ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

"சங்க இலக்கியத்தில் களவு காலத்துப் பெண்கள்”("Women of the Ganges Period in Sangam Literature”)

கட்டுரையாளர்: முனைவர். நா. ஹேமமாலதி, தமிழ்த் துறை தலைவர்,இணைப் பேராசிரியர், சாரதா கங்காதரன் கல்லூரி, புதுச்சேரி | நெறியாளர்: Dr. N.Hemamalathi, HOD & Associate professor of Tamil,Saradha Gangadharan college, velrampet Puducherry 08 Feb 2024 Read Full PDF

ஆய்வு சுருக்கம்:-
      "சங்க இலக்கியத்தில் களவு காலத்துப் பெண்கள்" என்ற தலைப்பில் ஆணாதிக்க அடிப்படையில் பெண்ணினத்தை அடிமைப்படுத்தும் விதம் காணமுடிகிறது.  எல்லா இலக்கியங்களிலும் ஆணை உயர்த்தி பெண்ணுக்கு அடிமை இழைக்க முயன்றுள்ளதையும் காண நேர்கிறது.  அதற்கு பழைய மரபுகள் மீதான மறுபரிசீலனையும்  மாற்றுக் கட்டமைப்பையும் காண முடிகிறது.  களவு காலத்தில் காதல்>  சுயநலத்தின் வெளிப்பாடு.  காதல் என்பது ஆண்  - பெண் இருபாலருக்கும் பொருந்தும். இருப்பினும் தொல்காப்பியம் வகுக்கும் காதல் வரையறைகளும் சங்கப்பாடல்கள் காட்டும் காதலும் ஆணின் சுயநல வெளிப்பாடாகவே அமைந்திருப்பதையும் காணமுடிகிறது ஆண் பெண்ணை விட உயர்ந்தவனாய் இருக்கலாம்.  ஆனால் ஒருபோதும் பெண் ஆணை விட எவ்விதத்திலும் உயர்ந்தவளாக இருக்கக் கூடாது என்பதிலேயே தெளிவாக இருந்திருப்பதையும்  ஐயப்படுபவன் ஆணாக இருக்க வேண்டும் என்பதையும்  ஆண் பெண்ணை விடச் சிறந்தவன் என்பதால் ஆணை 'சிறந்துழி' என்று அடைமொழி கொடுத்தும் அழைப்பதையும் காண முடிகிறது. ஆண் மட்டுமே பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை பெற்றவனாகவும் பெண்ணே ஆணுக்குரிய உடைமைப் பொருளாகவும் சங்கப்பாடல்கள் காட்டுகின்றன.
 

Study Summary:-

              In the topic "Women of the Colonial Period in Sanga Literature" we can see the subjugation of femininity on the basis of patriarchy. In all the literature, it is seen that the man has been elevated and the woman has been tried to be enslaved.It sees a rethinking of old traditions and an alternative framework. Love during the period is an expression of selfishness. Love is for both men and women. However, Tolkappiyam also defines love Sangha songs show that love is a selfish expression of man and man may be superior to woman.But it was clear that a woman should never be superior to a man in any way.It can be seen that the suspect must be a man and the man is given the epithet 'Chituruzhi' as he is better than the woman.Sangam hymns show that only the man has the right to choose the woman and the woman is the man's possession.
 

Keywords: 

ஆணாதிக்கம்,  களவு, காலம், அம்பல், அலர், வரைவுக்கடாதல், இற்செறிப்பு வெறியாட்டு, Patriarchy, period, ambal, alar, draft, concentration, frenzy,
 

முன்னுரை:-
        சங்க இலக்கியங்கள் பெண்களின் வாழ்வானது எங்ஙனம் ஆணாதிக்கத்திற்குத் துணை போகின்றன என்பதனை அறிய ஆர்வம் கொள்ளும் போது அதைப்பற்றிய தேடல் அவசியமாகிறது.  அதன் அடிப்படையில் "சங்க இலக்கியத்தில் களவுகாலத்துப் பெண்கள்"  என்ற தலைப்பில் சங்க இலக்கியத்தில் உள்ள ஆணாதிக்கப் போக்கை வெளிப்படுத்த முனையும் போது பழைய மரபுகள் மீதான மறுபரிசீலனையும்  மாற்றுக் கட்டமைப்பையும் இக்கட்டுரையின் வாயிலாக காண முயல்கிறது.
          பெண்ணின் தாய்த் தலைமை வீழ்ந்து தந்தையான் சமுதாயத்தில் ஆணாதிக்கம் வலுப்பெறத் தொடங்கிய பின்னரே  ஆண் -  பெண் விழைவுக்குப் பல பரிணாமங்களைக் கற்பிக்கும் கற்பனைகளும்  இலக்கிய இலக்கணங்களும் பிறந்திருக்க வேண்டும் என்பது பல்வேறு படைப்பாளர்களின் கருத்தாக இருந்திருப்பதையும் காணமுடிகிறது.
       ஆணாதிக்கத்தின் முழு வீச்சை அறிந்து கொள்வதற்கு ஆணாதிக்க சிந்தனைகளால் வளர்த்தெடுக்கப்பட்ட இலக்கண இலக்கிய> ஆக்கங்களை அறிந்து கொள்வது அவசியமாகிறது.
 

சங்க இலக்கியத்தில் களவுகாலத்துப்பெண்கள்:-                 

               சங்ககாலமே ஆணை உயர்ந்தவனாகவும்  பெண்ணைத் தாழ்வாகவும் கருத ஆரம்பித்துவிட்ட காலம் தான்.  எந்த சமூகத்தில் ஆண் சுயேச்சையாக வெளியில் இயங்குவதற்கு உரியவனாகவும்  பெண் குடும்பத்தைப் பாதுகாக்க மட்டுமே உரியவளாகவும் கருதப்படுகின்றனரோ  அது ஆண் வழிச் சமூகம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.  சங்க காலத்திலேயே இந்த நிலை நிச்சயமாக ஏற்பட்டிருப்பதை க. பூரணச்சந்திரன் தன் நூலிலும் குறிப்பிடுகிறார். (க. பூர்ணசந்திரன் கவிதை மொழி - நகர்ப்புறம் அமைப்பும். ப.31))
        காதலை சுயநலத்தின் வெளிப்பாடு என்பர் ஃப்ராய்ட். இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும். எனினும்  தொல்காப்பியம் வகுக்கும் காதல் வரையறைகளும் சங்கப்பாடல்கள் காட்டும் காதலும்  ஆணின் சுயநல வெளிப்பாடாகவே அமைந்திருப்பதைக் காண முடிகிறது.
       அகத்திணை என்பது ஐந்து திணைகளோடு கைக்கிளையையும் பெருந்திணையையும் உள்ளடக்கியதே எனினும் இதில் ஐந்திணையையே சிறப்புடையதாகத் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் போற்றுகின்றன.
      குறிஞ்சித் திணை பாடலின் உரிப்பொருள் புணர்தலும்  புணர்தல் நிமித்தமும். நல்லூழின் பயனாய் சந்திக்கும் ஆண் பெண் ஆகிய இருவருக்கும் காதல் உணர்வு ஏற்பட்டு முதலில் உள்ளப் புணர்வும்  பின்பு உடல் புணர்வும் ஏற்படுகின்றன. இதனை தொல்காப்பியர் 
     “ஒன்றே வேறு எந்றிரு பால் வயின்
          ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
          ஒத்த தலைவனும் தலைவியும் காண்ப
          மிக்கோன் ஆயினும் கடிவரை வின்றே "

                           (தொல்காப்பியம் களவியல் நூற்பா.25)
என்ற நூற்பாவில் விளக்குகின்றது.
     அக்காலத்தில் ஆண் பெண்ணுக்கு இடையில்  பத்து பொருத்தங்கள் இருந்தால்தான் காதல் செய்ய முடியும்  அப்பத்துப் பொருத்தங்களை மெய்ப்பாட்டியல் நூற்பா ஒன்று பட்டியலிடுகிறது. 
            "பிறப்பு  குடிமை ஆண்மை ஆண்டோடு
                    உருவு நிறுத்த காம வாயில்

          நிறையே அருளே உணர்வோடு

          திருவென முறையாகக் கிளந்த ஒப்பானது வகையே"
                                    (தொல்காப்பியம்  மெய்ப்பாட்டியல். நூற்பா.25)
     இத்தகைய ஒப்புமையில் ஆண் பெண்ணை விட உயர்ந்தவனாய் இருக்கலாம்.  ஆனால் ஒருபோதும் பெண் ஆணை விட 'எவ்விதத்திலும் உயர்ந்தவளாக இருக்கக் கூடாது என்பதிலே தெளிவாக இருந்திருக்கிறார் தொல்காப்பியர்.  பெண் உயர்ந்தவளாய் இருந்தால் ஆண் பெண்ணுக்கு அடங்கி நடக்கும் நிலை ஏற்பட்டு விடுமன்றோ.  அப்படி ஏற்பட்டு விட்டால் தந்தை வழிச் சமுதாயம் ஏற்படுத்தி வைத்த ஆணின் அதிகாரம் சரியத் தொடங்கி விடும் என்பதனால் ஆண் பெண்களுக்குச் சமமுடையவனாகவோ அல்லது அவனினம் உயர்ந்தவனாகவோ இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்திருக்கிறார்.
      ஆண் பெண் சந்திப்பில் காதல் உணர்வு ஏற்படும் என்ற தொல்காப்பியர்  அந்தச் சந்திப்பில் ஆண்தான் பெண்ணைப் பார்த்து தேர்வு செய்ய வேண்டும் என்கிறார்.  அவ்வாறு சந்தித்தபின்  தலைவியை விட உயர்ந்தவனாக தலைவனுக்குத் தான் ஐயம் ஏற்பட வேண்டும் என்று விளக்குகிறார் தொல்காப்பியர். ஐயப்படுபவன் தலைமகனாக இருக்க வேண்டும். தலைமகன் ஐயம் கொள்ளாதது ஏன் என்றால் அவன் ஐயப்பட்டால் தெய்வமோ என்று ஐயுறுதல் வேண்டும்.  அவ்வாறு நிகழும் போது அச்சம் வரும்.  அது காம நிகழ்ச்சிக்கு ஏதுவாக அமையாது என்று அவர் விளக்கமளிக்கிறார்.  நச்சினார்கினியர். ' மகடூஉவின் ஆடூஉச் சிறத்தல் பற்றிச் சிறந்துழி என்றார்.'  என்கிறார். அதாவது ஆண் பெண்ணை விடச் சிறந்தவன் என்பதால் ஆணை 'சிறந்துழி' என்று அடைமொழி கொடுத்து அழைக்கிறார். (தொல்காப்பியம்  களவு. நூ.41)
            இவ்வாறு வரையறை செய்வதனால் ஆணுக்கு மட்டுமே பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கியிருக்கிறார் என்பது புலனாகிறது.  ஏனென்றால்  நிலவுடமைச் சமுதாயத்தில் மற்ற பொருட்களைப் போலவே பெண்ணும் ஆணின் உடைமைப் பொருளாகக் கருதப்படுகிறாள். மேலும்  பெண் ஆணிற்கான போகப் பொருளாகப். படைக்கப்பட்டிருக்கிறாள்.  அதனால்  இன்பம் அனுபவிப்பது மட்டுமே ஆணின் செயல் அவனுக்குப் பெண்ணின் திருமணம் பற்றிய அக்கறை இல்லை.
      ஆண் பெண்ணிடத்தில் காதலைச் சொல்லுதல் இயல்பு ( நற்றிணை 94 அகநானூறு 330) அவ்வாறு ஆண் தன் காதலைச் சொல்லும் இடத்தில் நாணம் முதலிய காரணங்களால் தன் காதலைச் சொல்லாமல் இருத்தல் பெண்ணின் இயல்பு. ( ஐங்குறுநூறு 197 நற்றிணை 201 106 39) இவ்வியல்புகள் மட்டுமல்லாமல் பெண்ணே ஆணுக்குரிய உடைமைப் பொருளாகவும் சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.
         "வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது>  நீர்க்கு

     இனிதென்று உண்பவோ> நீர் உண்பவர்".

                                  ( கலித்தொகை 62:10-11)
நீர் வேட்கையுடையவர்கள் அந்நீரால் தன் தாகத்தைத் தனித்துக் கொள்கிறார்கள்.  அதனால் அந்நீருக்கு என்ன பயன்?  அது போல் தான் பெண்ணின் நிலையும் பயன் இருக்கிறதோ?  இல்லையோ?  ஆணின் ஆசையை நிறைவேற்றி விட வேண்டும்.  திருமணத்தில் நாட்டம் இல்லாத தலைவன் தன்னை ஏமாற்றி விடுவானோ என்ற அச்சத்தில் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டும் 'வரைவுக்கடாதல்' என்னும் துறையில் அமைந்த பாடல்களை அக நூல்களில் மிகுதியாகக் காண்கிறோம்.  குறிஞ்சித் திணைப் பாடல்களில் இத்துறையில் அமைந்த பாடல்களே பெரும்பான்மை.
         ஒரு பெண் தன்னுடைய காதலை ஆணிடம்தான் வெளிப்படுத்தக் கூடாதே தவிர>  தன் காதலைப் பெற்றோர்க்கு அவளே வெளிப்படுத்த வேண்டும்.  தலைவி தன்னுடைய காதலைத் தோழியிடம் கூற அவள் அதனை செவிலியிடம் சொல்லி செவிலி அதனை நற்றாயிடம் வெளிப்படுத்த தலைவியின் காதல் திருமணத்தில் முடிகிறது.  அறத்தோடு நிற்றல் என்னும் துறையில் அமைந்தப் பாடல்கள் இதனை உணர்த்துகின்றன.
        " அறம் எனப்படுவது பல பண்புகளையும் தழுவிய பொதுச் சொல்லாயினும்  ஈண்டு பெண்ணுக்குரிய முதற்பண்பான கற்பையே குறிக்கும்.  கற்பெனும் கடைப்பிடியில் நின்று களவொழுக்கத்தைப் பெற்றோருக்கு வெளிப்படுத்துதல் என்பது இத்துறையின் பொருள் "
என்பர் மூதறிஞர் வ. சுப.மாணிக்கம்.
    களவுக்கு பின் தலைவியின் உடல் வேறுபாடு அறிந்த அவள் தாய் முதலியோர் அவளுக்கு இம்மெலிவு முருகனால் ஏற்பட்டது என்று வேலனை அழைத்து வெறியாட்டு நிகழ்த்தும் மரபு இருந்தது.".(வ.சுப. மாணிக்கம் தமிழ்க் காதல் ப.68) இதனையும் தலைவியின் காதலை கற்பு நெறிப்படுத்தும் முயற்சியாகக் கொள்ளலாம்.
           தலைவியின் காதலினை அறிந்த தாய் முதலியோர் அவளை முன்பு போல் சுதந்திரமாக வெளியில் அனுமதிக்காமல் அவளை வீட்டின் உள்ளேயே சிறை வைத்தல் இற்செறிப்பு எனப்படும்.  இவ்வாறு இற்செறிக்கப்படும் காலத்தில் தன்னை வளர்த்த தாயைக் கூட 'நரகத்திற்கு போ' என்று திட்டும் அளவிற்கு இற்செறிப்பு கொடுமையானதாக இருந்திருக்கிறது.  பெண்ணிற்கு இடப்பட்ட கட்டுப்பாடுகளுள் இது குறிப்பிடத்தக்கது.
        ஒரு பெண்ணின் காதல் ஒழுக்கத்தைப் பற்றி ஊர் மக்கள் பேசிக் கொள்வது அலரெனவும் அதனை வாய்க்குள் பேசிக் கொள்வது அம்பல் எனவும் பொருள்படும்.
        

         "சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
                   மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி

         மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்றச்

         சிறுகோல் வலத்தனள் அன்னை".
                                       (நற்றிணை  149)
என்று ஊர்மக்கள் அம்பல் தூற்றுவதை எந்த தாயும் பொறுத்துக் கொள்வதில்லை என நற்றிணைப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.
       இதுவரை நாம் கண்ட வரைவுக்கடாதலும் அறத்தோடு நிற்றலும் வெறியாட்டும் இற்செறிப்பும் அம்பலும்  அலறும் பெண்ணோடு மட்டுமே தொடர்புடையவனாய் இருந்திருக்கின்றன.
       சங்கப்  பாடல்களைப் பொறுத்தவரை  எந்த ஆணும் களவு முடிந்த பின் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஒரு பெண்ணை வேண்டுவதில்லை.  தன் காதலைப் பெற்றோர்க்கு உணர்த்தி அறத்தோடு நிற்பதில்லை. களவுக்குப் பின் உடல் வேறுபட்டு வீட்டில் உள்ளவர்கள் அவனுக்கு வெறியாட்டு நிகழ்த்தும் அளவிற்கு நடந்து கொண்டதும் இல்லை. எந்த ஆணும் தன் காதல் வீட்டிற்குத் தெரிந்ததனால் வீட்டில் சிறை வைக்கப்பட்டதில்லை.  யாரும் பிறரால் பழித்தூற்றப்பட்டதில்லை.
        காதல் ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது என்றால் பெண்ணுக்கு மட்டுமே ஏன் இத்தனை கட்டுப்பாடுகள் ஏனென்றால் ஆண் சுதந்திரமானவன் பெண் ஆணிற்கும்>  இந்தச் சமூகத்திற்கும் கட்டுப்பட்டவள்.  இங்கே ஆணுக்கு வழங்கப்படும் சுதந்திரம் என்பது அவனுக்கு வழங்கப்பட்ட அதிகாரமாக கொள்ளப்படுகிறது.
துணை நின்ற நூல்கள்:-


1. கோவிந்தசாமிபிள்ளை இ ராம (பதி) தொல்காப்பியம் வெற்றிவேல்       

  அச்சகம்  தஞ்சாவூர்  1962.
2. தந்தை பெரியார் பெண் ஏன் அடிமையான ஆள்? பாரதி

  புத்தகாலயம்  சென்னை  மறுபதிப்பு  2006.
3. பூரணச்சந்திரன்.க. கவிதை மொழி தகர்ப்பும் அமைப்பும் சிந்தனா   

  பதிப்பகம் திருச்சிராப்பள்ளி 1998.
4. மாணிக்கம் வ.சுப. (மு.ஆ.) தமிழ் காதல்  மெய்யப்பன்

  தமிழார்வம் சிதம்பரம்  2002.
5. செல்வராசு அ. ஆண் ஆளுமையில் பெண் கற்பு எழில் திருச்சி

  2003.
6. பஞ்சாங்கம் க பெண்ணெனும் படைப்பு செல்வன் பதிப்பகம் புதுச்சேரி 1994.