அக்டோபர் 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சோழர்கால கலைப்படைப்பில் திருவேள்விக்குடி கோயில் (Tiruvelvikudi temple in Chola period art work)

ச.பாப்பாசெல்வம், முனைவர் பட்ட ஆய்வாளர், சிற்பத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 14 Sep 2024 Read Full PDF

ஆய்வு நோக்கம்

                    திருவேள்விக்குடி கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் முற்காலச் சோழர்களின் கலைப்படைப்பாகும். இக்கோயிலில் காணப்படுகின்ற கல்வெட்டுகள் மற்றும் இக்கோயிலின்மீது பாடப்பட்ட தேவாரப் பாடல்கள் வழியாகவும் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை வழியாகவும் இக்கோயிலின் வரலாறு, கலை, அரசியல், ஆன்மீகம் போன்றவற்றையும் இளம் தலைமுறையினர் அறிந்து கொண்டு இம்மண்ணின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் கலைகளை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம் ஆகும்.

ஆய்வுச் சுருக்கம்

                    திருவேள்விக்குடி கல்யாணசுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள சோழர் கால சிற்பங்கள், கல்வெட்டுகள் மிகத் தெளிவாகவும் நுணுக்கங்கள் நிறைந்த வேலைபாடுகளுடனும் அமைந்திருக்கிறது. இதில் இக்கோயிலின் வரலாறு, கட்டடக்கலை, சிற்பக்கலை, கோயில் விழாக்கள் மற்றும் கல்வெட்டுச் செய்திகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஆதாரத்தை கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

                    The Chola period sculptures and inscriptions in Tiruvelvikudi Kalyanasundereswarar temple are very clear and intricately carved. This article is written on the basis of sources including history, architecture, sculpture, temple festivals and inscriptions of this temple.

திறவுச்சொற்கள்

                    திருவேள்விக்குடி கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில், வரலாறு, கட்டடக்கலை, சிற்பக்கலை, குத்தாலம், மயிலாடுதுறை மாவட்டம்

                    Tiruvelvikudi Kalyanasundereswarar Temple, History, Architecture, Sculpture, Guthalam, Mayiladuthurai District

முன்னுரை

                    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்திலிருந்து வடக்கே 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருவிளக்குடி என்றழைக்கப்படும் பண்டைய திருவேள்விக்குடி என்னும் தேவாரப் பாடல்பெற்ற தலம். முற்காலத்தில் இது “குறுக்கை நாட்டு விடேல்விடுதி சதுர்வேதி மங்கலத்தில்”1 இருந்தமை கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. இன்று கடலங்குடி என்ற கிராமத்தில் அடங்கிய ஒரு சிற்றூராகத் திருவேள்விக்குடி விளங்குகிறது. “திரு” என்பது பாடல் பெற்ற தலங்களின் பெயர்களுக்கு முன்பாக வைக்கப்படும் அடைமொழி ஆகும்.2 காவிரி ஆற்றின் வடகரையில் உள்ள 23ஆவது சிவஸ்தலம் திருவேள்விக்குடி ஆகும். இக்கோயில் தஞ்சையை ஆட்சி செய்த சோழமன்னன் முதலாம் ஆதித்தன் காலத்தில் (கி.பி 907-971) கற்றளியாக எழுப்பப்பெற்று மன்னன் உத்தமசோழன் காலத்தில் (கி.பி 971-987) திருப்பணியைப் பெற்றுள்ளமையைக் கல்வெட்டுகளால் நாம் அறிய முடிகிறது.3 அதன்பிறகு முதலாம் இராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், இரண்டாம் ராஜேந்திரன், விக்கிரமசோழன் போன்ற மன்னர்களின் கல்வெட்டுகளும் இக்கோயிலில் உள்ளன.

                    திருஞானசம்பந்தர் தமது பதிகத்தில் திருத்துருத்தி என்றழைக்கப்படும் குத்தாலத்தையும் திருவேள்விக்குடியையும் (திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும்)  சேர்த்து மூன்றாம் திருமுறையில் ‘ஓங்கிமேல் உழிதரும் ஒலிபுனல்’4 எனத் தொடங்கும் பாடலோடு மொத்தம் 11 பாடல்களும், சுந்தரர் பாடிய ஏழாம் திருமுறையில் ‘மூப்பதும் இல்லை, பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை’5 எனத் தொடங்கும் பாடலோடு மொத்தம் 10 பாடல்களும், சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணத்தில் 190ஆவது பாடலாக இடம்பெறும் ‘மேவுபுனல் பொன்னி இருகரையும் சேர்த்து’6 என்ற பாடலும், 121ஆவது பாடலாக  இடம்பெறும் ‘எத்திசையும் தொழுதுஏத்த மத்தயானை’7 290ஆவது பாடலாக  இடம்பெறும் ‘அப்பதி போற்றி அகல்வார்’,8 291ஆவது பாடலாக  இடம்பெறும் ‘செழும் திருவேள்விக்குடியில்’9 எனத் தொடங்கும் பாடல்கள் போன்றவை இத்திருதலத்தோடு தொடர்புடையவை. இத்தலத்தில் இறைவன் பகலில் திருத்துருத்தியிலும் (குத்தாலம்) இரவில் திருவேள்விக்குடியிலும் எழுந்தருளியிருப்பதாகத் திருஞானசம்பந்தர் திருப்பதிகம் கூறுகின்றது. இறைவன் மணக்கோலத்துடன் விளங்கும் தலமாகும்.

தலபுராணம்

                    இறைவன் வாக்களித்தப்படி இறைவன் மணமகனாக எழுந்தருளித் திருமணம் புரிந்த தலம் திருவேள்விக்குடியாகும். இவ்வூர்க் கோயில் எதிரில் உள்ள கௌதுகாபந்தனத் தீர்த்தம் எனும் திருக்குளத்தில் இறைவனும், இறைவியும் நீராடி சகல தோஷ நீக்கத்திற்காக வேள்வி செய்தபிறகு, பிரம்மன் அக்கினி முன்பு வேள்வி யாக்க, இறைவனும் இறைவியும் திருமணம் செய்துகொண்ட தலம். அம்பிகைக்குத் திருமணக் கங்கணம் அணிவித்து, பிரம்மன் வேள்விகள் செய்து திருமணத்தை நடத்தி வைத்தார். தேவியின் திருமண தலமாதலின் இறைவி ஆனந்தத்தில் புன்னகை பூத்த வண்ணம் அருள் பாலிக்கிறாள். இறைவன் ‘மணவாளேஸ்வரர்’ எனவும் ‘கல்யாணசுந்தரேஸ்வரர்’ எனவும் அழைக்கப்பெறுகிறார். தெய்வத் திருமணம் நடந்த தலமாதலின் திருமணத் தடை நீங்கும் பிரார்த்தனைத் தலமாகவும் விளங்குகிறது.             

கட்டடக்கலை

                    திருவேள்விக்குடி கல்யாணசுந்தரேஸ்வரர் கோயிற் கருவறை கிழக்கு திசையை நோக்கி சதுர வடிவத்தில் அமைந்துள்ளது. கருவறையின் நடுவே சதுர வடிவிலான ஆவுடையார் மீது செங்குத்தாக அமைந்துள்ள சிவலிங்கம் மணவாளேஸ்வரர் என்னும் பெயரில் தற்போது வழிபாட்டில் உள்ளது.

                     சோழ மன்னர்கள் காலத்தில் கோயிற் கட்டடக் கலை தமிழகத்தில் உன்னத வளர்ச்சி அடந்தது எனலாம். ஒன்று முதல் பல தளங்கள் உடைய விமானங்கள் இக்காலக்கட்டத்தில் காண முடிகிறது. கோயில் விமானங்கள் போகம், பத்ரம், விசாலம், அவஸ்திகம், கரம், கண்டம், துங்கானை விமானம், சுத்த விமானம், விருத்தம், கல்யாணசுந்தர விமானம், கோசல விமானம், பத்ய பத்ர விமானம், கந்த விமானம் என 13 வகைப்படும். மேலும் விமானத்தின் உயர அமைப்புகளைக் கொண்டு சாந்திகம், பௌஷ்டிகம், ஜெயதம், அற்புதம், சார்வ சாமிகம் என 5 வகைகளாகப் பிரிக்கலாம்.10 தமிழகத்துக் கோயில் விமானம் என்பது பொதுவாக 6 அங்கங்களைக் கொண்டிருக்கும் . எனவே அது “ஷடங்க” விமானம் என அழைக்கப்படும்.11

சிற்பக்கலை

                    இத்திருக்கோயிலுக்குரிய சிற்பங்களை முற்காலச் சோழர் சிற்பங்கள், பிற்காலச் சோழர் சிற்பங்கள், நாயக்கர் மற்றும் மராட்டியர் காலச் சிற்பங்கள் என நான்கு வகைகளில் அடங்கும். இவற்றில் முற்காலச் சோழர் சிற்பங்களே எண்ணிக்கையில் மிகுந்துள்ளன. இங்குள்ள சோழர்காலச் சிற்பங்கள் பெரும்பாலும் சாம்பல் நிறக் கல்லிலும், இளஞ்சிவப்பு நிறத்தையுடைய கல்லிலும் தனியாகச் செதுக்கப்பட்டு உரிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறான சோழ மண்டலத்திலுள்ள முற்காலச் சோழர் சிற்பங்கள் இத்தகைய வண்ணங்களில் அமைந்துள்ளமையை இங்கு நினைவுக் கூறலாம்.

                    அதிலும் குறிப்பாக இக்கோயிலில் காணப்படுகின்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அர்த்த மண்டப தேவகோட்ட புடைப்புச் சிற்பங்களைக் காண்போம்.

அர்த்த மண்டபத் தேவகோட்ட புடைப்புச் சிற்பங்கள்

                    அர்த்த மண்டபக் கோட்ட மாடங்களில் இடம்பெற வேண்டிய சிற்பங்களைப் பற்றிச் சிற்ப நூல்கள் விரிவாக கூறுகின்றன. பொதுவாகத் தெற்குக் கோட்டத்தில் நின்ற கோல அல்லது நடனக் கோல விநாயகர் சிற்பங்களும், அர்த்த மண்டப வடக்கு கோட்டத்தில் மகிஷாசுரனின் எருமைத் தலை மீது நிற்கும் துர்க்கையின் வடிவமோ அல்லது சக்கரம் ஏந்தி நிற்கும் விஷ்ணுவின் வடிவமோ இடம்பெறுவது வழக்கம்.

                    பல்லவ மன்னன் இராஜசிம்மன் காலத்திய புகழ் வாய்ந்த கட்டடக் கோயில்களுள் ஒன்று காஞ்சி கைலாசநாதர் கோயில் ஆகும். பொ. ஆ. 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இக்கோயிலின் அர்த்த மண்டபச் சுவரில் பின்புறம் சிவனது தாண்டவக்கோலமும், வடக்கில் சிம்மவாகினியாகிய துர்க்கையின் சிற்பமும், அருகில் ஜேஷ்டா தேவியின் சிற்பமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இராஜசிம்மன் காலத்திய மாமல்லைக் கடற்கரைக் கோயிலிலும், பனைமலை தாளகிரீஸ்வரர் கோயிலிலும் சிற்பங்களை கோயிற் கோட்டத்தில் அமைக்கும் முறையினைக் காணமுடிகிறது. அடுத்து திருவதிகை வீராட்டாணம், திருத்தணி வீராட்டாணம் ஆகிய புகழ்பெற்ற பல்லவர் காலத்திய சிவாலயக் கோட்டங்களில் இவ்வாறு தெய்வ வடிவங்களின் அமைப்பு முறையைக் காணமுடிகிறது.

                    இதனைத் தொடர்ந்து சோழர்களும் சிற்பங்களை அமைக்கும் முறையில் பல்லவர்களின் கலைப்பாணியைப் பின்பற்றலாயினர். இதனை புள்ளமங்கை,12 புஞ்சை,13 திருவேள்விக்குடி,14 திருவாடுதுறை15 என இன்னும் பிற ஆதித்தசோழனது காலத்தியக் கட்டடக்கலை மரபின் வளர்ச்சியின் நிலையமாகக் கருதலாம். சான்றாக நடராஜர், அகத்தியர், விநாயகர் போன்ற சிற்பங்கள் இக்காலகட்டங்களில் கோயில் அர்த்த மண்டபக் கோட்டங்களில் இடம்பெற்றுள்ளமை முற்காலச் சோழர் காலக் கோயிலமைப்பு முறையினை அறிந்து கொள்ளவும், அடையாளம் காணவும் துணை புரிவன ஆகும்.

விநாயகர்

                    விநாயகரது இச்சிற்பம் பத்ம பீடத்தின் மீது நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இவரது இடைக்கால் பீடத்தின் மீது நேராக ஊன்றி நின்ற நிலையில் அமைய, வலக்கால் சற்று முன்னோக்கி வைத்த நிலையில் வைசாக ஸ்தானகத்தில் அமைந்து நிற்கக் காணலாம். மேற்கைகள் இரண்டும் அங்குசத்தையும் பாசத்தையும் பிடிக்கும் கடக முத்திரையில் அமைந்துள்ளது. கீழ் வலக்கை கடக முத்திரையில் தந்தத்தைப் பற்றியுள்ளது. இடக்கை மோதகம் என்னும் இனிப்பு உருண்டையை ஏந்திய நிலையில் காட்டப்பட்டுள்ளது.

                    இவரது தலையை புஷ்ப முகப்புடைய கரண்ட மகுடம் அலங்கரிக்கிறது. காதுகள் பக்கங்களில் விரிந்த நிலையில் காட்டப்பட்டுள்ளன. விநாயகரது துதிக்கை மேல் வயிறு வரை நீண்டு வலம்புரியாகக் காட்சியளிக்கிறது. துதிக்கையின் முனை சிறிய மோதக உருண்டையைப் பற்றியுள்ளது. மனித உடலும், யானை முகமும் கொண்டு எழிலாக நின்றகோலத்தில் வலம்புரி விநாயகர் இச்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இரத்தினப் பட்டம், தோல்வளை, பிறை வடிவமான கழுத்தணி, காப்பு, உதரபந்தம், புரிநூல், கடிபந்தம், அந்தரீயம், பாத சலங்கை ஆகிய அணிகலன்கள் விநாயகரின் உருவத்தை முடி முதல் அடி வரை அலங்கரிக்கின்றன. இவரது இடது தோளை அலங்கரிக்கும் புரிநூல் முத்துக்கள் கோர்த்த முத்துப் புரிநூலாக அமைந்து விளங்கக் காண்கிறோம். இச்சிற்பத்தினை முற்காலச் சோழர் சிற்பமாகக் கருதலாம். இவ்வாறாகக் காணப்படும் விநாயகரின் சிற்பத்தின் காலம் பொ. ஆ. 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி ஆகும். இச்சிற்பத்தின் உயரம் 88 செ. மீ ஆகவும், அகலம் 32 செ. மீ ஆகவும் காணப்படுகிறது.

நடராஜர்

                    திருவேள்விக்குடி திருக்கோயிலில் காணப்படும் நடராஜரின் சிற்ப வடிவம் இக்கோயில் அர்த்த மண்டபத்தின் தென்திசைக் கோட்டத்தில் அமைந்து அலங்கரிக்கிறது.16 நடராஜரின் வலக்கால் முயலகன் முதுகின் மீது குறுக்காக அமைந்து நிற்க, இடக்கால் எழிலாகத் தூக்கி விசிறிய நிலையில், நான்கு கரங்களுடன் ஆடும் கோலத்தில் காட்சியளிக்கிறது. இவரது மேல் வலக்கை உடுக்கையைக் கடக முத்திரையில் பற்றியுள்ளது. பொதுவாக நடராஜரின் வலக்கை டமரு முத்திரையில் உடுக்கையைப் பற்றிய நிலையில் காட்டப்படும். மாறாகச் சிற்பத்தின் மேல் வலக்கை கடக முத்திரையில் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நடராஜரின் இடக்கை அக்னியை அர்த்தசந்திர முத்திரையில் ஏந்தியுள்ளது. அபய முத்திரையில் உள்ள கீழ் வலக்கரம் மார்புக்குப் பக்கவாட்டிலும், இடக்கரம் மார்புக்குக் குறுக்கே நீண்டும் எழிலாகக் காட்சி அளிக்கின்றன. வேழ முத்திரையில் காணப்படும் கீழ் இடது கரம் உடைந்துள்ளது. இடது முன்கையில் நீண்ட நாகம் ஒன்று தன் வாலால் முழங்கையைப் பின்னி இடது திருவடியின் மீது சரிந்து ஆடும் நிலையில் மிக இயற்கையாகக் காட்டப்பட்டுள்ளது.

                    இங்கு ஆடும் பெருமான் தலையில் கொக்கு இறகினைச் செங்குத்தாகச் செருகி முடித்துள்ளார். கொக்கு இறகின் முன்புறம் கபாலம் காட்டப்பட்டுள்ளது. வலப்புறத்தில் ஊமத்தம் பூவும், இடப்புறத்தில் எருக்கம் பூவும், பிறைச் சந்திரனும் செதுக்கப்பட்ட நிலையில் விசிறியை ஒத்த எளிய மகுடம் அலங்கரிக்கிறது. பின்தலையின் பக்கங்களில் விரிசடைகள் வனப்போடு விரிந்துள்ளன. பக்கத்திற்குப் பத்து சடைக்கற்கள் வீதம் இரு பக்கங்களிலும் இருபது சடைக்கற்கள் பாங்குற விரிந்துள்ளன. பொதுவாகப் பிந்தையச் சோழர் கால நடராஜரின் வடிவங்களில் விரிசடையின் வலப்புறம் கங்கையும், இடப்புறம் பிறைச்சந்திரனும் காட்டப்பட்டிருக்கும். அதற்குச் சான்றாக திருவெண்காடு, மேலப்பெரும்பள்ளம் ஆகிய நடராஜரின் படிமங்களில் இதனைக் காணலாம். ஆனால் கங்கையும் பிறையும் இன்றி, விரிசடை மிக இயற்கையாக இங்கு காட்டப்பட்டுள்ளது. இது முற்காலச் சோழரது சிற்ப வடிவங்களை எளிதில் அடையாளம் காட்டத் துணை செய்கிறது.

                    ஆடும் பெருமானின் முடி முதல் அடி வரை பல்வகை அணிகலன்கள் அலங்கரிக்கக் காணலாம். நெற்றியைச் சுற்றிலும் பொற்பூக்கள் பதிக்கப்பட்ட முத்துப்பட்டம், கழுத்தில் மணிவடமும், முத்துவடமும், சரப்பளியும் அழகு செய்கின்றன. மேற்கைகளில் இலைக்கருக்கு முகப்புடைய தோல்வளையும், முழங்கையில் கடகவளையும் அணி செய்கின்றன. இடது மேல் தோள்களின் இடையே அங்கி எழிலாகச் சரிந்து நிற்கிறது. மேல் வயிற்றில் பட்டையான உதரபந்தம் இறுக்கக் கட்டப்பட்டுள்ளது. இடுப்பிலிருந்து மேற்தொடை வரை மெல்லிய ஆடைக்கட்டும், இடையைச் சுற்றிலும் அரைப்பட்டிகையும், இடைமணி, கடிபந்தம் ஆகிய இடை அணிகளும் அலங்கரிக்கக் காண்கிறோம். இடையில் உள்ள ஆடைக்கட்டு வலது தொடையின் முன்புறம் எழிலாகச் சரிந்து நிற்கிறது. கால்களில் பாதசரம் அழகு செய்கிறது. ஊன்றிய திருவடியின் கீழ் பக்கவாட்டில் தவழ்ந்து கிடக்கும் முயலகன் முகம் கீழ்நோக்கித் திரும்பி நிற்கிறது. இவனது காதுகளில் பத்திர குண்டலங்களும், தோள்களில் தோள்வளையும், மேல் வயிற்றில் உதரபந்தமும் அலங்கரிக்கின்றன. இவனது இடையின் பின்பகுதி சிதைந்துள்ளது. அவ்வாறு ஆடும் பெருமானின் வீசி நிற்கும் இடது திருவடி முற்றிலும் சிதைந்து நிற்கக் காண்கிறோம்.17 இச்சிற்பம் ஆதித்தசோழன் காலத்திய சிற்பக் கலைக்குச் சிறந்த சான்றாக திகழ்கிறது.18 இச்சிற்பம் ஆடுதுறை, புஞ்சை, கரந்தை, திருவாரூர், கோனேரிராஜபுரம் ஆகிய இடங்களில் உள்ள சோழர்கால ஆடும் பெருமானின் சிற்பங்களோடு ஒப்பிடத்தக்கது. இதன் காலம் பொ. ஆ. 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனலாம். இதன் உயரம் 1.04 செ. மீ, அகலம் 50 செ. மீ ஆகும். செவ்வக வடிவான பலகைகளில் முன்புறம் தனிச் சிற்பமாக செதுக்கப்பெற்றுள்ளது.

அகத்தியர்

                    அகத்தியரின் சிற்பம் திருவேள்விக்குடி திருக்கோயிலின் அர்த்த மண்டபத் தென்புறச் சுவரில் இடம் பெற்றுள்ளது. இச்சிற்பம் அர்த்த மண்டபத் தெற்குக் கோட்டத்தை அலங்கரிக்கும் நடராஜர் சிற்பத்திற்கு வலப்புறத்தில் இச்சிற்பத்தைக் காணலாம். முற்காலச் சோழர்கலைக்கு மிகச்சிறந்த உதாரணமாக இச்சிற்பத்தைக் கருதமுடிகிறது.

                    அகத்தியரின் இவ்வுருவம் உயர்ந்த பத்மபீடத்தின் மீது இடதுகாலை மடித்து வலதுகாலைத் தொங்கவிட்டு இரண்டு கைகளுடன் அமர்ந்தக் கோலத்தில் காணப்படுகிறது. இளஞ்சிவப்பு நிறத்தில் செதுக்கப்பட்டுள்ள இச்சிற்பம் தென்திசையை நோக்கிய வண்ணம் காட்சியளிக்கிறது. இவரது வலக்கை சின் முத்திரையில் உருத்திராட்ச மாலையைப் பற்றியுள்ளது. இவரது இடக்கை கடக முத்திரையில் கமண்டலத்தைக் கொண்டுள்ளது. கைப்பிடியுடன் நீண்ட குடுவை வடிவ கமண்டலம் இடதுதொடை மீது அமைந்து விளங்கக் காண்கிறோம். அகத்தியரதுத் தலையை நீண்ட ஜடா மகுடம் அலங்கரிக்கிறது. அணியின்றி நீண்ட தொள்ளைக் காதுகள் காட்டப்பட்டுள்ளது. முகத்தில் மீசையும் தாடியும் கொண்டு சதைப் பற்றுள்ள உடல்வாகும், பெருத்த வயிறும், குட்டையான அங்கமும் பெற்று வயது முதிர்ந்த நிலையில் அகத்தியரின் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

                    இவரது இடது மார்பில் புரிநூல் அலங்கரிக்கிறது. மேல் வயிற்றில் உதரபந்தம் வயிற்றுச் சுற்றி கட்டப்பட்டுள்ளது. இடுப்பில் இருந்து முழங்காலுக்கு கீழ்வரை எளிய ஆடைக்கட்டு அமைந்து அழகுசேர்க்கிறது. இவரது தலையை அலங்கரிக்கும் ஜடாமகுடமும், மீசையும் தாடியும் தரித்த முகமும், முதிர்ந்த உடல்வாகும், சரிந்த தொந்தியும், குட்டையான அங்கமும், கைகளில் உள்ள உருத்திராட்ச மாலையும், கெண்டியும் இவரை அகத்தியர் என அடையாளம் காட்டுகிறது.19

                    இச்சிற்பத்தின் அமைப்பு முறை, ஆடை அணிகலன் தோற்றம் யாவும் கொண்டு இதனை முற்காலச் சோழ சிற்பமாகக் கருதலாம். இதன் காலம் பொ. ஆ. 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி ஆகும். இச்சிற்ப வடிவம் சோழமண்டலத்தில் உள்ள காமரசவல்லி,20 புஞ்சை,21 திருவாடுதுறை,22 கோனேரிராஜபுரம்,23 கருத்தட்டாங்குடி,24 ஆச்சலேஸ்வரம்25 போன்ற இடங்களில் உள்ள சிற்பங்களோடு ஒப்பிடத்தக்கது. இவ்வாறு இத்திருக்கோயிலில் காணப்படுகின்ற அகத்தியரின் பழமையான இச்சிற்பத்தின் உயரம் 84 செ.மீ, அகலம் 44 செ. மீ என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டுகள்

                    திருவேள்விக்குடிக் கல்வெட்டுகள் பலவகையிலும் வரலாற்று முக்கியத்துவமும் புகழும் வாய்ந்தவை. இக்கோயிலில் ஏறத்தாழ 52 கல்வெட்டுகள் உள்ளன.26 சோழ மன்னர்களான கோவிராஜகேசரி வர்மன், கோப்பரகேசரி வர்மன், கோப்பரகேசரி உத்தம சோழன், முதலாம் இராஜராஜன். முதலாம் இராஜேந்திரன், இரண்டாம் இராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் இராஜராஜன் ஆகியோர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.

                    இராஜகேசரி வர்மனின் 3, 4, 15, 16 – ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளும், பரகேசரிவர்மனின் 12, 14 – ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளும், உத்தம்சோழனின் கல்வெட்டுகளும், முற்காலக் கல்வெட்டுகள். கி.பி 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மன்னன் பெயரிடப்படாத பல்வேறு கல்வெட்டுகளும் உள்ளன. இவற்றில் பல இக்கோயிலில் கட்டடப்பகுதிகள், கற்கள் ஆகியவற்றைக் கொடையளித்தது பற்றியும், துவார பாலகர்கள், தட்சிணாமூர்த்தி ஆகிய சிலைகள் அமைத்தது பற்றியும் கூறுகின்றன.

விழாக்கள்

                    திருவேள்விக்குடி கல்யாணசுந்தரேஸ்வரர் கோயிலில் தமிழ் மாதங்கள் சித்திரையிலிருந்து பங்குனி வரையிலான 12 மாதங்களும் விழாக்கள் நடந்த வண்ணம் உள்ளது. தமிழ் வருடப் பிறப்பு, விசாகம், வளர்பிறை சதுர்த்தி, நவராத்திரி, சோமவார நாட்கள், திருவாதிரை நட்சத்திரம், மகாசிவராத்திரி போன்ற நாடகள் சிறப்பானவை ஆகும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விமர்சையாக கொண்டாடப்படும் விழாக்களாக இக்கோயிலில் மகாசிவராத்திரியும், திருக்கல்யாண விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

தொகுப்புரை

                  திருவேள்விக்குடி கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில் சோழ மன்னன் ஆதித்த சோழன் (கி.பி. 907-971) காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் சோழர்கால சிற்பங்கள், கோயிற் சுவர்களில் காணப்படும் 52 கல்வெட்டுகள் போன்றவற்றின் மூலம் மன்னர்களின் வரலாறு, கட்டடக்கலை, சிற்பக்கலை, அழகுடன் அமைக்கப்பட்ட மண்டபங்கள் பற்றிய செய்திகளையும் மற்றும் விழாக்கள் தொடர்பான செய்திகளையும் அறிந்துகொள்ள முடிகிறது. இக்கோயிலில் அர்த்த மண்டபம், முக மண்டபம், நந்தி மண்டபம் மற்றும் திருச்சுற்றுப் பாதையில் உள்ள சிற்பங்கள் போன்றவற்றைவிட அர்த்த மண்டப புடைப்புச் சிற்பங்கள் மிகவும் பழமை வாய்ந்ததாகக் காணப்படுகிறது. மேலும் இச்சிற்பங்களின் வடிவத்தினையும் அவற்றில் கையாளப்பட்டுள்ள நுணுக்கங்களையும் இக்கட்டுரை எடுத்துக் கூறுகிறது.

 

புகைப்படங்கள்

 

  

   

   

 

      ராஜகோபுரம்                கருவறை                    கல்யாணசுந்தரர் சன்னிதி

        

     

     

 

               விநாயகர்                                  நடராஜர்                         அகத்தியர்

 

அடிக்குறிப்புகள்

 

1. A.R.E No. 133 of 1926.

2. ரா.பி. சேதுப்பிள்ளை, தமிழகம் ஊரும் பேரும், ப. 392.

3. மா. சந்திரமூர்த்தி, அர. வசந்தகல்யாணி, திருவேள்விக்குடி ஸ்ரீமணவாளேஸ்வரர்

    திருக்கோயில் வரலாறு, ப. 14.

4. வீ. சிவஞானம், திருஞானசமபந்தர் தேவாரம், முதல் பகுதி, ப. 572.

5. பு. ஷண்முகமுதலியார், தேவார பதிகங்கள், ப. 136.

6. பி.ரா. நடராஜன், பெரியபுராணம், இரண்டாம் பகுதி, பாடல் 190, ப. 255.

7. பி.ரா. நடராஜன், பெரியபுராணம், நான்காம் பகுதி, பாடல் 121, ப. 57.

8. பி.ரா. நடராஜன், பெரியபுராணம், மூன்றாம் பகுதி, பாடல் 290, ப. 136.

9. பி.ரா. நடராஜன், பெரியபுராணம், மூன்றாம் பகுதி, பாடல் 291, ப. 136.

10. மா. சந்திரமூர்த்தி, அர. வசந்தகல்யாணி, மு. கா. நூ, ப. 24.

11. அம்பை மணிவண்ணன், கோயில் ஆய்வும் நெறிமுறைகளும், ப. 87.

12. S.R. Balasubramaniam, Early Chola Temples, pl. 32.

13. Ibid, pl. 135 – pl. 141.

14. Ibid, pl. 240 – pl. 246.

15. Ibid, pl. 44 – pl. 48.

16. Ibid, pl. 244.

17. மா. சந்திரமூர்த்தி – அர. வசந்த கல்யாணி, மு. கா. நூல், ப. 88.

18. S.R. Balasubramaniam, Early Chola Temples, pl. 244.

19. Ibid, pl. 246.

20. Ibid, pl. 105.

21. Ibid, pl. 135.

22. Ibid, pl. 144.

23. Ibid, pl. 164.

24. Ibid, pl. 198.

25. Ibid, pl. 264.

26. தி.ஸ்ரீ. ஸ்ரீதர், தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 2004, பக். 65-153.