அக்டோபர் 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

இமயத்தின் செடல் கதாப்பாத்திரம் - ஓர் ஆய்வு | Sedal Character of Imayam - A Study

கட்டுரையாளர்: ரா.சந்தியா, முனைவர் பட்ட ஆய்வாளர், சமூக அறிவியல் மற்றும் மொழிகள் பள்ளி, வி.ஐ.டி. பல்கலைக்கழகம், வேலூர் 632014 | நெறியாளர்: முனைவர் அ.மரிய செபஸ்தியான், உதவிப் பேராசிரியர், சமூக அறிவியல் மற்றும் மொழிகள் பள்ளி, வி.ஐ.டி. பல்கலைக்கழகம், வேலூர் 632014 07 Oct 2024 Read Full PDF

Abstract

The term 'novel literature' often involves various complexities and seeks to find solutions rather than just citing examples. The social novel structure frequently discusses the position of Dalit people. Writer “Imayam”, who exposes the social structure of the Indian context, the lifestyle of common people, and the true face of casteism, has written the novel 'Sedal'. The main character of this novel, a woman named 'Sedal', separates from her family due to economic conditions. The aim of this study is to explain how she is psychologically affected by the cruelties imposed on her by society as a result of the life she leads after this separation." The study’s entire concept is depicted by the following chart that represents “Sedal’s Journey”.

Key words: sedal, Imayam, Novel, Kooththadi, selliyamman

 

திறவுச் சொற்கள்: கூத்தாடி, செடல், இமயம், நாவல், செல்லியம்மன்

முன்னுரை

நாவல் இலக்கியம் என்னும் சொற்கூறு பெரும்பாலும் பல வகையான சிக்கல்களை கொண்டிருந்தாலும், அதற்கு தீர்வு காணவும் வழிவகைச் செய்கிறது. சமூக நாவல் எனும் அமைப்பின் வழி தலித் இன மக்களின் நிலைப்பாடு பேசப்படுகிறது. இந்தியச் சூழலின் சமூக கட்டமைப்பையும், எளிய மக்களின் வாழ்வியலையும் சாதியத்தின் உண்மை முகத்தையும் வெளிக்கொணர்பவர் எழுத்தாளர் இமையம். அவர் எழுதிய “செடல்” நாவலின் முதன்மை கதாபாத்திரமான செடல் எனும் பெண் பொருளாதார நிலையின் காரணமாக குடும்பத்தை பிரிந்து வாழ்கிறாள். அதனால் அவளுக்கு சமூகத்தில் பல கொடுமைகள் அரங்கேறுகிறது. அதன் காரணமாக உளவியல் ரீதியாக செடல் எவ்வாறு பாதிக்கப்பட்டாள் என்பதை விளக்குவதே இவ்வாய்வின்  நோக்கமாகும்.

நாவல் வரலாற்றில் இமையம்

நாவல் வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் எழுத்தாளர் இமையம். அவரின் பெற்றோர் வெங்கட்டன் – சின்னம்மா ஆவார். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் அண்ணாமலை. ஆனால் தன்னுடைய இலக்கிய படைப்புக்காக இமையம் என்ற பெயரை வைத்துக்கொண்டர். இவர் இதுவரை ஏழு நாவல்களையும், நான்கு சிறுகதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதியப் படைப்புகளுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். “இவர் குறிப்பிட்டக் காலத்தில், குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட சமூகம் தான் வாழ்வதற்கு என்னென்ன நெறிமுறைகளை, ஒழுக்க விதிகளை மேற்கொண்டு இருந்தது என்ற அமைப்பை எழுதுவதுதான் இலக்கியம் என்கிறார். அதுமட்டுமின்றி சமூகத்தின் இழிவைப் பற்றி சொல்வதும், அதனை நேர்மையாக சொல்வதும்தான் உண்மையான எழுத்தாளனுக்குரிய பண்பு என்கிறார். மேலும், இவர் நாவல் எழுதுவதற்கான நோக்கமாக, மொழியை புதுப்பிப்பதற்கும், ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகம் எப்படி இருந்ததென்பதை சொற்களில் சேமித்து வைப்பதற்குமாக நாவல் இருக்கிறது என்று கூறுகிறார். மேலும், சமூகத்திலுள்ள அடையாளத்தை, கலாச்சாரப் பண்பாடாக பதிவு செய்யவேண்டும் என்பதற்காகவே இலக்கியத்தை எழுதுவதாகவும் கூறியுள்ளார்".1

நாவல் பிறந்த சூழல்

இந்த நாவலின் மையக் கதாபாத்திரமான செடல், கழுதூர் கிராமத்தை சார்ந்த கூத்தாடி கலைஞர். வறுமையின் உச்ச நிலையில் வாடும் குடும்பத்தில் பிறந்தவள். அதன் காரணமாக இவளது சிறு வயதின் போதே அக்கிராமத்தில் அமைந்திருக்கும் செல்லியம்மன் கோயிலுக்கு பொட்டுக்கட்டி விடப்படுகிறாள். தனது பிள்ளையைப் பொட்டுக்கட்டி விட விருப்பம் இல்லாதபோதும் கோயிலில் பசியாற்றிக் கொள்ளுவாள் என்பதற்காகவும், அவ்வப்போது தன் மகளுக்கு நல்ல உடைகள் கிடைக்கும் என்பதற்காகவும் செடல் இந்நிலைக்கு தள்ளப்படுகிறார். “ஒரு நாள் ஊரில் கருநாள் கொண்டாட்டம். அன்றைய தினம் செடல், இமையம் காலில் விழுந்து, ‘சாமி பொங்கல் காசு கொடுங்க’ என்றுக் கேட்டாள். உடனடியாக  அவர்  செடலுக்கு பத்து ரூபாய் எடுத்துத் தருகிறார். அவள் மீண்டும் சாமி நீங்களே பத்து ரூபா தந்தா நல்லதா என்று கேட்கவும், மீண்டும் ஒரு பத்து ரூபாய் தருகிறார் இமையம். அதன்பின் அவள், இமையத்தின் காலில் விழுந்து நன்றியைத் தெரிவிக்கிறாள். இமையம் தன்னுடைய சிறுவயதில்,  செடல் தெருக்கூத்தில் நடத்திய ஆடல், பாடல் மட்டுமின்றி அவள் கிருஷ்ணர் வேடம் கட்டி, சிறப்பாக ஆடியதையும் ரசித்திருக்கிறார். அவள் தெருக்கூத்திற்கு ஆட செல்வதற்கு முன்பே அவ்வூரில் உள்ள சில ஆண்கள் அவளை வன்புணர்வு செய்வதற்காக காட்டுக்குள் தூக்கிக்கொண்டு சென்று விடுவதையும் நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன்”.2 என்று நேர்காணலில் கூறுகின்றார். இவற்றையெல்லாம் எழுத்தாளர் நேரில் பார்த்தப் போதெல்லாம் இவருக்கு இந்த கதை எழுதத் தோன்றவில்லை. ஆனால் அவள் அந்த ஒரு நொடி இமயத்தின் காலில் விழுந்தபொழுது அவர், சாதாரண பெண் தரையில் படுத்துகிடைக்கவில்லை உலகில் மிக முக்கியமான கதாநாயகி தரையில் படுத்துகிடக்கிறாள் என எண்ணுகிறார்.  அப்போது அவளின் வறுமைத் தோய்ந்த வாழ்க்கையை இமையம் அவர்கள் ஒட்டுமொத்தமாய் அறிந்தமையால் இக்கதையை எழுதுகிறார்.

நாவல் இலக்கியத்தின் அறிமுகம்

Novel என்னும் ஆங்கிலச் சொல் Novella என்னும் இத்தாலியச் சொல்லினடியாகப் பிறந்தது. அது அண்மைக் காலத்தைச் சார்ந்ததும் உண்மையானதுமான புதுவகைத் துணுக்குக் கதைகளைக் குறிப்பதாகும்.Novella என்னும் இத்தாலியச் சொல் Noveilus  என்னும் இலத்தீன் பெயரடையாகப் பெற்றது. Novellus என்பது புதுமை என்னும் பொருள்படும் புனைகதை Fiction என்பதைக் குறிக்கும். தொடக்கக் காலத்தில் நாவல் என்னும் ஆங்கிலச் சொல்லை நவீனம், நவீனகம் என்று மொழிப்பெயர்த்து வழங்கினர். காலப்போக்கில் நாவல் ஒரு தமிழ்ச் சொல்லாகவே வழங்கப்படுகிறது. நாவல் என்னும் சொல் புதுமை என்னும் பொருள்படுதலின் அதனைப் "புதினம்" என மொழிப்பெயர்த்து வழங்குவர்.3

‘நாவல் என்பது மனித உணர்வுகள், எண்ணங்கள், செயல்கள் ஆகியவற்றை விளக்கிக்காட்டும் உரைநடையில் அமைந்த நீண்ட கதை’ என்று வெப்ஸ்டரின் புதிய இருபதாம் நூற்றாண்டு அகராதி விளக்கம் கூறுகிறது.4

பெண்ணியம்

பெண்ணியம் என்ற சொல் “Feminism" என்ற சொல்லின் தமிழாக்கம் ஆகும். "Feminism" என்ற ஆங்கிலச் சொல் "பெமினா" (Femina) என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து தோன்றியது.பெண்ணின் தாழ்வுற்ற நிலையை மாற்ற முயலும் அனைத்துப் போராட்ட முறைகளையும் உள்ளடக்கியது.5

“பெண்ணின் உரிமை என்பது உலகம் முழுவதும் பெண்களை ஆண்கள் ஒரே காலத்தில் இல்லாவிட்டாலும் பல்வேறு காலங்களில் அடிமையாக்கி இருக்கின்றனர். அதற்குச் சமூகச் சூழல், பொருளியல் காரணங்கள் மற்றும் மத வழியான நம்பிக்கைகள் காரணங்களாக இருந்திருக்கின்றன. பெண்கள் அவர்களின் உரிமைகள் பொருளாதாரம், சொத்துரிமை, மற்றும் திருமண உறவு ஆகிய வழியில் மறுக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டுள்ளனர்”.6 இந்நிலை அனைத்தும் செடலுக்கு நடக்கிறது. சமூகச் சூழலினால் பொருளாதார நிலையிலும், மத வழி நம்பிக்கையின் காரணமாக இயல்பான நிலையிலும் ஒரு பெண்ணுக்குரிய வாழ்க்கை செடலுக்கு மறுக்கப்படுகிறது.

தலித் பெண்ணியம்

மனிதர்கள் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு பார்த்ததே தலித் இலக்கியம் உருவானதற்கு முக்கியக் காரணமாகும். பெண்ணியம் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது பாலினப் பாகுபாடு. தற்போது தலித்தியமும் பெண்ணியமும் ஒன்றிணைந்து "தலித் பெண்ணியம்" என்ற புதிய இலக்கிய வடிவம் உருவாகியிருக்கிறது.7 சமூக இழிவுகளைப் பற்றிப் பேசுவதும், இழிவுகளைப் பேசி சமநீதியைப் பெறுவதும்தான் தலித் இலக்கியம். ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், இழிநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் என எல்லாச் சூழ்நிலைகளிலும் தள்ளப்பட்ட மக்களின் நிலையைச் சமூகம் வெளிக்கொண்டு வருவதே தலித் இலக்கியத்தின் தன்மையாகத் திகழ்கிறது. வரலாறு தலித் மீது தொடுத்துக் கொண்டிருக்கிற சகலவிதமான வன்முறைகளுக்கும் அவற்றைச் செய்துக் கொண்டிருக்கிற அதிகாரத்திற்கும் எதிரான குரலாக தலித் இலக்கியம் ஒலிக்க வேண்டும்.8

அனைத்து சாதிய மோதல்களிலும் அதிகமாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தான். ஆதிக்க சாதியினர் அடக்குமுறைகளைக் கையாளும் பொழுது, தாழ்நிலை ஆண்கள் அனைவரும் ஊரைவிட்டு வெளியேறி விடுகின்றனர். பெண்களும்,  பிள்ளைகளும் பாதிக்கப்படுவார்களே என்ற சிந்தனையின்றி தாங்கள் தப்பித்துக் கொள்கின்ற நிலை அதிகமாக உள்ளது. இப்படி தலித் ஆண்கள் பொறுப்பற்ற நிலையில் இருக்கும்போது ஆதிக்க சாதியினரின் வன்முறை தலித் பெண்கள் மீது அத்துமீறிச் செய்யப்படுகிறது. இறுதியில் பிரச்சனைகள் ஓயும்போதோ, சமாதானம் அடையும்போதோ தலித் பெண்களுக்கு எதிராக ஏற்பட்ட வன்முறை என்பது ஒரு பொருட்டாகவே கருதப்படுவதுமில்லை, பேசப்படுவதுமில்லை. தலித் இயக்கங்களும் இவற்றினை பெரிதாகக் கருதுவதில்லை.9 சமூகத்தில் பெண்கள் அனைவரும் பொருளாதார நிலையிலும், சமூகச் சூழலிலும் ஒரே நிலையில் இருப்பதில்லை. சாதியின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட பெண், பிற பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விட கூடுதலான சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. இதனை தலித் பெண்ணியம் எனக் கொள்ளலாம்.

செடலின் சமூகச்சூழல்

ஒட்டுமொத்த சமூகத்தின் நலனைக் கருதி ஒடுக்கப்பட்ட இனத்தின் மீது வளைந்து  நிற்கக்கூடிய ஒரு பண்பாட்டுச் சமய அதிகார செயல்களாகத்தான் இந்த பொட்டுக்கட்டி விடுதல் சடங்கையும் பார்க்க முடிகிறது. செடல் நாவலில் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தை மட்டுமே எழுத்தாளர் பதிவு செய்துள்ளார். தீண்டாமை ஒருப்புறம் இருப்பினும் சாதியைத் கடந்து, குறிப்பாக சமய சடங்குகள் சார்ந்து பாதிக்கப்படுவதும் பெண்கள் தான் என்ற கருத்து வெளிப்படுகின்றது. பொட்டுக்கட்டி விடுதல் மூலம் செடலுக்கு மற்றப் பெண்களைப் போல இல்லாமல் இயல்பு வாழ்க்கை, தனிப்பட்ட ஆசைகள், உரிமைகள் மறுக்கப்படுகிறது. இதன் நிமித்தம் ஒரு பெண்ணுக்கான சுதந்திரம் இங்கு கேள்விக் குறியாக்கப்படுகிறது. சமக்காலத்தில் அனைவரும் சமம் என்ற கருத்தாக்கல் முன்னிலை படுத்தப்படும் நிலையில், இச்சமூகத்தில் தாழ்த்தப்பட்டப் பெண்ணுக்கு ஒரு நீதியும், மற்றப் பெண்களுக்கு ஒரு நீதியும் நடைமுறையில் இருக்க, செடல் இக்காலச் சூழலில் இவ்விதிமுறைகளினை எதிர்க்க இயலாமல் இந்தக் கொடுமைகளை விதி என்று ஏற்று வாழ்கிறாள்.

பொட்டுக்கட்டுதல்

ஏழு வயது முதல் பதினொரு வயது முடிவதற்குள்  பெண்ணிற்குப் 'பொட்டுக்கட்டுதல்' என்னும் சடங்கு நடத்தப்படுகிறது. இதன் உட்பொருள் தெய்வத்திற்கு அப்பெண் மனைவியாக்கப்படுதல் என்பதாகும். இது புனிதத் திருமணமாகக் கருதப்பட்டது. இதற்கென்று அக்கோவில் தலைமைப் பூசாரி அப்பெண்ணின் கழுத்தில் திருமண அடையாளச் சின்னமான தாலிக் கயிற்றைப் பெண்ணின் கழுத்தில் அணிவித்து அவளைக் கோவிலுக்குரியவளாக்குவார். இச்சடங்கு அக்காலத்தில் நடைபெற்ற திருமணங்களைப் போன்றே உற்றார் உறவினர்கள் புடைசூழ மேளதாளங்களுடன், பக்திப் பரவசத்துடன் நடைபெற்று வந்தது. இத்திருமண சடங்கிற்குப் பின்னரே அப்பெண் அக்குறிப்பிட்ட கோவிலுக்குரிய 'தேவதாசி'  என்று அங்கீகரிக்கப்படுவாள். அந்தப் பெண் ஏற்கெனவே ஒரு தேவதாசியின் மகளாகவே இருப்பினும், அவளும் இந்தப் பொட்டுக் கட்டுதல் என்ற மரபை நிறைவேற்றிய பிறகே தேவதாசியாக ஏற்கப்படுவாள். இவ்வழக்கம் சோழர்கள் காலத்திலிருந்து இருந்து வந்துள்ளது.10

பொட்டுக்கட்டிய பின்னர் அப்பெண்ணிற்கு இசை, நடனம் போன்ற கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. நடனக்கலையில் தேர்ச்சி பெற்றதும், குறிப்பிட்ட நாளில் அரசன் முன்னிலையில் அரங்கேற்றம் நடைபெறும். அவர்களது திறமைகளுக்கு ஏற்ப சிறந்த பட்டங்களும், வெகுமதிகளும் அரசர்களால் வழங்கப்படுகின்றன. பொதுவாக எந்தக் கோயிலுக்கென்று பொட்டுக்கட்டப்பட்டாளோ அந்தக் கோவிலுக்கு மட்டுமே அவள் தேவதாசியாக பணிகளை மேற்கொள்வாள்.11 இந்த பொட்டுக்கட்டி விடும் சடங்கு முறைகள் அனைத்தும் செடலுக்கும் நடைபெறுகிறது.

செடலின் பொருளாதாரச் சூழல்

ஒடுக்கப்பட்ட சாதியின் கூத்தாடி குடும்பத்தை சார்ந்த கோபால்,பூவரும்பு தம்பதியருக்கு செடல் எட்டாவது பெண்ணாகப் பிறக்கிறாள். அவள் பிறந்த நேரத்தில் ஊரில் மழை இல்லை, எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இதன் காரணமாக அந்த ஊர் சிறு தெய்வமான செல்லியம்மனுக்கு பொட்டுக்கட்டி விடும் பழக்கம் நிலவி வந்தது, ஊருக்காக செடல் சிறு வயதிலேயே பொட்டுக்கட்டி விடப்படுகின்றாள்.

"சாமி என்னிக்குமே சாவப்போறதில்லெ.

ஒம் மவளும் தாலியறுக்கப்போறதில்லெ.

சாமி செத்தாத்தானெ தாலியறுக்க?

ஒம் மவ சுமங்கலிதான் சாவற முட்டும்"12 ( செ.நா.1)  

ஊரார் இவ்வாறு செடலின் தாயான பூவரும்பிடம் கூற, வறுமையின் காரணமாக அவள் தாயும் அதற்கு வேறு வழி இல்லாமல் ஒப்புக்கொள்கிறாள். பொட்டுக்கட்டி விடுதல் என்றால் என்னவென்று அறியாமல் இருக்கும் வயதில் அந்த நிலைக்கு தள்ளப்படுகிறாள். மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரை வறுமையின் காரணமாக பத்து ரூபாய்க்கும், பழையப் புடவைக்கும் ஒரு தேவதாசியிடம் அவரது பெற்றோர்கள் விற்றனர். அதேப்போல் வறுமையின் காரணமாகவும், ஊருக்காகவும் தன் மகளைப் பொட்டுக்கட்டி விடப்படும் நிகழ்வினை இந்த நாவலில் நாம் காண முடிகின்றது. செடல், கோவிலில் உள்ள கிழவியுடன் தான் தங்க வேண்டும் என்ற நிலை உள்ளது. செடல் தன் குடும்பத்தை பிரிந்து கோவிலுக்குப் போகமாட்டேன் என்று கூறும் போது பூவரும்பு கட்டுப்படுத்த முடியாமல் முந்தானையால் முகத்தை மூடிக் கொண்டு அழுதாள். பொட்டுக்கட்டி விடப்பட்ட நிலையில் தன் மகளுக்கு ஆறுதல் சொல்ல முடியாத நிலையில் இயலாமையால் தாய் அழுகிறாள். இந்த பதிவின் வழி பூவரும்புக்கு செடல் மேலுள்ள பாசம் வெளிப்படுகிறது. இதனை கீழ் உள்ள வரிகள் விளக்குகிறது.

 

செஞ்சி மலையினிலே

செல்லியம்மன் கோயிலம்மா

சீமான் பொறப்பான்னு

சிவபூசை செய்தனம்மா

சீமான் பொறக்கலியே

சிறுமி பொறந்தாளம்மா

சீதெ பட்ட துன்பமெல்லாம் இந்தச்

சிறுமி படப்போறாளம்மா

காடு மலையினிலே

காளியம்மன் கோயிலம்மா

கர்ணன் பொறப்பான்னு

கடும்பூசை செய்தனம்மா

கர்ணன் பொறக்கலியே

கள்ளி பொறந்தாளம்மா

கர்ணன் பட்ட துன்பமெல்லாம் இந்தக்

கள்ளி படப்போறாளம்மா.”13(செ.நா.23)

தான் பெற்ற மகள் படவிருக்கும் துயரங்களையும் அவள் எதிர்கொள்ளும் சூழலை பூவரும்பு கூறுகிறாள்.  தனக்கு ஆண் மகவு இல்லை, பெண் மகவு பிறந்ததாள் என்றும், அசோகவனத்தில் சீதை ராவணனால் சிறை வைக்கப்பட்டபோது அவளை அரக்கியர்கள் பல வகைகளிலும் துன்புறுத்தினர். ஆனால் அதற்காக சீதை அவர்களிடம் கோபப்படவில்லை. மாறாக மிகவும் பொறுமையுடன் அத்தனை துன்பங்களையும் சகித்துக் கொண்டாள். தனக்கு ஏற்படும் துன்பங்கள் அனைத்து தனது வினைப்பயன் காரணமாகவே ஏற்படுகிறது என நம்பினாள், மகாபாரதத்தில் குந்தி தன் குழந்தையான கர்ணனை ஒரு கூடையில் வைத்து கங்கை ஆற்றில் விட்டு விடுகிறாள். இங்கு குந்தி பிறரது பழித்துரைப்புக்கு அஞ்சி தான் பெற்றப் பிள்ளையை பிரிகின்றாள். இவ்விரண்டு புராணகதைகளைத் தான் பூவரும்பு செடலின் வாழ்வில் இணைத்துச் சொல்கிறாள். சீதையும், கர்ணனும் உறவுகளைப் பிரிந்து துன்பப்படும் நிலைதான் செடலுக்கும் நிகழ்கிறது. தன்னுடைய குடும்பத்தை பிரிந்து அவள் படும் துன்பத்தை இப்பாடலின் வழி உணரமுடிகிறது. இச்சமூகத்தில் சாதியமைப்பு, அதிக குழந்தைகள், பொட்டுக்கட்டுதல், வறுமை, நிரந்தர வருமானமின்மை போன்ற காரணங்களே செடலின் வாழ்க்கைச் சூழலை மேன்மேலும் சிக்கலுக்குரியதாக்குகின்றன.

செடலின் உளவியல் சூழல்

பாசத்திற்காக ஏக்கி தவிக்கும் செடலுக்கு மகிழ்ச்சியான சூழல் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில் அவ்வூரில் பஞ்சபட்டினி நிலை ஏற்படுகிறது. அங்குள்ள மக்கள் அனைவரும் பிழைப்பதற்காக ஊரை விட்டுச் செல்ல, செடலின் குடும்பத்தில் உள்ளவர்களும் பிழைப்பதற்காகச் சென்று விடுகிறார்கள். இதை அறிந்துக் கொண்ட அவள் மிகவும் மனம் நோகிறாள். பின்பு இதனை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் போது செடலை வளர்த்து வந்த மூதாட்டியும் இறந்து விடுகிறார். அனைவரையும் இழந்து தனிமரம் ஆனப் பிறகு ஆறுதல் கூறிடத் தாயும் இல்லை, தைரியம் தந்திட தந்தையும் இல்லை, பாதுகாப்பிற்கு உடன்பிறந்தவர்களும் இல்லை, உடன் இருந்தவர்களும் இல்லை, இந்நிலையில் பெண்ணாய் பிறந்த அனைவருக்கும் மகிழ்ச்சித் தரக்கூடிய முதல் சடங்கு செடலுக்கும் ஏற்படுகிறது. அன்றிரவு தங்கியிருந்தக் வீட்டின் கூரை கிழிந்த நிலையில் அவள் பூப்படைகிறாள். அச்சமயத்தில் செடல் இந்நிகழ்வை யாரிடம் சொல்வது, எப்படி சொல்வது என்று தெரியாமல் இருக்கிறாள். யாரும் உதவாத நிலையில் இனி என்ன உள்ளது என் வாழ்வில் எல்லாம் இழந்த பின்பு இந்த ஜீவன் மட்டும் ஏன் உயிர் வாழவேண்டும் என்று நினைத்துக் கதறி அழுகிறாள். இச்சமயத்தில் அவளுக்கு வாழ்வா, சாவா என்று இரு மனம் உள்ளது. அந்நிலையில் அவள் சாகும் நிலைக்கு தள்ளப்படுகிறாள். பின்பு பழைய நினைவுகளை எண்ணிப்பார்த்து வாழவேண்டும் என முடிவெடுக்கிறாள். பொன்னனின் வருகையால் அவள் வாழ்வில் மாற்றம் ஏற்படுகிறது. கோயிலில் தனிமையான நிலையில் வாழ்ந்துக் கொண்டுடிருந்த செடல்  மறுபடியும் கூத்தாட செல்கிறாள். இவையெல்லாம் அவள் வாழ்வதற்கானப் போராட்டத்தை காட்டுகிறது. அதன்பின், கூத்தாடி கலைஞர்களிடம் சேர்ந்து ஒரு நிலைக்கு வந்தப்பின் செடல் பாலியல் ரீதியாக பல துன்பங்களை எதிர்கொள்கிறாள். இத்துன்பங்களையெல்லாம் தன் தோழியான விருத்தாம்பாள் அவளிடம் மனமுடைந்து உடலில் ஏற்பட்ட காயத்தைப் பார்த்து தன் பெற்றோர்களை நினைத்து பின்வருமாறு அழுகிறாள்.

“வெள்ளிக்கிழமயில என்னெப் பெத்தியே மாதாவே,

உன் வெள்ளி வயித்திலியும் நான் கருவா தரிச்சதும்

பச்ச கற்பூரமெல்லாம் தீஞ்சதும்

அன்னிக்கி இந்தக் கருவக் கலச்சியிருந்தா

எனக்கு இன்னிக்கி இந்தக் கலகம் வந்து நேராது

அந்தக் கருவ சிசுவாக்கி இந்தப் பொல்லாத சீமையில

என்னெக் களங்கப்பட வச்சியம்மா... ஆகுங்ங்ங்...

நொண்டியா,மொடமா,செவிடா,நொள்ளயாப் பொறக்கிறதும் பொட்டல் யாப்பொறக்குறதும் ஒண்ணுதான்'என்று சொல்லி அழுதுகொண்டிருந்தாள்.”14(செ.நா.147-148)

 

இப்படியெல்லாம் அவள் பல இன்னல்கள் சந்திக்கும் பொழுது அவள் அங்கிருந்து வெளியேறவும் முடியாமல், வன்புணர்வு செய்பவர்களை எதிர்த்து கேட்கவும் முடியாமல் சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்தவள் தான் செடல். இக்கதையில் வரும் செடல் கதாபாத்திரம் மன உளைச்சல், சகிப்புத்தன்மை ஆகிய வலுவான உளவியல் அம்சத்தை சித்தரிக்கிறது. இந்த துறையில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்களின் கூற்றுப்படி பின்வரும் கருத்து பல்வேறு உளவியல் சிக்கல்கள் மற்றும் மனநோய்களுக்கு வழி வகுக்கும் முக்கிய காரணியாக அமைகிறது. ஏனெனில் அவள் அனைத்து உள் மற்றும் வெளிப்புற எதிர்மறை நிகழ்வுகள் மற்றும் பல துயரங்களையும் தாங்குகிறாள். மேலும், சகிப்புத்தன்மையினால் உணரப்பட்ட திறன் நிச்சயமற்ற தன்மை, தெளிவின்மை, எதிர்மறை உணர்ச்சி நிலை, விரக்தி மற்றும் உடல் உணர்வு ஆகிய ஐந்து குணாதிசயங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.15  இந்த அம்சங்கள் அனைத்தும் செடல் என்ற கதாபாத்திரம் மூலம் தெளிவடைகிறது. இந்நிலையை வள்ளுவரும் கூறியிருக்கிறார்.

 

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.16(குறள் 597)

 

போர்க்களத்தில் பல காயங்களால் களிற்று யானை துன்பமுற்ற நிலையில் இருந்தாலும், அதன் வீரமும் அதன் பெருமையும் அழியப்போவதில்லை. அதுப்போன்று செடல் என்ற பாத்திரப்படைப்பு நாவல் முழுவதும் பல துயரங்களை தாங்கினாலும் அவள் பெருமையை இழக்கப்போவது இல்லை. இதேப்போன்று சமூகத்திலுள்ள பெண்களும் பல  வகையான சிக்கல்களை அனுபவித்தாலும், எதிர்மறையான இடர்பாடுகளை சந்தித்தாலும் அவர்கள் என்றுமே பெருமைக்குரியவர்களே என்பதனை இந்த நாவல் நமக்கு மறைமுகமாக எடுத்துக்கூறுகிறது. 

தொகுப்புரை

மனித வாழ்க்கையில்  ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குத் தானே போராட வேண்டிய பல சூழல்கள் ஏற்படுகிறது. இந்த போராட்ட நிலையை குடும்ப அமைப்பு மற்றும் சமூகச்சூழல் சார்ந்த நிலை என இருவகைப்படுத்தலாம். இவ்விரு நிலைகளையும் இந்த நாவலின் முக்கிய கதாப்பாத்திரமாக வலம் வரும் செடல் என்ற பெண் பாத்திரப்படைப்பு எதிர்க்கொள்கிறாள். செடலின் குடும்பத்தாருக்கு பொட்டுக்கட்டி விட வேண்டிய அவசியமில்லை. பொட்டுக்கட்டி விடும் சடங்குமுறை நடைமுறையில் இருந்ததால் வறுமையின் பொருட்டு குடும்பத்தினரே அவளை  பொட்டுக்கட்டி விடுகின்றனர். இச்சடங்குமுறை செடலை தன் குடும்பத்திலிருந்து பிரிப்பது மட்டுமல்லாமல் சமூக வழக்கம் எனும் பெயரில் வாழ்நாள் முழுவதும் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுவதை செடல் நாவலின் வழியே உணரமுடிகின்றது.

 

பார்வை நூல்கள்

  1. எழுத்தாளர் இமையம் உரை. (16 C.E., March). [Video]. Sruthi TV. Retrieved March 16, 2016, from https://youtu.be/NX7x_TxWUsU?si=oD3okY25LNodPfJS
  2. மேலது.
  3.  ச.சதக்கத்துல்லா(1992) நாவல் இலக்கியம், தமிழ்த்தேவகம், தமிழ் சமயப் பணி நிறுவனம், திருச்சிராப்பள்ளி.
  4. மேலது.
  5. ஆனந்தவல்லி மகாதேவன், ஜெயகோதைப்பிள்ளை (2004) பெண்ணியம்,அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல்.
  6. மேலது.
  7. சுப்பிரமணி இரமேஷ்,தமிழில் தலித்தியம்(2023) கிழக்கு பதிப்பகம்
  8. ராஜா கௌதமன்(2018) தலித் பண்பாடு, கௌரி பதிப்பகம்,சென்னை.
  9. அன்புக்கரசி, மோகன்லால் பீர் (1997) தலித் பெண்ணியம், தலித் ஆதாரமையம், தமிழ்நாடு இறையியல் கல்லூரி, மதுரை.
  10. முனைவர்‌. த.ஜான்சிபால்ராஜ்(2024) தேவதாசி முறை ஒழிப்பில், ஏமிகார்மைக்கேல்.
  11. மேலது.
  12. இமையம் (2006) செடல், க்ரியா பதிப்பகம், சென்னை
  13. மேலது.
  14. மேலது.
  15. Zvolensky MJ, Vujanovic AA, Bernstein A, Leyro T. Distress Tolerance: Theory, Measurement, and Relations to Psychopathology. Curr Dir Psychol Sci. 2010 Dec 1;19(6):406-410. doi: 10.1177/0963721410388642. Epub 2010 Dec 14. PMID: 33746374; PMCID: PMC7978414.
  16. புலியூர்க்கேசிகன், திருக்குறள் தென்றல் நிலையம், சிதம்பரம்.

Reference:

  1. Eḻuttāḷar imaiyam urai. (16 C.E., March). [Video]. Sruthi TV. Retrieved March 16, 2016, from https://youtu.be/NX7x_TxWUsU?si=oD3okY25LNodPfJS
  2. Melathu
  3. C. Catakkattulla (1992) naval ilakkiyam, tamiḻ tevakam, tamiḻ camayap paṇi niṟuvaṉam, tiruccirāppaḷḷi.
  4. Melathu
  5. C. Sathakkathulla (1992) Naval ilakiyam, tamil vethagam, tamil samayapani niruvanam, thiruchurapalli.
  6. Aṉantavalli makadevaṉ, jeyakotaippiḷḷai (2004) peṇṇiyam,aṉṉai teresa magaḷir palkalaikkaḻakam, kodaikkaṉal.
  7. Melathu
  8. Subramani Ramesh, tamilil dalithiyam (2023) kilakku pathipagam.
  9. Raja gowthaman (2018) Dalith panpadu, gowri pathipagam, Chennai.
  10. Anbukkarasi, Moganlal Beer (1997) Dalit Penniyam, Dalit aatharamaiyam, Tamil Nadu Irayiyal kalluri, Madurai.
  11. Munaivar. T. Jansipalraj (2024) Devathasi murai ollipil, egarmicael.
  12. Melathu
  13. Immaiyam (2006) Sedal, Kriya pathipagam, Chennai.
  14. Melathu
  15. Melathu
  16. Zvolensky MJ, Vujanovic AA, Bernstein A, Leyro T. Distress Tolerance: Theory, Measurement, and Relations to Psychopathology. Curr Dir Psychol Sci. 2010 Dec 1;19(6):406-410. doi: 10.1177/0963721410388642. Epub 2010 Dec 14. PMID: 33746374; PMCID: PMC7978414.
  17. Pullikkasigan, Tirukural thendral nilaiyam sidhamparam.