ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கலிங்க மாகோன் – மீளாய்வு (Kalinga Maacon – Review)

எஸ்.கே.சிவகணேசன், தலைவர் / முதுநிலை விரிவுரையாளர், வரலாற்றுத்துறை, கலை கலாசார பீடம், கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை | Mr.S.K.Shivahaneshan, Head / Senior Lecturer, Dept. of History, Faculty of Arts & Culture, Eastern University, SriLanka 08 Feb 2024 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம் : (Abstract)

இலங்கைத்தமிழர்கள் மத்தியில் பிராந்திய வரலாற்றைக்கூறும் பல நூல்கள் எழுந்துள்ளன. யாழ்ப்பாண வைபவமாலை, கையாலய மாலை, கோணேசர் கல்வெட்டு, மட்டக்களப்பு மான்மியம், மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் போன்றவற்றை எடுத்துக்காட்ட முடியும்.  இவற்றுள் பிராந்திய வரலாற்றைக்கூறும் நூல்களுள் மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் பல சிறப்புக்களைக் கொண்டுள்ளது. இந்நூல் யாரால், எப்போது எழுதப்பட்டது என்பது நூலில் காட்டப்பட்டிருக்கவில்லை. ஆனால் நூலில் ஆங்காங்கே ஒல்லாந்தர் மற்றும் கண்டி மன்னர்கள் பற்றிய குறிப்புகள் காட்டப்பட்டுள்ளன. இத்தகவல்களைக்கொண்டு பார்க்குமிடத்து ஒல்லாந்தர் காலத்தில், ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் இந்நூல் எழுதப்பட்டிருக்கலாம். 

இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை ஆட்சி செய்த ஒல்லாந்தர் வரி வருமானம், நீதி பரிபாலனம், நிருவாக பதவிகள், கரையோரத்தின் பொது நிருவாகம் போன்ற நடவடிக்கைகளில் தேச வழமைகளை பின்பற்றி ஒழுக விரும்பினர். இதன் ஊடாக சுதேசிகளுடன் சுமுகமான நிருவாக தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள எதிர்பார்த்தனர். அதன் காரணமாகவே அப்போது வட இலங்கையில் ஆட்சி புரிந்த ஒல்லாந்த அதிகாரிகளின் வேண்டுகோளுக்கமைய யாழ்ப்பாண வைபவமாலை எழுதப்பட்டது. அதேபோன்று கிழக்கு ஒல்லாந்த அதிகாரிகளின் வேண்டுகோளினால் மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் எழுதப்பட்டது. ஒல்லாந்தர் காலத்தில்தான் வட கிழக்கு தமிழரின் பண்பாடு, வழக்காறுகள், மரபுகள் போன்றவற்றை அறியும் பொருட்டு தேச வழமைச்சட்டம் மற்றும் முக்குவர் சட்டம் ஆகிய தொகுப்புகள் தொகுக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகளாகும்.

இவ்வாறு தொகுக்கப்பட்ட மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் நூல் பல சிறப்புக்களைக்கொண்டது. இலங்கைத்தமிழரின் வரலாறு தொடர்பிலான பல பரம்பரைக்கதைகளைக் கொண்டதாக அந்நூல் எழுதப்பட்டுள்ளது. இயக்கர், நாகர் எனவழைக்கப்பட்ட பூர்வ குடிகள், புரதான காலத்து அனுராதபுரம் மற்றும் பொலனறுவை காலத்து அரசர்கள், அவர்கள் காலத்தில் இடம் பெற்ற முக்கிய வரலாற்று சம்பவங்கள், கிழக்கிலங்கையின் ஆட்சியாளர்கள் என பல வரலாற்றுத் தகவல்களைக் காட்டிநிற்கின்றது.

இந்நூலின் காவிய நாயகனாக மாகோன் என்ற மன்னன் காட்டப்பட்டுள்ளான். இவன் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் கலிங்க தேசத்திலிருந்து படைகளோடு வந்து பொலனறுவை இராச்சியத்தைக் கைப்பற்றி சுமார் 40 வருடங்களுக்கு மேலாக ஆட்சி செலுத்தியிருந்தான். அம்மன்னன் கிழக்கிலங்கையோடு நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தான். அந்நூல் காட்டிய தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ள நேரடியான தொல்பொருள் சான்றுகள் கிடைக்கவில்லை. அதனால் அந்நூலை ஆதாரமாகக்கொண்டே ஆராய்ச்சியாளர்களினால் மாகோன் தொடர்பிலான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவந்தன. இருந்தபோதிலும் தற்போது திருகோணமலை - கோமரசன்கடவல என்ற இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்று மாகோன் தொடர்பிலான தகவல்களை மீள்வாசிப்புக்குள்ளாக்கி, உறுதிப்படுத்தியுள்ளது. அவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகள் தொடர்பில் ஆய்வில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அடைவுச் சொற்கள்(Key Words) : சரித்திரம், மான்மியம், முக்குவர், குடிகள், மாகோன், தொல்பொருள், கல்வெட்டு.

Abstract

Among the Sri Lankan Tamils, many books on the history of the region have emerged. Texts such as Yalpana Vaipavamalai, Kailaya Malai, Konesar kalvettu, Mattakkalappu Manmiyam, Mattkalappu poorva sarithiram can be cited. Among these books on regional history, the Mattkalappu poorva sarithiram has many specialties. By whom and when this book was written is not shown in the book. But there are references to Hollander and Kandy kings here and there in the text. With this information, the book may have been written by more than one person during the Dutch period.

The Dutch who ruled the coastal areas of Sri Lanka wanted to follow national customs in activities such as tax revenue, administration of justice, administrative positions and general administration of the coast. Through this they hoped to establish smooth administrative relations with the Swadeshi. Because of that, the Yalpana Vaipavamalai was written at the request of the Dutch officials who ruled in northern Sri Lanka at that time. Similarly, the Mattkalappu poorva sarithiram was written at the request of the Eastern authorities. In order to know the culture, customs and traditions of the North East Tamils, it was during the Dutch period that the compilations of the National Customary Law and the Mukkuvar Law were compiled.

The Mattakalappu porva sarithiram compiled in this way has many merits. The book is written as containing many legends related to the history of Sri Lankan Tamils. The aborigines presents many historical information such as the original inhabitants called Yaksha, Nagas, the kings of Anuradhapuram and Polanaruva during the early period, important historical events that took place during their time, and the rulers of Eastern Sri Lanka.

King Maacon is shown as the epic hero of this book. In the 13th century, he came from Kalinga country with armies and conquered the kingdom of Polanuruva and ruled for more than 70 years. The king had close connections with Eastern Sri Lanka. No direct archaeological evidence is available to confirm the information presented in the book. Therefore, using that book as a source, the researchers have presented ideas about Maacon. However, the inscription found at Trincomalee - Gomarasankatavala has re-read and confirmed the information about Maacon. The research has focused on the views thus presented.

Key Words : History, Manmiyam, Mukkuvar, inhabitants, Maacon, Archaeology, Inscription.

அறிமுகம்

மட்டக்ககளப்பு பூர்வ சரித்திரத்திர நூலில் முக்கிய பாத்திரமாக மாகோன் குறிப்பிடப்பட்டுள்ளான். சூளவம்சம் உள்ளிட்ட பாளி, சிங்கள நூல்களில்  பொலனறுவை இராச்சியத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்ததாகவும், அவன் பௌத்த மதத்தை அழித்ததாகவும் பௌத்தர்களுக்கு தீங்கிழைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலனறுவையில் கலிங்க மாகோன் செலுத்திய அதிகாரத்தினால்தான், இராஜரட்டை அரசு வீழ்ச்சி கண்டு தென், தென் மேற்குத் திசை நோக்கிய, இடம்  பெயர் இராஜதானிகள் தோற்றம் பெற்றுக் கொண்டன என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்க வரலாறு நிகழ்வுகளாகும்

 அதேவேளை மட்டக்களப்பு பூர்வ சரித்திரத்தில் சிங்க வம்சத்தவர் எழுச்சி பெற்று மட்டக்களப்பு தேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியிருந்த வேளை, மீண்டும் கலிங்க வம்சத்தவர் ஆட்சியை நிலைநாட்டவும், மீண்டும் சைவத்தை கட்டிக்காக்கவும், அவ்வம்சத்தவரின் வேண்டுதலினால், அவன் தந்தை மனுவரதனினால், மகோன் மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டடதாக குறிப்பிடப்பட்டுள்ளது (கமலநாதன்,2005,18-19). அதேவேளை மாகோன் மட்டக்களப்பு தேசத்தோடு கொண்டிருந்த தொடர்புகளை நாம் மறுக்க முடியாது. ஆனால் மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் விபரிக்கின்ற தன்மையில் இருந்ததா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள நேரடியான சான்றுகள் இதுவரைக் கண்டு பிடிக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் அண்மையில் பேராசிரியர் புஸ்பரட்ணத்னம் கண்டுபிடித்துள்ள திருகோணமலை - கோமரசன் கடவெல கல்வெட்டு மாகோன் யார் ?, அவன் கிழக்கிலங்கையோடு கொண்டிருந்த தொடர்புகளை வெளிப்படுத்தியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தொல்லியல் ஆய்வாளர் தங்கேஸ்வரி உள்ளிட்டவர்கள் மாகோன் தொடர்பில் தெரிவித்து வந்த ஊகங்கள் உறுதிப்படுதப்பட்டுள்ளதோடு, புதிய பல செய்திகளையும் அக்கல்வெட்டு வெளிப்படுத்தியுள்ளது. அந்த மீள்வாசிப்பு தொடர்பில் மேற்படி தலைப்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

ஆய்வுப்பிரச்சனை :

கலிங்க மாகோன் தொடர்பிலான ஆய்வுகள் சூளவம்சம் உள்ளிட்ட பாளி, சிங்கள நூல்கள் மற்றும் மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் போன்ற பிராந்திய வரலாற்றைக் கூறும் நூல்கள், மரபுக்கதைகள் ஆகியவற்றின் தகவல்களைக்கொண்டே ஆராயப்பட்டு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மாகோன் தொடர்பான அவ்வாய்வு முடிவுகள், கருத்துக்கள், ஊகங்கள் என்பனவற்றை அண்மையில் திருகோணமணை – கோமரசன்கடவெல என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டு கல்வெட்டினை ஆதாரமாகக் கொண்டு உறுதிப்படுத்தல்.

ஆய்வின் முக்கியத்துவம் :

கலிங்க மாகோன் தொடர்பாக, வரலாறு - தொல்லியல் ஆய்வாளர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ள  கருத்துக்கள், ஊகங்கள்  மற்றும் முடிவுகளை திருகோணமலை – கோமரசன் கடவெல கல்வெட்டு செய்திகளைக்கொண்டு உறுதிப்படுத்தல் அல்லது நிராகரித்தல் மற்றும் புதிய கருத்துக்கள், செய்திகளை முன்வைத்தல்.

ஆய்வின் நோக்கம் :

பிற்கால மட்டக்களப்பின் சமூக, சமய, பண்பாட்டு வரலாற்று அம்சங்கள் பல கலிங்கமாகோன் காலத்தில் இருந்து மேலும் வெளிச்சம் பெறுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அவ்வம்சங்களை குறித்த சாசனச்செய்திகளின் அடிப்படையில் ஆராய்தல்.

இலக்கிய மீளாய்வு :

மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் : அமரர் சிவராம் மற்றும் கமலநாதன, அவரது பாரியார், திருமதி. கமலநாதன்; ஆகியோரின் கடின தேடுதல் முயற்சிகளின் பயனாக மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் என்ற இந்நூல் பதிப்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு தேசத்தின் மத்திய காலத்துக்கு முந்திய வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொள்ள, இந்த நூலைத்தவிர வேறு இலக்கிய ஆதாரங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. உரை நடை மற்றும் செய்யுள் நடை ஆகியவை கலந்ததாக எழுதப்பட்டுள்ள, இந்நூலில் கலிங்க மாகோன் பற்றிய பல முக்கிய செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவனைப்பற்றி தினசிங்கன் சரித்திரம், சுகிதரன் சரித்திரம், குடிப்பிரிவுகள், குளிக்கல்வெட்டு ஆகிய பகுதிகளில் குறிப்புகள் காணப்படுகின்றன. 

பூஜாவலிய என்ற  இந்நூல் கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டில், தம்பதெனியா இராஜதானி காலத்தில்  எழுதப்பட்டது. மகோன் படையெடுப்பு, பொலனறுவையைக் கைப்பற்றல், சைவ சமயத்தை நிலைநாட்ட அவன் பௌத்த சமயத்திற்கு எதிராக மேறகொண்ட செயற்பாடுகள் தொடர்பிலான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. நிக்காய சங்கிரஹய, ராஜவலிய போன்ற நூல்களிலும் மகோன் பற்றிய குறிப்புகள் வருகின்றன. யாழ்ப்பாண வைபவ மாலை, யாழ்ப்பாண வைபவ விமர்சனம் போன்ற பிராந்திய வரலாற்று நூல்களிலும் தகவல்கள் காணப்படுகின்றன.

அமரர், செல்வி : க. தங்கேஸ்வரி மட்டக்களப்பு வரலாறு தொடர்பில் பல நூல்களை எழுதியுள்ளார். தமிழ் மன்னன் மாகோனின் மகத்தான வரலாறு  என்ற நூலில் மாகோன் பற்றிய பல முக்கிய தகவல்களை ஆராய்ந்துள்ளார். இந்நூலில் நவீனத்துவமான ஆய்வு முறைகளைப் பயன்படுத்தி புதிய கருத்துக்களை அவர் முன்வைத்துள்ளார். இலங்கை, வடக்கு, மட்டக்களப்பு தேசம் ஆகிய பிரதேசங்களோடு மாகோன் கொண்டிருந்த தொடர்புகள் தொல்லியல் ஆதாரங்களுடன் விரிவாக ஆராய்யப்பட்டுள்ளது.

ஆய்வின் கருதுகோள் :

மகோன் பற்றி மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் எனும் வரலாற்று நூல் கூறும் கருத்துகளின் உண்மைத்தன்மையை கோமரசங்கடவெடல கல்வெட்டு உறுதிப்படுத்துகின்றது.

ஆய்வின் வரையறை :  கி.பி.13 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் பொலனறுவை ஆட்சியாளனாகவிருந்து (கி.பி. 1215 – 1255), பின்னர் யாழ்ப்பாண இராச்சியத்தை தோற்றுவித்ததாகக் கருதப்படும் கலிங்க மாகோன் பற்றி மட்டக்களப்பு பூர்வ சரித்திர நூலில் கூறப்பட்டுள்ள அரசியல், சமூக, கலாசாரத்தொடர்புகள் தொடர்பிலான செய்திகளை குறித்த கல்வெட்டுச்செய்திகளைக் கொண்டு ஒப்பியல் ரீதியில் ஆராய்தல். .

ஆய்வு பரப்பு  :

மட்டக்களப்பு பூர்வ சரித்திரத்தில் மாகோன் :  மகோன் அல்லது கலிங்க மகோன் மட்டக்களப்பு தேசத்தோடு நெருக்கமான தொடர்புகளை அல்லது மேலாண்மையைக்கொண்டிருந்தான். இதுதொடர்பில் மட்டக்களப்பு மான்மியம், மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் போன்ற பிராந்திய வரலாற்றைக் கூறும் இலக்கியங்களின் கருத்துக்களிலேயே இதுவரைத் தங்கியிருக்க வேண்டியுள்ளது. தற்போது திருகோணமலை – கோமரசன்கடவெல என்ற இடத்தில் பேராசிரியர் புஸ்பரெட்ணம் கண்டுபிடித்துள்ள கல்வெட்டு மாகோன் பற்றிய பல புதிய தகவல்களை காட்டுகின்றது. 

திருகோணமலை – கோமரசன்கடவெல கல்வெட்டு :

மாகோன் பற்றிய செய்திகள் கூறும்,  கி.பி.13 ஆம் நூற்றாண்டுக்குரிய இக்கல்வெட்டு, திருகோணமலை நகரிலிருந்து சுமார் 50 கிலோ மீற்றர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள, கோமரசன்கடவெல என அழைக்கப்படுகின்ற காட்டுப்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. கட்டுக்குளப்பற்று நிருவாகப்பிரிவாக இருந்தபோது கோமரசன்கடவெல 'குமரன்கடவை' எனவழைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அக்கல்வெட்டினையும் அது காணப்பட்ட தொல்லியல் மையத்தையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் ப.புஸ்பரெட்ணம் தலமையிலான குழுவினர் வெளிப்படுத்தியுள்ளனர்..(வீரகேசரி, 11,நவம்பர்,2021:5) கல்வெட்டுக்காணப்படும் காட்டுப்பகுதியில் சமகாலத்துக்குரிய சிதைவடைந்த சிவலாயமும், அழிவடைந்த தொல்லியல் எச்சங்களைக்கொண்ட சுற்றாடலும் காணப்படுவதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

அக்கல்வெட்டு  ஊடாக கலிங்க மாகோன் மற்றும் தமிழ் இராச்சியம் பற்றிய வரலாற்றுச் செய்திகள் மீள்வாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சிவாலயம் காணப்படுகின்ற இடத்துக்கு அண்மையில் காணப்படுகின்ற மலையின் மேல் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் மேற்பகுதியில் திருவாசி போன்ற அடையாளம் மற்றும் ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கமும் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் சில பகுதிகள் சிதைவடந்துள்ளதனால் தெளிவற்றுக்காணப்படுவதாக பேராசிரியர் புஸ்பரெட்ணம் குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் புஸ்பரெட்ணம், தென்னாசியாவின் முதன்மைக்கல்வெட்டு நிபுணர் பேராசிரியர் சுப்பராயல் மற்றும் தென்னகத்தின் மூத்த கல்வெட்டறிஞர் இராசகோபால் ஆகியோர் கல்வெட்டின் பெரும்பகுதியை வாசித்து அதன் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளனர். குறித்த கல்வெட்டின் வாசகங்கங்கள் வருமாறு.

https://cdn.virakesari.lk/uploads/medium/file/167363/259183377_1055497065237757_5140051945673683013_n.png 01)... ... க்ஷகே ஸ்ரீவிம்[ங்கோ3] நௌ ம்ருகே3 விம்ச0 திப4.

02).... .....ச0க்தி ப்ரதிஷ்டா2ம் கரோத் க்ருதி: ஸ்வஸ்தி ஸ்ரீ ...

03) [த்திகள்?]  [ஸ்ரீகுலோஸத்துங்கசோழக் காலிங்கராயநேன் ஈழ[ம

04) ண்டலமான மும்முடி] சோழமண்டல மெறிந்தும் கங்கராஜ காலிங்க வி-

05) ஜயவாகு தே3வற்கு வீராபி4ஷேகம் பண்ணுவித்து அநந்தரம் அஷ்ட-

06) [நேமி பூசை கால]ங்களில் ஆதி3க்ஷேத்ரமாய் ஸ்வயம்பு4வுமாந திருக்கோ-

07) [யிலை]யுடைய நாயநாரை தெ3ண்டன் பண்ணி இன்னாய-

08) நாற்கு ச0[க்தி] ப்ரதிஷ்டையில்லாமையில் திருக்காமக்கோட்ட நா

09) ச்சியாரை எழுந்தருளிவித்துத் திருப்ரதிஷ்டை பன்ணுவித்து நமக்கு [ப்

10) ராப்தமாய்] வருகிற காலிங்கராயப் பற்றில் மாநாமத்[துஸ நாட்டில் ல-

11) ச்சிகா[தி]புரம் இதுக்குள் நாலூர் வேச்சர்களுள்ளிட்ட நில-

12) மும் . . .றிதாயாளமு . . .ட்டும் இதில் மேநோக்கிய

13) மரமும் கீநோக்கிய கிணறும்பேருடரை நீக்கி குடிமக்களுள்பட

14) இந்நா[ச்சியார்க்கு திருபப்]படிமாற்றுக்கும் மண்டபக் கொற்று-

15) க்கும்சாந்த்3ராதி3த்தவரையும் செல்லக் கடவதாக ஹஸ்தோதகம் ப-

16) ண்ணிக் குடுத்தேன்இ .... லுள்ளாரழிவு படாமல்

17) ...ண்ண..ட்ட......ப் பெறுக்கிவுண்டார்கள் [ஆ]ய்

18) நடத்தவும் இதுக்கு . . . . ண்டாகில் காக்கையும் நாயும்

19) மாக . . டையார் பி... கெங்கைக் கரையிலாயிரங்

20) குரால் பசுவைக் கொன்றா[ர்பாவங்] கொண்டார்கள் ஆயிரம் ப்3ரா-

21) ஹ்மணரைக் கொன்றார் பாவ[ங் கொண்]டார்கள் மேலொரு ...

22) மாற்றம் விலங்குரைப்பார் .. காலிங்கராயரின் [சொல்படி] ... ...

23) த்தியஞ் செய்வார் செய்வித்தார்  (புஸ்பரெட்ணம், 11.12.2020 : 5)

 

இக்கல்வெட்டு கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்குரியது (புஸ்பரெட்ணம், 11.12.2020 : 5). சோழர் ஆட்சிக்காலம் முதல் ஐரோப்பியர் காலம் வரையிலான தமிழரின் பிராந்திய ஆட்சியுரிமை, நிருவாக ஒழுங்கு என்பன தொடர்பிலான செய்திகளை காட்டுகின்றது. அதுமட்டுமல்ல, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்ற கால பின்னணி, காலம், ஆட்சியேற்ற முதன்மை வம்சம் தொடர்பிலான முன்னைய வரலாற்று ஆய்வு முடிவுகளை மீள்பரிசீலனைக்குள் தள்ளியுள்ளது. தமிழகத்தின் கல்வெட்டு நிபுணர்கள், பேராசிரியர் கா.இந்திரபாலா, பேராசிரியர் சி.பத்மநாதன், பேராசிரியர் பொ. இரகுபதி, ஆகியோர் இக்கல்வெட்டினை ஆராய்ந்து தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

தென்னிந்தியாவில் நீண்;ட வரலாறு கொண்டிருந்த சோழ வம்ச ஆட்சி, தஞ்சையை தலைநகராகக் கொண்டு சுமார் 430 வருடங்கள் நீடித்திருந்தது. அவ்வரசு கி.பி. 10 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் பேரரசாக வளர்ச்சி கண்டிருந்தது. அக்காலத்தில் அண்மைய நாடான இலங்கை வரலாற்றின் சமூக, பொருளாதார, அரசியல் அம்சங்களில் பல மாற்றங்கள் புகுந்து கொண்டன. தமிழ் நாட்டு அரச வம்சத்தவர்களை வென்ற பின், சோழர் இலங்கை மீதும் தாக்குதல் நடாத்தினர். முதலாம் பராந்தகன் காலத்தில் தொடங்கிய மேலாதிக்க நடவடிக்கை, இராஜராஜசோழன் காலத்தில், இலங்கையின் வடக்கு பிரதேசம் கைப்பற்றப்பட்டது(கி.பி.993)(சதாசிவ பண்டாரத்தார்,1974:120). கி.பி.1012 இல் முதலாம் இராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் முழு இலங்கையும் வெற்றி கொள்ளப்பட்டு, தலைநகர் பொலனறுவைக்கு மாற்றப்பட்டது. அத்தலைநகருக்கு 'ஜனநாதபுரம்' என பெயர்குறிக்கப்பட்டதாக சோழர்காலச் சான்றுகளால் அறியமுடிகின்றது.

இராஜேந்திர சோழனின் கைப்பற்றுகையைத் தொடர்ந்து 77 ஆண்டுகள் இலங்கை சோழரின் நேரடி நிருவாகத்தில் இருந்துள்ளது. அவர்கள் தமது மூன்றாவது நிருவாக மண்டலமாக்கி அதற்கு 'மும்முடிச்சோழமண்டலம்' எனப்பெயரிட்டனர். வளநாடு, நாடு, ஊர் போன்ற நிருவாக அலகுகளும் இங்கு பின்பற்றப்பட்டிருந்தன. இக்காலப்பகுதியில் திருகோணமலை பிராந்தியத்தில் மட்டும் ஐந்து வள நாடுகள் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது(புஸ்பரெட்ணம், 11.12.2020 : 5). சோழர் ஆட்சிக்காலத்தில் திருகோணமலை முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ, வர்த்தக, நிருவாகத்தளமாக இருந்துள்ளது. குறிப்பாக இராணுவ நிலையமாக இருந்துள்ளது. பொலனறுவையை தலைநகராகக் கொண்ட சோழரின் ஆட்சி கி.பி.1070 வீழ்ச்சியடைந்தாலும் அவர்களின் ஆதிக்கம், நிருவாக முறைகள், பண்பாடு என்பன தமிழ் பிராந்தியங்களில் குறிப்பாக கிழக்கிலங்கையில் தொடர்ந்திருக்கலாம் என வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்( புஸ்பரெட்ணம், 11.12.2020 : 5, தங்கேஸ்வரி 2005:11-20) இதற்கு சான்றாக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கோமரன்கடவெலக் கல்வெட்டுத்தகவல்கள் அமைந்துள்ளன. பொலனறுவை வீழ்ச்சியடைந்து சிங்கள மன்னர்களின் ஆதிக்கம் நிலவிய காலத்திலும் கூட சோழரின் மேலாதிக்கமும் அவர்களின் நிருவாக முறைகளும் இலங்கையில் குறிப்பாக கிழக்கு பிராந்தியத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளன என்ற புதிய தகவலையும் இக்கல்வெட்டு காட்டுகின்றது.

இக்கல்வெட்டுக்குறிப்பின்படி, திருகோணமலை பிராந்தியத்துக்கு  பொறுப்பான ஆட்சியாளனாக குலோத்துங்கசோழக் காலிங்ககராயன் இருந்துள்ளான். அவன் சோழர்களின் படைத்தளபதியாகவும் இருந்திருக்கலாம். இந்த குலோத்துங்கசோழக் காலிங்ககராயன் கங்கராஜகாலிங்க விஜயபாகுவிற்கு பட்டாபிசேகம் செய்தான் என்ற செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இவன் மகோன் அல்லது காலிங்க மாகோன் என வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர் ( புஸ்பரெட்ணம், 11.12.2020 : 5, இந்திரபாலா, 28.11.2021:8). மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் காட்டும் மகோன் பற்றிய வரலாற்றுச் செய்திகளை, இக்கல்வெட்டு மற்றும் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள கருத்துகளோடு ஒப்பிட்டு முடிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 காலிங்க விஜயபாகு மகோன் : கங்கராஜ காலிங்க விஜயபாகு தேவர் எனக்குறிப்பிடப்பட்டுள்ள மன்னன் மாகோன். இவன் கங்க வம்சத்தை சேர்ந்தவன் என்பது முன்னரே தொல்லியல் ஆய்வாளர் தங்கேஸ்வரியால் முன் வைக்கப்பட்டதொரு கருத்து (தங்கேஸ்வரி 2005:11-20). அக்கருத்து இலக்கிய ஆதாரங்களை அடிப்படையாக வைத்து முன்வைக்கப்பட்டதாகும். இக்கல்வெட்டு செய்தியால் அக்கருத்து  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது முக்கியத்துவமுடையது.

இந்திய ஆட்சியில் கங்க வம்சத்தவர்கள் : புராதன காலம் முதல் இந்தியாவின் ஆட்சியாளர்களுள்  சிலர் தம்மை கங்கை வம்சத்தவர் எனக்கருதியவர்கள், கங்கராஜா என்ற பெயரைச் சூடியிருந்தனர். அதாவது இந்தியாவின் வர்த்தகம் ஊடாக அந்நாட்டின் செல்வாக்கு  தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவிய போது, அங்கிருந்த சில ஆட்சியாளர்கள் இப்பெயரை சூடியிருந்தமை பற்றி அறிய முடிகின்றது. கி.பி. 5ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் வியட்னாம் (சம்பா) ஆட்சியாளனாகவிருந்த முதலாம் பத்திரவர்மன் மகன் இப்பெயரைச் சூடியிருந்தான். இந்தியாவில் 12 ஆம், 16 ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சியிலிருந்த, முறையே ஹய்சாள (போசள) மன்னன் மற்றும் கர்ணாடகத்து உம்மத்தூர் நாயக்க சிற்றரசன் ஆகியோர் இப்பெயரை சூடியிருந்தனர். கிழக்கு இந்தியாவில் (ஒரிசா) ஆட்சி புரிந்த மானில ஆட்சியாளர்களை 'கீழைக்கங்கர்' எனவும் அழைப்பார்கள் (இந்திரபாலா 28.11.2021:8).

இதேபோன்று கி.பி.12,13 ஆம் நூற்றாண்டுகளில் பொலனறுவை அரசியலில் கங்க வம்சம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. பல இளவரசர்களும் இளவரசிகளும் கலிங்கத்திலிருந்து வந்த கங்க வம்சத்தை சேர்ந்தவர்கள். கல்வெட்டுக்களில் சிலரது வம்சம் குறிப்பிடப்பட்டுள்ளது. நிசங்கமல்லனின் இளவரசிகளில் ஒருத்தி 'கங்க வம்ச கல்யாண மகாதேவி எனக்குறிப்பிடபட்டுள்ளார். எனவே இக்கல்வெட்டில் கங்கராசா எனக்குறிப்பிடப்பட்டுள்ளவர் கங்க வம்சத்தை சேர்ந்தவர் என்பது இந்திரபாலாவின் வாதமாகும் (இந்திரபாலா 28.11.2021:8).

காலிங்க விஜயபாகு : காலிங்க விஜயபாகு என்ற பெயர் மாகனுக்கிருந்தமை பற்றி இலக்கியங்கள் காட்டுகின்றன. இச்செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் இக்கல்வெட்டில் அப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை முக்கியத்துமுடையது. இதுபற்றி தங்கேஸ்வரி சுமார் 15 வருடங்களுக்கு முன்பே, தமிழ் மன்னன் மாகோனின் மகத்தான வரலாறு என்ற தனது நூலில் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது (தங்கேஸ்வரி 2005:11-20). எடுத்துக்காட்டாக நிக்காய சங்கிரஹய என்ற நூலில் '......முதலாம் பராக்கிரமபாகுவிற்கு பின் பதினைந்து மன்னர்கள் ஆண்டனர். அவர்களின் பின் காலிங்க விஜயபாகு (காலிங்கமாகன்) பராக்கிரம பாண்டியனை சிறைப்பிடித்து, அவனைக்குருடாக்கி.....' (தங்கேஸ்வரி 2005:12). இப்படி பல விடயங்களை அவர் தனது நூலில் சுட்டிக்காட்டியிருந்தமை கவனத்தில் கொள்ளத்தக்கது.

தென்னிந்திய படைகளின் உதவி கிடைத்தமை : இக்கல்வெட்டு செய்திகளின்படி ஸ்ரீகுலோத்துங்கசோழ காலிங்கராயன் என்பவன் இங்கு இரண்டு முக்கிய செயல்களை சாதித்தான் எனக்கூறப்பட்டுள்ளது. ஒன்று அவன் ஈழத்தைக் கைப்பற்றினான். மற்றையது காலிங்க விஜயபாகு தேவர்க்கு வீராபிசேகம் செய்து வைத்தான். இவ்விரண்டு சம்பவங்களும் புதிய செய்திகள். மாகோன் தென்னிந்திய படைகளுடன் ஆட்சியைக்கைப்பற்றினான் என்பது இலக்கிய மூலங்களில் கூறப்பட்டுள்ளது. மாகோனுக்குதவியது தமிழ் படைகள், தமிழ் - கேரளப் படைகள், கலிங்கத்துப் படைகள் எனத்தெளிவற்ற கூற்றுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு செய்தியின்படி தென்னிந்திய படைகள் மாகோனுக்கு உதவியிருந்தன என்பது தெளிவாகின்றது(இந்திரபாலா 28.11.2018:8).

காலிங்கராயன் படைத்தளபதி : காலிங்கராயன் மாகனுக்கு உதவிய படைத்தளபதி. அவனது பெயரைக் கொண்டு அவன் சோழநாட்டைச்சேர்ந்த உயர்நிலை அதிகாரி. கல்வெட்டில் ஈழமண்டலம் 'எறிந்து' என்ற சொல் பயன்படுதப்பட்டுள்ளதனால், வெளியிலிருந்து வந்து, பொலனறுவை அரசை கைப்பற்றினான் என ஊகிக்கலாம் என்கிறார் இந்திரபாலா போன்ற முது நிலை வரலாற்று ஆய்வார்கள் (இந்திரபாலா 28.11.2018:8). இவன் மாகோனுக்கு வீராபிஷேகம் செய்து வைத்தான் என்ற செய்தியால், அவன் மாகோன்  கொண்டு வந்த கூலிப்படைகளின் தளபதியாக இருந்திருக்க முடியாது. ஆகவே மாகோன் கேட்டுக்கொண்டதற்கு அமைய, ஏற்கனவே பல முறை இலங்கை மீது படையெடுத்திருந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் படைகொடுத்து உதவியிருக்கலாம் என ஊகிக்கலாம் என்பது மற்றொரு கருத்தாகும் (இந்திரபாலா 28.11.2018:8).

படைத்தளபதி காலிங்க சக்கரவர்த்தி : கல்வெட்டு மற்றும் இலக்கிய தகவல்களின்படி பொலனறுவையை ஆண்ட இளவரசர்கள், இளவரசிகள் காலிங்க சக்கரவர்த்தி பரம்பரையைச் சேர்ந்தவர்கள். கல்வெட்டுக்களில் நிஜங்கமல்லன் தனது பெயரை 'காலிங்க சக்கரவர்த்தி' எனக்குறிப்பிட்டுள்ளமை சிறந்த உதாரணமாகும். எனவே பொலனறுவையை ஆண்ட கலிங்க மாகனும் இதே பரம்பரையைச் சேர்ந்தவன் என்று கொள்ளலாம். இதனால் மாகோன், விஜயவாகு காலிங்க சக்கரவர்த்தி என்ற என்ற விருது பெயரைச்சூடியிருக்கலாம் (இந்திரபாலா 28.11.2018:8).

மகோன் யாழ்ப்பாண இராச்சியத்தை தோற்றுவிதத்தான் :  கி.பி.13 ஆம் நூற்றாண்டில், மாகோன் பொலனறுவையைக் கைப்பற்றியமையானது இலங்கை வரலாற்றில் திருப்பு முனைச்சமவமாயிற்று. அதாவது இராஜரட்டை அரசியல் மையத்தைக் கைவிட்டு, சிங்கள இராசதானிகள் தென், தென் மேற்கு திசை நோக்கிய நகர்த்தப்பட்டன. மற்றையது யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம். இங்கு பேராசிரியர் இந்திரபாலா யாழ்ப்பாண இராச்சியத்தை தோற்றுவித்தவன் மாகோன் என்ற கருத்தை முன்வைத்துள்ளார் (இந்திரபாலா 28.11.2018:8). அவரின் கூற்று மேல் வருமாறு. 'மாகனுக்கு இருந்த எதிர்ப்பின் விளைவாக அவன் நீண்ட காலம் பொலனறுவையில் ஆட்சி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் அவன் வடக்கு நோக்கி நகர்ந்து, இறுதியில் தூர வடக்கில் தன் ஆட்சி பீடத்தை நிறுவினான். இவன் தொடக்கி வைத்த அரசு பின்னர் யாழ்ப்பாண இராச்சியம் என பெயர்பெறுகின்றது. இதன் தோற்றம் பற்றி தெளிவான விபரங்கள் கிடைக்காத காரணத்தால் இதை மட்டுமே ஊகிக்க முடிகிறது' (இந்திரபாலா 28.11.2018:8). இக்கருத்தை தனது நூலில் தங்கேஸ்வரி பல வரலாற்று இலக்கியங்களை ஆதாரமாகக் காட்டி, ஊகமாக கூறியுள்ளார்(தங்கேஸ்வரி 2005: 43-44,161)

எனவே கலிங்க மகோன் சோழப்டைகளின் உதவியுடன் பொலனறுவையைக் கைப்பற்றிக் கொண்ட கலிங்க, கங்க வம்சத்தவன் என்பதனை கல்வெட்டு உறுதிப்படுத்துகின்றது. இதன் ஊடாக நீண்ட காலமாக வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் இருந்து வந்த, கலிங்க மாகோன் யார் ? என்ற தசந்தேகம் முடிவுக்கு வருகின்றது.

இவனை பௌத்த – சிங்கள ஆவணங்களில் கொடூரமானவனாக சித்தரித்துள்ளன. இவன் பௌத்த சமயத்துக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள்தான அதற்கு காரணம். ஆனால் மட்டக்களப்பு தேசத்தோடு ஏற்படுத்தியிருந்த சமூக, சமய, அரசியல் தொடர்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. முழுக்க முழுக்க மட்டக்களப்பு பூர்வ சரித்திரக் குறிப்புகளில் மாத்திரம் தங்கியிருக்க வேண்டிய நிலை தொடர்கின்றது.

துணை நூற்பட்டியல்:

வடிவேல், இ., (ப.ஆ),      1993  கோணேசர் கல்வெட்டு, இந்து கலாசார

                              அலுவல்கள் திணைக்களம், கொழும்பு.

கமலநாதன்,சா.இ.,          2005  மட்டக்களப்பு பூர்வ சரித்திரம், கொழும்பு .

நடராசா, எவ். எக்ஸ். சி.,    1998  மட்டக்களப்பு மான்மியம், இரண்டாம்

பதிப்பு, மட்டக்களப்பு கலாசார பேரவை, மட்டக்களப்பு.

இந்திரபாலா, கா.,          2006,  இலங்கையில் தமிழர்,ஓர் இனக்குழு - ஆக்கம்      பெற்ற வரலாறு, .ஆ.மு.300 – பொ.ஆ. 1200, சென்னைஃகொழும்பு.

 தங்கேஸ்வரி, க.,           2005,  தமிழ் மன்னன் மாகோனின் மகத்தான

                        வரலாறு, சென்னை.

பத்மநாதன், சி.,            2004,  ஈழத்து இலக்கியமும் வரலாறும், கொழும்பு, சென்னை.

கோபால் வெல்லவூர்.,       2011,  மட்டக்களப்பு வரலாறு : ஒரு      அறிமுகம், மட்டக்களப்பு.

சதாசிவ பண்டாரத்தார்.சி.வை       1974, பிற்கால சோழர் வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

இந்திரபாலா, கா.,          1968,  'கிழக்கிலங்கைச் சாசனங்கள்' சிந்தனை 2, 2ரூ3,

                              ஜூலை, அக்டோபர், பேராதனை,பக்: 35 – 50.

சிவராம், த.,              2004,  'மட்டக்களப்பு குடியேற்ற மரபுகள்', வாய்மொழி                               மரபுகள் வரலாற்று மூலங்களாக, சித்திரலேகா                                     மௌனகுரு (ப.ஆ), கல்முனை, பக்: 57 – 74.

இந்திரபாலா.கா.,           27.11.2021    கலிங்க மாகன் பற்றிய முக்கிய

                                    கல்வெட்டு, தமிழ் மிரர், மட்டக்களப்பு

இந்திரபாலா.கா.,           28.11.2021    கலிங்க மாகன் பற்றிய கல்டெ;டு

                                    முக்கியத்துவம் பெறுவது ஏன்?,

                                    ஈழ நாடு, யாழ்ப்பாணம்.

புஸ்பரட்ணம்.ப.,           12.11.2021    'தமிழ் இராச்சியம் பற்றிய அரிய தமிழ்

                                    கல்வெட்டு திருகோணமலையில், தினகரன்,                                   கொழும்பு, ப 5.