அக்டோபர் 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

நெடுங்கல்: பண்டைய தமிழ்ச் சமூகத்தின் பெருங்கற்கால பண்பாடும் | Neadungal: The Megalithic Culture of Ancient Tamil Society

மு.சத்தியா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை – 600 005 | M. Sathya, Ph.D Scholar, Department of Tamil Literature, University of Madras, Chennai – 600 005 | நெறியாளர்: முனைவர். ஆ. ஏகாம்பரம், பேராசிரியர் (ம) தலைவர், தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை – 600 005 | Guide: Dr. A. Ekambaram, Professor & Head, Department of Tamil Literature, University of Madras, Chennai – 600 005. 07 Oct 2024 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்:

         வரலாற்றுக்கு முந்தைய காலத்தை ‘தொல்பழங்காலம்’ என அழைப்பர். தொல்பழங்காலத்தைப் பழைய கற்காலம், நுண் கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இதில் பெருங்கற்காலத்தில் தான் இறந்தவர்களை புதைக்கும் வழக்கமும் அவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் ஏற்படுத்தும் வழக்கமும் உருவாகிறது. சங்கப்பாக்களில் தொல்பழங்கால மக்களின் கற்சின்னங்களில் தொடங்கி நாகரிகமடைந்த மருத நில மக்களின் தாழி வரையிலான குறிப்புகளைக் காண முடிகிறது. பெருங்கற்கால மக்களின் ஈமச் சின்னங்களில் ஒன்று நெடுங்கல் ஆகும். இது போரில் இறந்துபட்ட வீரனுக்கு செதுக்கப்படும் நினைவுக் கல்லாகும். குறிப்பாக, ஆநிரைப் போரில் இறந்துபடும் வீரனுக்குரிய கல்லாகும். இதில் இறந்த வீரனின் பெயரும் அவனின் வீர செயுல்களும் புகழ்ச்சி மொழியில் பதிவு செய்யப்பட்டிருக்கம்.

திறவுச்சொற்கள்

          தொல்பழங்காலம், நிரை மீட்டுப் போர், பதுக்கை, நெடுங்கல், நடுகல்

 

Abstract

          The Pre-historic period is called as ‘Tholpazhangalam’ in Tamil. The Pre-historic period can be divided into four categories namely Palaeolithic, Mesolithic, Neolithic and Megalithic. In this, the custom of burying the dead and making memorials are formed in the Megalithic age. In the Sangam Literature, we can find the traces from ancient people’s stone monuments to the civilized Marutham people’s ‘Thazhi’. One of the stone monuments of the Megalithic People is ‘Neadungal’. It is a memorial stone carved for a warrior who dies in the battle. In particular, it is a stone for a hero who dies in Cattle Warfare. In this, the name of the deceased hero and his heroic deeds are recorded in eulogies.

Key words

          Prehistory, Cattle warfare, Cairn, Menhir, Hero Stone

 

முன்னுரை

          போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் நடுகிற வழக்கம் பழந்தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் பழங்காலத்தில் இருந்தே காணப்படுகிறது. ஐரோப்பாக் கண்டத்திலும் சில நாடுகளில் நடுகல் நடுகிற வழக்கம் பழங்காலத்தில் இருந்தது. அந்த நடுகற்களுக்கு அவர்கள் மென்ஹிர் என்று பெயர் கூறினார்கள். மென்ஹிர் என்றால் நெடுங்கல் அல்லது உயராமான கல் என்பது பொருள் மென்ஹிர் (Menhir) என்பது பிரெடன் (Berton) மொழிச்சொல் (Men = stone. Hir = high) இந்தோனேசியத் தீவுகள் எனப்படும் ஜாவா சுமத்திரா போன்ற கிழக்கிந்தியத் தீவுகளிலும் நடுகல் நடுகிற வழக்கம் பழங்காலத்தில் இருந்தது. இதனால், பழந்தமிழைப் போலவே வேறு நாட்டாரும் நடுகல் நடுகிற வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள் என்பது தெரிகின்றது (ஆராய்ச்சி இதழ் 1:2; 1969, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் – 5, ப.172). நெடுங்கல் குறித்து சங்க இலக்கியம் கூறும் செய்தி யாது? இந்நெடுங்கல் அமைக்கப்படும் காலச்சூழல் என்ன? நெடுங்கல் பற்றி சங்க இலக்கியத்தொகுதியில் எத்தனைப் பாடல்கள் உள்ளன? பாடலைப் பாடிய புலவர்கள் பெருங்கற்கால ஈமச்சின்னங்களை எவ்வாறு பதிவு செய்கின்றனர்? போன்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டு இக்கட்டுரையை ஆராய்வதே நோக்கமாகும்.

நெடுங்கல் – ஓர் அறிமுகம்

வரலாற்றுக்கு முந்தைய காலத்தை ‘தொல்பழங்காலம்’ என வரலாற்று  அறிஞர்கள் அழைக்கின்றனர். தொல்பழங்காலத்தை அக்கால மக்கள் பயன்படுத்தி தொழில் நுட்பங்களின் அடிப்படையில் பழைய கற்காலம், நுண் கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவற்றில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கம் பெருங்கற்காலத்தில் ஏற்படுகிறது. இறந்தவரைப் புதைத்த இடத்தில் அல்லது அவர்களின் எலும்புகளைப் புதைத்த இடத்தில் பெரிய பெரிய கற்களைப் பயன்படுத்தி கல் திட்டைகள், கல்வட்டங்கள் போன்றவற்றை உருவாக்கினர். இவை பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் என்று அழைக்கப்படுகிறது.

பெருங்கற்கால ஈமச் சின்னங்களில் ஒன்றாக நெடுங்கல் கருதப்படுகிறது.  இயல்பாக அமைந்துள்ள கல்லில் போரில் இறந்துபட்ட வீரனுக்காக நினைவுச் சின்னம் எழுப்புவதே நெடுங்கல் ஆகும். கல்லில் இறந்த வீரனின் பெயரும் அவ்வீரன் இறந்ததற்கான காரணமும் புகழ் மொழியாகப் பதியப்பட்டிருப்பதை ‘அகலிடங் குயின்ற பல்பெயர் மண்ணி’ (அகம்.269:8), ‘பெயரும் பீடும் எழுதி அதர்தோறும்’ (அகம்.131:10) போன்ற சங்க இலக்கிய வரிகள் உறுதிப்படுத்துகின்றன.

சில இடங்களில் கல்வட்ட வகையைச் சார்ந்த பெருங்கல் சின்னத்தின் உட்பகுதியில் அல்லது கல்வட்டத்தின் அருகில் நீண்ட பெரிய கல் செங்குத்தாக நிறுத்தப்பட்டிருக்கும். இத்தகைய கற்கள் சுமார் 10 அடி முதல் 25 அடி உயரம் வரை காணப்படுகின்றன. சில இடங்களில் குத்துக்கல் இயற்கையாகக் கிடைத்ததையும், சில இடங்களில் செதுக்கப்பட்ட கற்களையும் நட்டுள்ளனர். இது குத்துக்கல் (Menhir) என்று அழைக்கப்படுகின்றது (தி.சுப்பிரமணியன், தமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாடு, ப.46).

நெடுங்கல்லை நடுகல் போல் கல் தேர்வு செய்து, அதனை நட்டு வழிபடும் வழக்கமாக சங்க இலக்கியம் காட்சிப்படுத்தவில்லை. மேலும், தொல்காப்பியம் கூறும் நடுகல் நடும் முறையான ‘காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் பெரும்படை வாழ்த்தல்’ என்ற வரிசை முறையைச் சங்க இலக்கியத்தில் காணவியலாது. இது நெடுங்கல்லிற்கும் பொருந்தும்.

 சங்க இலக்கியத் தொகுதியில் நெடுங்கல் பற்றிய தகவல்கள் மிக குறைவே. தமிழகத்தில் கிடைத்த தொல்லியல் சான்றுகளின் அடிப்படையிலும் சங்கப் பாடல்களின் அடிப்படையிலும் பெருங்கற்படைச் சின்னங்கள் நடுகற்களாக மாறியதை நான்கு வளர்ச்சி நிலைகளில் பார்க்கலாம் (கா.ராஜன், தொல்லியல் நோக்கில் சங்க காலம், ப.29).

  • முதல் நிலை பெருங்கற்காலச் சின்னமான கற்பதுக்கை ஆகும். இதன் காலம் கி.மு.3-ஆம் நூற்றாண்டிற்கு முற்பகுதி.
  • இரண்டாம் நிலை கற்பதுக்கையைச் சுற்றி நெடுங்கற்கள் (Menhir) நடப்பட்ட நிலையாகும். இவை கி.மு.3-1 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டவை.
  • மூன்றாம் நிலை கற்பதுக்கையைத் தவிர்த்து நெடுங்கல்லை மட்டும் தனியே அமைத்தல் ஆகும். இதன் காலம் கி.பி.1-2 ஆம் நூற்றாண்டு ஆகும்.
  • இறுதி நிலை நெடுங்கற்கள் அளவில் சிறுத்து நடுகற்களாக மாறுவதாகும். இம்மாற்றம் கி.பி.2-3-ஆம் நூற்றாண்டிற்குள் நடந்திருக்க வேண்டும்.

நான்கு நிலைகளில், இரண்டாம் நிலையும், மூன்றாம் நிலையும் நெடுங்கற்களைப் பற்றி பேசுகின்றன. சங்க இலக்கியத் தொகுப்பில் மூன்று அகப்பாடல்களும் (அகம். 35, 67, 289) ஒரு புறப்பாடலும் (புறம். 264) ஆகிய நான்கு பாடல்கள் கற்பதுக்கையைச் சுற்றி நெடுங்கற்கள் (Menhir) நடப்பட்ட நிலைக்கு எடுத்துக்காட்டாகவும் ஒரு அகப்பாடல் (அகம். 269) கற்பதுக்கையைத் தவிர்த்து நெடுங்கல்லை மட்டும் தனியே அமைக்கும் நிலைக்கு எடுத்துக்காட்டாகவும் கா. ராஜன் சுட்டுகிறார் (கா.ராஜன், தொல்லியல் நோக்கில் சங்க காலம், பக்.38,39).

நெடுங்கற்கள்: இரண்டாம் நிலை

தலைவனுடன் தலைவி உடன்போக்கில் சென்றுவிட்டாள். இச்செய்தியை அறிந்த நற்றாய் அவள் சென்ற பாலைநில வழியின் நிலையை எண்ணி வருத்தம் கொள்கிறாள்.

தனிமணி இரட்டும் தாளுடைக் கடிகை

                    நுழைநுதி நெடுவேற் குறும்படை மழவர்

                    முனையாத் தந்து முரம்பின் வீழ்த்த

                    வில்லேர் வாழ்க்கை விழுதொடை மறவர்

                    வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்

                    நடுகல் பீலி சூட்டித் துடிபடுத்துத்

                    தோப்பிக் கள்ளோடு துரூஉப்பலி கொடுக்கும்                    (அகம்.35:3-9)

          குறித்தப்பாத அம்பினையுடையவர்கள் ‘மறவர்’ என்னும் குழு மக்கள். இவர்கள் வில்லே ஏராகக் கொண்டு வாழ்க்கையை நடத்துபவர்கள். ஒப்பற்ற மணிகள் ஒலிக்கும் கடையாணி இட்ட காம்பு கொண்ட கூர்மையான நெடிய வேலை உடையவர்கள் ‘மழவர்’ என்னும் தொல்குடியினர். இவர்களிடம் சிறிய சேனை ஒன்றும் உள்ளது. இவர்களை மறவர் கூட்டத்தினர் பருக்கைக்கற்கள் உள்ள மேட்டுப் பகுதியில் வீழ்த்தினர். அதுமட்டுமன்றி மழவர்கள் கவர்ந்த ஆநிரைகளையும் மீட்டனர். இந்த மாடுகவர் பூசலில் இறந்தவர்களுக்கு மறவர்கள் கற்பதுக்கையின் பக்கத்தில் நடுகல் அமைக்கின்றனர். இவர்கள் தம்வலிமையால் நட்ட அந்நடுகல்லிற்கு மயில் தோகையைச் சூட்டி, துடியை இசைத்து, ‘தோப்பி’ என்னும் ஒரு வகை கள்ளையும் செம்மறியாட்டுக் குட்டியையும் பலியாகப் படைக்கின்றனர். இத்தகைய புலால் நாற்றம் வீசும் அரிய சுர வழியில் தலைவனுடன் தலைவி சென்றுள்ளாள்.

          தலைவன் கடந்து சென்றுள்ள பாலைநிலவழியை எண்ணி வருந்தம் கொண்ட தலைவி தோழியிடம் தன் நிலையை எடுத்துரைப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.

                    அரம் போழ் நுதிய வாளி அம்பின்

                    நிரம்பா நோக்கின், நிரயம் கொண்மார்

                    நெல்லி நீளிடை எல்லி மண்டி

                    நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்

                    பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்

                    பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்

                    வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்

                    மொழி பெயர் தேஎம் தருமார், மன்னர்

                    கழிப் பிணிக் கறைத்தோல் நிரை கண்டன்ன

                    உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை                 (அகம்.67:5-14)

          அரம் கொண்டு கூர்மையாக்கப்பட்ட பற்களையுடைய அம்பினை கொண்டவர்கள் மானம் மிக்க மறவர்க் கூட்டத்தினர். இவர்களின் கண்கள் இடுக்கிக் கூர்மையாகப் பார்க்கும் பார்வையைக் கொண்டது. இவர்கள் நெல்லிமரங்கள் நிறைந்துள்ள நீண்ட வழியில் பசுக்கூட்டத்தைக் கவர்ந்த தொல்குடியினருடன் போரில் ஈடுபட்டனர். அப்போரில் பசுக்கூட்டத்தை மீட்டு வெற்றியும் பெற்றனர். இந்த ‘நிரை மீட்புப் போரி’ல் இறந்த வீரர்களின் பெயரையும் புகழையும் கல்லில் எழுதி, மயில் தோகையைச் சூட்டி பெருவழியில் நன்கு விளங்கும்படி இம்மறவர்க் கூட்டத்தினர் நட்டு வைத்தனர். இப்படி நடப்படும் நடுகல்லின் முன்பு வேல் ஊன்றி பலகை சார்த்தி வைக்கும் வழக்கம் உள்ளது. பெருவழியில் நடப்பட்டிருக்கும் இந்நடுகற்கள் பகைவருடன் போர் செய்ய தயாராக இருக்கும் படையை ஒத்து காணப்படுகின்றன.

அதுமட்டுமின்றி, வேற்றுமொழி வழங்கும் நாடுகளைக் கைப்பற்ற வேண்டி மன்னர்கள் செல்வர். அவர்கள் மரக்கழியால் செய்யப்பட்ட கரிய நிறம் கொண்ட கேடயத்தைக் கொண்டிருப்பர். அக்கேடயங்களின் குவியலைப் போல வழிசெல்லோரைக் கொன்று அவர்களின் உடல்களை ஓரிடத்தில் இட்டுத் தழை மற்றும் கற்களால் மூடிய கற்குவியல்கள் காணப்படுகின்றன. இந்த கற்குவியல்களையுடைய பாழிடத்தைக் கடந்து தலைவன் சென்றுள்ளான்.

‘நிரை மீட்புப் போரி’ல் பசுக்கூட்டத்தைக் காப்பாற்றி தலைவன் இறந்துவிடுகிறான். இதையறியாத பாணர்க் கூட்டம் இன்றும் அவனைக் கண்டு பரிசில் பெற வருமோ என்று உறையூர் இளம்பொன் வணிகனார் வருத்தம் கொள்வதாக இப்பாடல் அமைந்துள்ளது. 

                    பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி,

                    மரல் வகுத்து தொடுத்த செம் பூங் கண்ணியொடு,

                    அணி மயிற் பீலி சூட்டி, பெயர் பொறித்து,

                    இனி நட்டனரே, கல்லும்; கன்றோடு

                    கறவை தந்து பகைவர் ஓட்டிய

                    நெடுந்தகை கழிந்தமை அறியாது,

                    இன்றும் வரும்கொல், பாணரது கடும்பே?                 (புறம்.264:1-7)

          பகைவர் கவர்ந்த கன்றும் பசுவும் ஆகிய கூட்டத்தை மீட்டு, அவ்வீரர்களை விரட்டியடித்த தலைவன் இப்போரில் இறந்துவிடுகிறான். அவனுக்கு பருக்கைக் கற்கள் நிறைந்துள்ள இடத்தில், கற்பதுக்கையின் பக்கத்தில் நடுகல் நடப்படுகிறது. தலைவனின் பெயர் பொறித்த அந்நடுகல்லிற்கு செந்நிறம் கொண்ட பூக்களைப் பெருங்குரும்பையைக் கீறி எடுத்த நாரில் தொடுத்த தலைமாலையையும் அழகிய மயில் தோகையையும் சூட்டியுள்ளனர். ஆனால், இதனையறியாத பாணர்க் கூட்டம் பரிசில் வேண்டி இன்றும் தலைவனைக் காண வருமோ!

இந்நான்கு பாடல்களிளும் நடுகல் கற்பதுக்கை அமைந்திருக்கும் இடத்தில் நடப்படுள்ளது. ஆநிரை கவர்போர் நடைப்பெறுதல், மழவர்கள் கன்றுகளோடு கவர்ந்த ஆநிரைகளை மறவர் மக்கள் வில் கொண்டு மீட்டல், அப்போரில் இறந்த வீரனுக்கு பிற மறவர்கள் நடுகல்லை அமைத்தல், பருக்கைக் கற்கள் நிறைந்துள்ள இடத்தில் வலிய ஆண்மையால் உருவாக்கப்பட்ட கற்பதுக்கை ஏற்கெனவே அமைந்திருத்தல், அக்கற்பதுக்கைகள் கரிய நிறம் கொண்ட கேடயங்களைப் போல் காணப்படுதல், அக்கற்பதுக்கையைத் தொடர்ந்து நடுகல்லை வைத்தல், கல்லில் இறந்த வீரனின் பெயரும் புகழ் மொழியும் பொறிக்கப்படுதல், அந்நடுகல்லிற்கு மயில் தோகையையும் சிவந்த கரந்தைப்பூ மாலையையும் சூட்டுதல், தலைவன் இறந்த செய்தியறியாத பாணர்க்கூட்டம் இன்றும் அவனைக் காண வருமோ என்று புலவர் வருத்தம் கொள்ளல் முதலான செய்திகளைத் தருகின்றன.

இந்நான்கு பாடல்களிலும் கற்பதுக்கை உள்ள இடத்தில் நடுகல் நடப்பட்ட செய்தியே உள்ளன. செதுக்கப்பட்ட செய்தி இல்லை. ‘இனி நட்டனரே கல்லும்’ என்பதே இவை நெடுங்கல் அல்ல என்பதைக் காட்டுகிறது. ‘நெடு நிலை நடுகல்’ என்பது வீரனின் புகழை உயர் நிலையாகக் கூறுவதாகவே கருத முடியும். இதனால், இந்நான்கு பாடல்களும் நடுகல் குறித்த பாடல்களே ஆகும். இவை கா.ராஜன் கூறுவது போல நெடுங்கற்கள் அல்ல நடுகற்களே.

இந்நான்கு பாடல்களிளும் பதுக்கை யாருக்கு அமைக்கப்படுள்ளது என்ற செய்தி இல்லை. அதனால் ஆநிரை பூசலில் இறந்த வீரனின் உடலைத்தான் அடக்கம் செய்து அதன் மீது பதுக்கை அமைத்துள்ளனர் என்றே கருதலாம். அதாவது, உடலைப் புதைத்த மண் மேட்டின் மீது சிறிய கற்களையும் தழைகளையும் வைத்து அவ்விடத்தை மூடிவுள்ளனர். அதன் பின் நடுகல் நட்டு இறந்த வீரனின் குறிப்புகளைப் பதிவிட்டுள்ளனர். இது ஆய்விற்குரியது.

இறந்தவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட குழியின் (pit burial) மீது மண்மேடு (barrow) அமைக்கும் மரபைப் பெருங்கற்படைச் சின்னத்தின் எளிய தொடக்கமாகக் கருதலாம். இத்தகு மேடு கற்களைக் குவித்து அமைக்கப்படின் கற்குவை (cairn) எனப்பெயர் பெறும். குவித்து வைக்கப்பட்ட மண் அல்லது கற்கள் சிதறாமல் இருக்க சிறிய (rubble) அல்லது பெரிய கற்கள் (boulder) மண்மேட்டைச் சுற்றிலும் வட்டமாகப் பதிக்கப்படும். இதுவே கல்வட்டமாகும் (cairn circle). இக்கல்வட்டத்தில் பெரிய அளவில் நாட்டப்பட்டிருக்கும் கல் குத்துக்கல்லாகும் (menhir). இதுவே காலப்போக்கில் நடுகல்லாக (hero stone) மாற்றமுற்றது (கோ.சசிகலா, தொல்லியல் நோக்கில் சங்ககால சமூகம், ப.84).

நட்ட போலும் நடா நெடுங்கல்

          பொருள் தேடி பிரிந்த தலைவனை எண்ணி வருத்தம் கொள்ளும் தலைவியைத் தோழி ஆற்றுப்படுத்துவதாக 269-வது பாடல் அமைந்துள்ளது.

ஏறுடை இன நிரை பெயர, பெயராது,

செறி சுரை வெள் வேல் மழவர்து தாங்கிய

தறுகணாளர் நல் இசை நிறுமார்,

பிடிமடிந் தன்ன குறும்பொறை மருங்கிளர்

                    நட்ட போலும் நடாஅ நெடுங்கல்

                    அகலிடங் குயின்ற பல்பெயர் மண்ணி

                    நறுவிரை மஞ்சள் ஈர்ம்புறம் பொலிய

                    அம்புகொண் டறுத்த ஆர்நார் உரிவையிற்

                    செம்பூங் கரந்தை புனைந்த கண்ணி

                    வரிவண் டார்ப்பச் சூட்டிக் கழற்கால்

                    இளையர்பதிப் பெயரும் அருஞ்சுரம் இறந்தோர்            (அகம்.269:3-13)

ஏறுகளுடன் கூடிய பசுக்கூட்டங்களை மழவர் என்ற தொல்குடி மக்கள் கவர்ந்தனர். இவர்கள் சுரையுடைய வெள்ளிய வேல் கொண்டவர்கள். இம்மழவர்களைத் தாக்கி போரிட்டு அஞ்சாமல் தன் புகழை நிலை நிறுத்திய ‘தறுகணாளர்கள்’ கரந்தை வீரர்கள். இந்த ‘நிரை மீட்புப் போரி’ல் இறந்த வீரர்களுக்கு பிற வீரர்கள் நெடுங்கல் அமைத்துத் தம் இடம் பெயர்கின்றனர்.

பெண் யானை தூங்குவதைப் போல் அமைந்துள்ள சிறிய குன்றுகளின் பக்கத்தில் நட்டு வைத்தது போல உள்ள நடாத கல்லின் அகன்ற இடத்தில் இறந்துபட்ட வீரர்களின் பெயர், புகழ் என எல்லாவற்றையும் பொறித்து, அக்கல்லை நீராட்டி, மணமுள்ள மஞ்சளை ஈரம் உள்ள அப்பகுதியில் பூசி, அம்பு கொண்டு அறுத்த ஆத்தி நாரில் சிவந்த கரந்தைப் பூவினைத் தொடுத்து மாலையாக்கி, வரிகள் கொண்ட வண்டுகள் துடி இசைப்பதைப் போல் ஒலிக்க கரந்தைப்பூ மாலையைச் சூட்டி வீரக்கழல் அணிந்த இளையர்கள் தம் இருப்பிடம் நோக்கிச் சென்றனர்.

மருதனிளநாகனார் இனக்குழு வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்வை மிக இயல்பாக இங்கு காட்சிப்படுத்துகிறார். இவர் நடுகல் தொடர்பான ஆய்வில் தவிர்க்க முடியாத சங்ககாலப் புலவர் ஆவார். இவர் சங்க இலக்கியத்தில் நடுகல் பற்றி ஆறு பாடல்களைப் பாடியுள்ளார். நடுகற்களுக்கு ஏற்படும் விபத்துகள் (அகம்.297,343,365), ‘குயிலெழுத்து’, ‘கோட்டெழுத்து’ என்று நடுகல்லில் உள்ள எழுத்துப்பொறிப்புகள் (அகம்.297,343), கல்லில் உள்ள எழுத்துப்பொறிப்புகளை வாசிக்க முயலும் வழிப்போக்கர்கள் (அகம்.297,343), அக்கல்லிற்கு பீலி, கரந்தை சூட்டுதல் (அகம்.131,269) முதலானவற்றை இவர் பாடல்களில் காணலாம். இதனால், தொல்லியல் அறிஞர் ர.பூங்குன்றன் மருதனிளநாகனாரைக் ‘கல் பாடிய மருதனிளநாகனார்’ என்றழைக்கிறார் (ர.பூங்குன்றன், தொல்குடி – வேளிர் – அரசியல், ப.78).

‘ ‘நடாஅ நெடுங்கல் அகலிடம் குயின்ற’ என்றதனால், பல்லவர் காலத்திற்போல இயல்பாய பாறையைக் குடைந்து படிவம் இயற்றும் வழக்கு அஞ்ஞான்றும் இருந்ததென்பது புலனாகின்றது. பல் பெயர் என்புழி, பெயர் என்பது பொருள்; ஆவது படிவம் என்க. தறுகணாளர் நல்லிசை நிறுமார் நெடு கல் குயின்ற பல்பெயர் என்க. பொருதுபட்ட கரந்தையாரது புகழை நிறுத்த வேண்டி நெடுங்கல்லிலே குயின்ற வடிவினை நீராட்டி மஞ்சட்பூசிக் கண்ணி சூட்டி வழிபட்டு இளையர் தம் பதிக்கு ஏகும் அரும் சுரம் என்க’ என்று இப்பாடலிற்கு ந.மு.வேங்டசாமி நாட்டார் உரை எழுதியுள்ளார் (ந.மு.வேங்கடசாமி நாட்டார் (உரை.ஆ.), அகநானூறு – மணிமிடைபவளம், ப.303).

பல்லவர் காலத்தின் சிறப்புகளுள் ஒன்று கல் கொண்டு வரலாறு படைத்தது ஆகும். சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலையின் தோற்றம் பல்லவர் காலத்திலிருந்து தான் தொடங்குகிறது. சிற்ப உருவங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று முழு உருவச் சிற்பங்கள் இரண்டாவது புடைப்புச் சிற்பங்கள். முழு உருவச் சிற்பங்கள் என்பது முன்புறமும் பின்புறமும் முழு உருவமும் தெரிய அமைக்கப்படுவது. புடைப்புச் சிற்பம் என்பது ஒருபுறம் மட்டுமே தெரியும்படி சுவர், பலகை, கல்லில் அமைக்கப்படுவது.

‘நடாஅ நெடுங்கல் அகலிடம் குயின்ற பல்பெயர்’ என்பதை ந.மு.வேங்கடசாமி நாட்டார் நெடுங்கல்லில் புடைப்பு சிற்பம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கருதி இவ்வாறு உரை செய்துள்ளார். ஆனால், காலத்தால் முந்தைய புடைப்புச் சிற்பமாக மாமல்லபுரத்துப் புடைப்புச் சிற்பங்களே கருதப்படுகின்றன. மாமல்லபுரத்து ‘அர்ச்சுனன் தபசு’ எனப்படும் சிற்பத்தொகுதியே காலத்தால் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.  வீரர் உருவம் கோடுகளாகவும் புடைப்புச் சிற்பமாகவும் செதுக்கப்பட்ட நடுகற்கள் கி.பி.4-ஆம் நூற்றாண்டிற்கு பின்னரே கிடைக்கின்றன (பூங்குன்றன். ர., பண்டைய தமிழ்ச் செவ்விலக்கியங்களும் நடுகற்களும், ப.255). சங்க காலத்தைச் சேர்ந்தவையாகக் கருதப்படும் புலிமான் கோம்பை நடுகற்கள் மூன்றும் புடைப்புச் சிற்பம் இன்றியே காணப்படுகின்றன. இவை கி.மு.3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

மேலும், ‘குயின்ற’ என்ற சொல்லிற்கு பொறித்த என்று பாட்டும் தொகையும் (இலக்கிய அகராதி) பொருள் தருகிறது (பாட்டும் தொகையும், ப.71). ‘அகலிடம் குயின்ற பல்பெயர்’ என்பதற்கு ‘அகன்ற இடத்தில் பல பெயர்களைப் பொறித்து’ என்றே பொருள் கொள்ள முடிகிறது. ந.மு.வேங்கடசாமி நாட்டார் கூறுவது போல் சங்க காலத்திலே புடைப்புச் சிற்பங்களோடு கூடிய நடுகற்கள் படைக்கப்பட்டிருந்தால் அவை இன்னும் மண்ணுகடியில் மறைந்துள்ளது என்றே கருத முடியும்.

முடிவுரை

          பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் ஒன்று நெடுங்கல். இது போரில் வீர மரணம் அடையும் வீரனுக்கு பிற வீரர்களால் வைக்கப்படுவது ஆகும். குறிப்பாக, ‘நிரை மீட்புப் போரி’ல் இறந்த வீரனுக்கே நெடுங்கல் வைக்கப்படுகிறது. இயற்கையாக வளர்ந்துள்ள நெடிய கல்லில் வீரனின் பெயரும் புகழ் மொழியும் பொறிப்பதே நெடுங்கல்லாகும். தொல்லியல் ஆய்வாளர் கா. ராஜன் குறிப்பிடும் பதுக்கையோடு கூடிய நெடுங்கல் பற்றிய பாடல்களாகக் குறிப்பிடும் சங்கப்பாக்களில் நடுகல் பற்றிய தகவல்களே உள்ளன. அவை நெடுங்கல் என்று சுட்டுவதற்கு இலக்கியத்தில் சான்றுகள் இல்லை. ஆகையால், சங்க இலக்கியத்தில் நெடுங்கல் பற்றிய பாடல் ஒன்றே ஒன்று மட்டுமே உள்ளது. அப்பாடலைப் பாடியவர் மதுரை மருதனிளநாகனார் ஆவார். இவர் பெருங்கற்கால ஈமச்சின்னங்களைப் பற்றி பெரும்பான்மை தம் பாடல்களில் குறிப்பிடுகிறார்.

மருதனிளநாகனார், ‘நட்ட போலும் நடாஅ நெடுங்கல்’ என்று நெடுங்கல்லை விவரிக்கிறார். அதாவது, நட்டதைப் போல் அமைந்துள்ள நடாத கல் என்பதாகும். ந.மு. வேங்கடசாமி நாட்டார் ‘நடாஅ நெடுங்கல் அகலிடம் குயின்ற’ என்பதற்கு நெடுங்கல்லில் புடைப்புச் சிற்பம் இருப்பதாகக் கருதுகிறார். ‘பொறித்த’ என்ற பொருளைக் குறிக்கும் ‘குயின்ற’ என்ற சொல்லைத் தொடர்ந்து ‘பல்பெயர் மண்ணி’ என்ற தொடர் வருவதால் ‘அகன்ற இடத்தில் பல பெயர்களைப் பொறித்து’ என்பதாகவே பொருள் கொள்ள முடிகிறது. ந.மு.வேங்கடசாமி நாட்டார் கூறுவது போல் சங்க காலத்திலே புடைப்புச் சிற்பங்களோடு கூடிய நெடுங்கற்கள் அல்லது நடுகற்கள் படைக்கப்பட்டிருந்தால் அவை இன்னும் மண்ணுகடியில் மறைந்துள்ளது என்றே கருத முடியும்.

பயன்பட்ட நூல்கள்

  1. அரசு. வீ. (பதி.ஆ.), மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் – 5, இளங்கணி பதிப்பகம், சென்னை, 2014 (முதற்பதிப்பு).
  2. சசிகலா. கோ., தொல்லியல் நோக்கில் சங்ககால சமூகம், சிந்தன் புக்ஸ், சென்னை, 2019 (முதல் பதிப்பு).
  3. சுப்பிரமணியன். தி., தமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாடு, நியூ சென்சுவரி புக் ஹவுஸ் நிறுவனம், சென்னை, 2018 (மூன்றாம் பதிப்பு).
  4. பூங்குன்றன். ர., தொல்குடி – வேளிர் – அரசியல், ஹெரிடேஜ் டிரெஷர் பப்ளிஷர்ஸ், சென்னை, 2016 (இரண்டாம் பதிப்பு).
  5. பூங்குன்றன். ர., பண்டைய தமிழ்ச் செவ்விலக்கியங்களும் நடுகற்களும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை, 2023 (முதற்பதிப்பு).
  6. ராஜம். எஸ்., பாட்டும் தொகையும், மர்ரே அண்டு கம்பனி, சென்னை, 1958 (முதற்பதிப்பு).
  7. ராஜன். கா., தொல்லியல் நோக்கில் சங்க காலம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2004 (இரண்டாம் பதிப்பு).
  8. வேங்கடசாமி நாட்டார்.ந.மு. (உரை.ஆ.), அகநானூறு மூலமும் உரையும், பாரதி பதிப்பகம், சென்னை, 2022 (முதற்பதிப்பு).

 

Reference

  1. Arasu. V. (Ed.), Mayilai Sini. Venkatasamy Ayvukalangiyam – 5, Ilangani Pathippagam, Chennai, 2014 (First Edition).
  2. Sasikala. K., Tholliyal Nokkil Sanga Kala Samugam, Sithan Pathipagam, Chennai, 2019 (First Edition).
  3. Subramaiyan. T., Thamizhagathil Perunkarkala Panpadu, New Century Book House, Chennai, 2018 (Third Edition).
  4. Poongunran. R., Tholkudi – Velir – Varalaru, Hertiage Treasure Publishers, Chennai, 2016 (Second Edition).
  5. Poongunran. R., Pandaiya Thamizh Sevvilakiyangalum Nadukarkalum, Central Institute of Classical Tamil, Chennai, 2023 (First Edition).
  6. Rajam. S., Pattum Thogayum, Mare and Company, Chennai, 1958 (First Edition).
  7. Rajan. K., Tholliyal Nokkial Sanga Kalam, International Institute of Tamil Studies, Chennai, 2004 (Second Edition).
  8. Venkatasamy Nattar. Na. Mu., Agananuroo Mulamum Uraiyum, Bharathi Pathipagam, Chennai, 2022 (First Edition).