தொல்காப்பியக் காலத்திற்கு முற்பட்ட மக்களின் மரபுகளையும், வழக்கங்களையும் தருவதோடு மரபுகளினால் ஏற்படும் மாற்றங்களையும் அதனால் விளையும் பாதிப்புகளையும் குறிப்படத்த தவறில்லை என்பதை அறியலாம்.

     பழந்தமிழ் மக்களின் தெய்வம் பற்றிய நம்பிக்கைகள் நிறையக் காணப்பட்டது. அதன் விளைவாக வழிபாட்டு சடங்குகள் பல தோன்றின. தெய்வங்களை மக்கள் வெறுமனே வழிபடாது. அத்தெய்வங்களை வழிபடும் போது சில சடங்கு முறைகளை செய்து வழிபடுவர் தெய்வங்களைப் பெருந்தெய்வங்கள், சிறு தெய்வங்கள் என இரு வகையாகப் பகுப்பர்.

     இப்பழக்கம் பெருமளவில் வழக்கில் இருந்து வருகின்றது. இவ்விரு தெய்வங்களும் வழிபாட்டு சடங்கானது பெரிதும் மாறுபட்டு காணப்படுகின்றன. தமிழிலக்கியத்தில் முழுமையாக முதன் முதலில் கிடைத்த இலக்கண நூலான தொல்காப்பியத்தில் பெருந்தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. நாட்டுப்புறத் தெய்வங்களான,

      1. உளர் தெய்வங்கள்
      2. இனத் தெய்வங்கள்
      3. குலத் தெய்வங்கள்
      4. மாலைத் தெய்வங்கள்
      5. சமாதித் தெய்வங்கள்
      6. துணைத் தெய்வங்கள்

டாக்டர் துளசி இராமசாமி ஆறு வகையாகப் பகுக்கிறார்.

தமிழர்களின்  இயற்கை வழிபாடு

     பண்பாட்டு வளர்ச்சியின் தொடக்கக் காலத்தில் மனிதர்களின் வாழ்க்கை இயற்கையோடு இணைந்தே இருந்துள்ளது. பின்னர் பண்பாட்டு வளர்ச்சியின் பல்வேறு படிநிலைகளில் மனிதர்கள் தங்களை இயற்கையிலிருந்து தனித்துப் பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இயற்கையின் அங்கமாகவே இருந்து வந்த மனிதர்கள், இப்பொழுது தங்களின் அங்கமாக இயற்கையை பாவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும்பண்பாட்டு வளர்ச்சி  என்பது அனைத்து குழுவினருக்கும் ஒருமித்ததாக இல்லாதக் காரணத்தால், இன்றும் தொல்குடி மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை கடைபிடித்து வருவதை அறிய முடிகிறது.

சங்க இலக்கியங்களில் வழிபாடு

     சங்க இலக்கியங்களில் இயற்கை வழிபாடு குறிப்புகள் காணப்படுகின்றன. மக்கள் தங்களின் சுற்றுச்சூழலையும் தன்னுடைய ஆற்றலிற்கு அப்பாற்பட்டதாக கருதப்பட்ட நிலம், நெருப்பு, காற்று, மழை, ஞாயிறு, விலங்குகள், தாவரங்கள், ஆறுகள், மலைகள்  போன்றவற்றை அவைகள் மீதான பயம் கருதியும், பயன் கருதியும், வழிபட செய்தனர்.

     வழிபடுவதன் மூலம் தனக்கும் அச்சக்திகளுக்கு மிடையே நல்லிணக்கத்தை உருவாக்கிட முடியும் என்ற நம்பிக்கையே அடிப்படையான காரணமாக இருந்திருக்கலாம். தன்னைச் சுற்றி நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளின் காரணத்தை அறியும் அறிவை தொடக்கக் கால மனிதன் பெற்றிருக்கவில்லை என்றுக் கூறுவதை விட மொழியின் வளர்ச்சியற்ற நிலைகளின் இருந்ததால் காரணத்தைத் தேடுவதில் நேரத்தை செலவிடாமல் பிற சக்திகளுடன் தொடர்பு படுத்தி கொண்டான். தற்கால சமூகத்திலும் காரணத்தை அறியும் போக்கில் நம்பிக்கை கலந்திருப்பதை இங்கு மறந்துவிட முடியாது. ஆவிகள், பேய்கள் போன்ற இயற்கை இறந்த சக்திகள் இன்றும் மனிதனின் சமூகப் பண்பாட்டு வாழ்வில் முக்கியப் பங்காற்றி வருவதை அறிய முடியும் என்பதை,

           “ விளங்குபகல் உதவிய பல்கதிர் ஞாயிறு

          வளங்கெழு மாமலை பயங்கெடத் தெறுதலின்

          அருவிய யான்ற பெரவரை மருங்கில்

          சூர்ச்சுனை துழைஇ நீர்ப்பயங் காணாது”

                                             (அகம். 91.1-4)

           அதாவது உலகம் விளக்குவதற்கு காரணமாக பகலினை தந்துதவிய ஞாயிறு என்னும் பொருளில் இடம் பெற்றுள்ளதை சங்க இலக்கிய பாடல வாயிலாக வழிபாட்டுச் சிறப்பை அறிய முடிகிறது.

இயற்கை வழிபாடு

     இயற்கையின் கூறுகளான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், மலை, ஞாயிறு, திங்கள் போன்ற இயற்கைப் பொருட்களை வழிபடும் தன்மையினையே இயற்கை வழிபாடாகக் கூறுவர். தொல்காப்பியர் ஞாயிறு, திங்கள், தீச்சுடர் ஆகிய இயற்கையின் முக்கூறுகளை வழிபட்டமையினைப் பாடாண் திணையில்.

     “கொடியநிலை கந்தழி வள்ளி என்ற

     வடுநீங்கு சிறப்பின் முதலான மூன்றும்

     கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”

                                   (தொல். புறம். 88,1-3)

     எனச் சுட்டியுள்ளார். இயற்கையின் கூறுகள் மனித நலத்திற்குப் பயன்பட்டமையினை உணர்ந்த மக்கள் அதன் அருட்பண்பினை பாராட்டி போற்றி வழிபட்டனர். அதுவே காலப்போக்கில் இலக்கிய மரபாக உருப்பெற்றதனை சிலப்பதிகார மங்கல வாழ்த்து பாடலில் திங்கள், ஞாயிறு, மாமழை போற்றப்பட்டமை தெளிவுப்படுத்தும் என்பதை அறியலாம்.

இறை வழிபாடு

     இயற்கை வழிபாட்டின் அடிப்படையில் தோன்றிய இறை வழிபாடு காலப் போக்கில் பல தெய்வ வணக்த்திற்குக் காரணமாயிற்று. பல தெய்வ வழிபாடு வளர்ச்சியுற்ற நிலையில் சிறு தெய்வம், பெருந்தெய்வம் என்ற பாகுபாடும் தோன்றிற்று.

     “பானிற வுருவிற் பனைக்கொடி யோனும்

நீனிற வுருவி னேமி யோனுமென்

றிரு பெருந்தெய்வமு முடனின் றாஅங்கு”

                              (புற. 58)

என வரும் புறநானூற்று பாடலில் பலராமனையும் திருமாலையும் இருபெருந் தெய்வமாக சுட்டியுள்ளமை தெளிவு படுத்துகின்றது.

எட்டுத் தொகை இலக்கியத்தில் முருக வழிபாடு

     சங்க இலக்கியம் முருகனைச் சேயயோன் என்று கூறுகிறது. முருகன் தொடக்கக் காலத்தில் தமிழ்க் கடவுளாக வழிபட பெற்றான். மலர் மாலைகள் சூட்டி முருகனைப் புகழ்ந்து பாடும் வேலன் வழிபாடு சங்க காலத்தில் வெறியாட்டு என்று அழைக்கப்பட்டது. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே முருக வழிபாடு பழந்தமிழகத்தில் இருந்திருக்கிறது. அதனால்தான் “சேயோன் மேய மைவரை உலகு” என்று முருகனைக் குறிப்பிடுகிறார்.

     முருகன், திருமால், சிவபிரான் முதலிய தெய்வங்களின் பெயர்கள் பதிற்றுப்பத்திலும் காணப்படுகின்றன.

     “சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்

கடும்சின விறல் வேள்”

                                                 (பதி.11,5-6)

     அச்சத்தைத் தரும் சூரனுடைய மா மரத்தை அடியோடு அழித்த முருகன் பெரிய புகழையும் கடுமையான சினத்தையும் வெற்றியையும் உடைய முருகன் இது முருகனுடைய வரலாற்றை நினைவூட்டுகின்றது.

திருமால் வழிபாடு

     திருமாலை விண்ணவன், நெடியோன் போன்ற பெயர்களால் அழைப்பர். பன்னெடுங்காலமாக திருமால் வழிபாடு தமிழர்களிடம் காணப்பட்டது என்பதை அகநானூறு வழி அறியலாம். ஆயர் குல மகளில் யமுனையில் நீராடிய போது அவர்களது உடைகளை கவர்ந்து அருகில் இருந்த குருந்த மரத்தில் ஏறிக் கொண்டான் கண்ணன். அம்மகளிர் தம்முடைய ஆடைகளைக் கேட்டு இரந்த போது பலதேவர் அங்கு வந்து குருந்த மரத்தின் கிளைகளைத் தாழ்த்தி அருள் செய்தான். மரக்கிளையில் உள்ள இலைகள் அவர்களை மறைத்ததால் அது தழையாடை போல் காட்சியளித்தது.

     “வண்புனல் தொழுநை வார்மணல் அகன்துறை

     அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்

     மரம்செல மிதித்த மால்போல்”

                                        (அகம் 59)

என்ற பாடல் அடிகள் மூலம் ஆயர் குல மகளிரிடம் திருமால் குறும்பு செய்த செய்தியை உணர முடிகிறது.

நடுகல் வழிபாடு

     சங்க தமிழரின் வாழ்வியல் முறைகளை நாம் முழுவதுமாகத் தெரிந்து கொள்வதற்கு சங்க இலக்கியங்களை முதன்மை ஆதாரங்களாகத் திகழ்க்னிற்ன. போரில் வீழ்ந்த வீரர்களுக்கு கல் நட்டு வழிபடுவது பண்டைய தமிழ் மரபு. வீரனின் நினைவுக்காக கற்கள் நிறுத்தப்பட்டு அவற்றின் அருகில் கேடயங்களும், ஈட்டிகளும் வைக்கப்பட்டன. இத்தகைய கற்கள் நடுகற்கள் எனப் பெயர் பெற்றுத் தெய்வங்களாகவே வணங்கப்பட்டு வந்தன. இந்நடுகல்லிற்கு மயில் இறகு சூட்டி நெல்லினால் சமைத்த உணவோடு கள்ளையும் படைப்பர். மேலும் செம்மறி ஆட்டுக் குட்டியைப் பலி கொடுத்து நடுகல்லை வழிபடுவர் என்பதை,

“வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்

     வல்லாண் பதுக்கை கடவுள் பேண்மார்

     நடுகல் பீலி சூட்டி துடிப்படுத்து

     தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்தும்”

                                        (அகம் – 35)

     என்ற அகநானூறு பாடல் அடிகள் மூலம் அறியலாம். நடுகல்லிற்கு மயில் பீலியையும் சூட்டி அழகு பார்ப்பர். அவ்வீரனின் பெயரையும் அவனது குடிச்சிறப்பினையும் அக்கல்லில் எழுதி வைத்து அவன் பயன்படுத்திய ஆயுதங்களையும் நட்டு வைத்து, அவனின் பெருமையை எடுத்துரைப்பர்.

திருவிழாக்கள்

     தமிழர்களின் பெருமைகளை உலகம் முழுவதும் எடுத்துக் கூறுவான சங்க இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியமான அகநானூற்றில் திருவிழாக்கள் மற்றும் வழிபாட்டுச் செய்திகள் இடம் பெறுகின்றன. தமிழ் சமுகத்தின் பண்பாட்டு கூறுகளில் திருவிழாக்களும் வழிபாடுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. சங்க கால மக்கள் தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்டு திருவிழாக்களை நடத்தினர். திருவிழாவின் நோக்கம் மனிதனின் சோர்வினைப் போக்கி மனித இனத்தை ஒன்று சேர்ப்பது ஆகும்.

ஆடி நீர் பெருக்கு விழா

     வைகையில் வெள்ளப் பெரக்கு வந்த போது மக்கள் பொன்னால் ஆன மீன்களைக் கொண்டு சென்றும் மலர்த் தூவியும் வழிபட்டு நீராடி மகிழ்ந்த சடங்கினை பரிபாடல் (பரி.16:11-15) குறிப்பிடுகிறது.

கார்த்திகை விழா

     கார்த்திகை தினமான நல்ல நாளில் கரும் மேகங்கள் ஒன்று கூடியிருக்கும் மாலை நேரத்தில் பெண்கள் திருவிளக்கு ஏற்றினர். சங்க காலத்தில் மாதம் மும்மாரி மழை பெய்ததாக குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. கார்த்திகை மாதம் மழையின் மிகுதியினால் அதை நிறுத்த வீட்டில் விளக்கேற்றினர். அவ்வாறு விளகேற்றினால் மழை நின்று விடும் என்பது முன்னோர்கள்னி நம்பிக்கை அதன் எச்சமாகவே இன்றளவும் நிகழ்வு, முறையாக பின்பற்றப் பெற்று வருகின்றது.

     தமிழக மக்கள் இன்றவும் வருடந்தோறும் கார்த்திகை மாதம், கார்த்திகை தீப விழாவினைக் கொண்டாடி வருகின்றனர். இந்த விழா வீடுதோறும் தவறாமல் விளக்கு ஒளி ஏற்றி கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் விழா

     நம் நாட்டில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றுள் மிக சிறந்தது பொங்கல் திருவிழாவாகும். இதனை தமிழர் திருநாள் என்றும் அழைப்பர். சங்க காலத் தமிழரும் அறுவடையை திருவிழாவாக கொண்டாடியுள்ளனர். முன்பனிக் காலமாகிய மார்கழி இறுதியிலும் தைமாதத் தொடக்கத்திலும் பொங்கள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பங்குனித் திருவிழா

     பங்குனி உத்திரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12-ம் மாத பங்குனி நட்சத்திரங்களில் 12-ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 வகை வேலனுக்கு சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது.

     அனைத்து அறுபடை வீடுகளில் பங்குனி உத்தரம் விழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழாவும், தேரோட்டமும், சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும். இதனை,

     “உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழில்

     பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்”

                                   (அகம் – 137: 5-9)

     என்று அகநானூறு பங்குனி உத்திரத்தின் செய்தி இடம் பெறுவதை அறிய முடிகிறது. தமிழர்கள் விழாக்களின் வழியே வழிபாட்டுச் சடங்குகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முடிவுரை

     மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரையிலும் பல்வேறு மாற்றங்கள் அடைந்துள்ளனர். முதலில் இயற்கைச் சீற்றத்தைக் கண்டு அஞ்சினான். மனிதனை மீறிய சக்தி இருப்பதாக அறிந்து வழிபடத் தொடங்கினான்.

     இறைவனிடம் கொண்டுள்ள அச்ச உணர்வும் இயற்கையின் அதீத செயற்பாட்டினால் ஏற்படுகின்ற மழை, இடி, மின்னல், பூகம்பம் பற்றிய தீய விளைவுகளும், மரணத்தைப் பற்றிய அச்சமுமே நம்பிக்கைகள் தோன்றக் காரணங்களாகின்றன. பிறப்பு முதல் இறப்பு வரை பண்பாட்டிற்கு ஏற்ப பலதரப்பட்ட நம்பிக்கைகளை தமிழக மக்கள் நடைமுறையில் கடைபிடித்து வருகின்றனர் என்பது இலங்ககியங்களின் வழி அறிய முடிகின்றது.

     சங்க கால மக்கள் கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருப்பதற்காக திருவிழாக்களை கொண்டாடினர். ஒரு நாட்டு மக்களுடைய கலாச்சாரம், பண்பாடு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை அறிய திருவிழாக்கள் உதவி புரிகின்றன. அகநானூற்றில் விழாக்கள் தொடர்பான பல்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன.

     மக்கள் தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்டு இறைவனுக்கு செய்யும் வழிபாட்டுச் சடங்கு முறைகளைச் சிறப்பாக செய்கின்றனர் என்பதை இக்கட்டுரை வழி அறிய முடிகிறது.

துணை நூற்பட்டியல்

  1. திருக்குறள் 66
  2. தொல்காப்பியம் பொருளதிகார மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், பாக ப.577
  3. தொல் பொருள் சாரதா பதிப்பகம் 2014 ப.266
  4. ஐங்குறுநூறு உரை கழகப் பதிப்பு. 2009  ப. 86
  5. தமிழண்ணல்., தாலாட்டு ப.63