அக்டோபர் 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

விளக்கு பண்பாடு “சாவா மூவா பேராடு” | The Culture of Lamp “Sava Moova Pearadugal”

கட்டுரையாளர்:கோ. அசோகன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,பச்சையப்பன் கல்லூரி, சென்னை - 30 | நெறியாளர்:வாமு சே முத்துராமலிங்க ஆண்டவர் ,முதல்வர்,கொ கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரி,அண்ணாநகர், சென்னை -102 07 Oct 2024 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்

தமிழர்களின் இயற்கை வழிபாட்டு முறையை தமிழ் இலக்கிய மரபு தனித்து காட்டுகிறது.  தங்களுடைய வாழ்க்கைக்கு வளம் சேர்க்கின்ற இயற்கையை வழிபாட்டுக்குரிய ஒன்றாக கருதி தமிழர்கள் போற்றி மகிழ்ந்தனர். தமிழ் பக்தி மரபு இறைவனை சுடரின் வழியாக காண விழைவதை ஆழ்வார், நாயன்மார்களின் போற்றிப் பாடல்கள் மூலம் நாம் அறிகிறோம். சோழர் காலத்தில் பெருங்கோயில்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் சுடர் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கோயில்களில் விளக்கெரிக்க சாவா மூவா பேராடு வழங்கப்பட்டுள்ளதை கல்வெட்டுச் செய்திகள் மூலம் அறிகிறோம். தொன்று தொட்டு வரக்கூடிய விளக்குப் பண்பாட்டை பற்றி பேசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

திறவுச் சொற்கள்

சாவா மூவா பேராடுகள், மன்றாடிகள், நந்தா விளக்கு

 

Abstract

The Tamil Literary Tradition highlights the nature worship of the Tamils. They consider the nature as some power to worship and they believe it will enrich their lives. Tamil Devotional Tradition shows that the hymns of Alwar and Nayanmars are wished to see the lord through the flame. Also the Perungoils built during the Chola period have given importance to the flame worship. The Tamil Inscriptions says that ‘Sava Moova Pearadu’ was provided for lighting the lamps in temple. The purpose of this article is to talk about the Tradition of Lamp culture.

Key words

Sava moova Pearagugal, Manradigal, Nandha Vilakku.

முன்னுரை

விளக்கேற்றல் தமிழ்ச் சமூகத்தின் பண்பாடாக அன்றாட நிகழ்வில் ஒன்றாக காணப்படுகிறது. தமிழ் இலக்கியங்கள் விளக்கேற்றல் சிறப்புகளைப் பேசுகிறது. தமிழர்கள் பாவை விளக்கு, கல் விளக்கு, தூண் விளக்கு, தூக்கு விளக்கு, கிளை விளக்கு, குத்து விளக்கு என பல்வேறு விளக்குகளை கலை நயத்துடன் பயன்படுத்தியுள்ளனர். நந்தா விளக்கு, கார்த்திகை விளக்கு, மலரணி விளக்கு என பலவகை விளக்குகளைப் பற்றி  சங்க இலக்கியங்கள் பேசுகிறது. தமிழர்களிடம் இருந்த விளக்கு வழிபாடு பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு இன்று வரை சிறந்து காணப்படுகிறது. சோழர்கள் காலத்தில் விளக்கேற்றல் நிகழ்வு அறமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேய்ச்சல் சமூகத்தின் தேவை இன்றியமைந்த ஒன்றாக இருந்துள்ளது. ஏனெனில் விளக்கெரிக்க ஆநிரைகளின் மூலம் பெறப்படும் நெய்யே பயன்படுத்தப்பட்டுள்ளது. கோயில்களுக்கு தேவையான ஆவினைந்து பொருட்களும் மன்றாடிகளே கோயில்களுக்கு வழங்கியுள்ளனர். சோழர்கள் காலத்தில் சாவா மூவா பேராடு என்கிற திட்டத்தின் மூலம் விளக்கு பண்பாடு சிறந்து விளக்கியுள்ளது.

ஒளி வழிபாடு                                                                        

                    தமிழர்களின் இயற்கை வழிபாட்டு முறையை தமிழ் இலக்கிய மரபு தனித்து காட்டுகிறது.  தங்களுடைய வாழ்க்கைக்கு வளம் சேர்க்கின்றன இயற்கையை வழிபாட்டுக்குரிய ஒன்றாக கருதி தமிழர்கள் போற்றி மகிழ்ந்தனர். தமிழ் பக்தி மரபு இறைவனை சுடரின் வழியாக காண விழைவதை ஆழ்வார், நாயன்மார்களின் போற்றிப் பாடல்கள் நமக்கு காட்டுகிறது.     பத்தொன்பதாம் நூற்றாண்டின் புரட்சியாளர் வள்ளலார் இறைவனை அருட்பெரும் சோதியாக உணர்ந்து சோதி வழிபாட்டு முறையை செயல்படுத்தினார். சூரியன், சந்திரன், சுடர் என முச்சுடர் வழிபாட்டை தமிழர்கள் போற்றியுள்ளனர்.

திங்களைப் போற்றதும் திங்களைப் போற்றதும்

கொங்குலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்றிவ்

வங்கணுல களித்தலான்;

ஞாயிறு போற்றதும் ஞாயிறு போற்றதும்

காவிரி நாடன் றிகிரிபோற் பொற்கோட்டு

மேரு வலந் திரிதலான்

என்ற சிலப்பதிகார மங்கல வாழ்த்துப் பாடல் திங்கள், ஞாயிறு வழிபாட்டை சிறப்பாக எடுத்துரைக்கிறது.

சிந்தாதேவி செழுங்கலை நியமத்து

நந்தா விளக்கெ பாவாய்

வானோர் தலைவி மண்ணோர் முதல்வி

என்று மணிமேகலையும் சிந்தா தேவிக்கு உவமையாக நந்தா விளக்கை எடுத்துரைக்கிறது.

சுடரிற் சுருட்டும் திருமூர்த்தி

என்று சீவக சிந்தாமணியும்

மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்

விளக்கொளியாய் முளைத் தெழுந்த திங்கள் தானாய்

பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாய்

பிறப்பிலியாய் யிறப்பதற்கே யெண்ணுது எண்ணும்

பொன்னுருவாய் மணியுருவில் பூதமைந்தாய்ப்

புன்லுருவாய் அனலுருவில் நிகழுஞ் சோதி

தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை

தளிர் புரையும் திருவடியென தலைமேலவே

          திருமங்கையாழ்வார் திருத்தாண்டாகத்தில் திருமாலை விளக்கொளியாக பாவித்து பாமாலை சூட்டி வணங்குகிறார்.

வையம் தகழியாய் வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் செய்ய

சுடராளியின் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடராளி நீங்கவே யென்று

          என்று பொய்கையாழ்வார் தன் மன எண்ணத்திற்கு ஏற்ப திருமாலின் அருளை அழகை விளக்கின் சுடரொளியாக கண்டு அதை சூரிய உதயத்தோடு ஒப்புமைப் படுத்தி திருமாலுக்கு பாமாலை சூட்டி மகிழ்கின்றார்.

அன்பே தகழியாய்    

ஆர்வமே நெய்யாக

இன்புருகு கிந்தை

          இடுதிரியாய் நன்புருகி

ஞானச் சுடர்விளக்கு

          ஏற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்

என்று பூதத்தாழ்வார் பெருமாள் மீது கொண்ட அன்பை, ஆர்வத்தை சுடரொளியாக ஏற்றி மகிழ்கிறார்.

சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே

          சுரி குழற் பணமுலை மசந்தை

பாதியே பரனே பால் கொள் வெண்ணீற்றாய்

          பங்கயத் தயனும் மாலறியா

நீதியே செல்வத் திருப்பெருந் துறையுள்

          நிறைமலர்க் குருந்த மேவிய சீர்

ஆதியே யடியேன் ஆதரித்தழைத்தால்

          அதந்துவே என்றருளாயே

என்று மாணிக்கவாசக பெருமானும் சிவபிரானை சுடரொளியாக கண்டு மகிழ்கிறார்.

 விண்ணார் செஞ்சுடரே

          சுடர் மேவிய வுள்ளொளியே

தண்ணார் வெண்மதியே

          யதிற்றங்கிய தண்ணமுதே

கண்ணார் மெய்க்கனலே

          சிவகாமப் பெண் காதலனே

அண்ணா தந்தனையே

          யருளாரமு தந்தனையே

என்று வள்ளலார் போற்றுகிறார்.

விளக்கினை ஏற்றி

                                                  வெளினய அறிமின்

                                        விளக்கின் முன்னே

                                                  வேதனை மாறும்

                                        விளக்கை விளக்கும்

                                                  விளக்குடையார்கள்

                                        விளக்கின் விளக்கும்

                                                  வுளக்கவர் தாமே

என்று திருமூலர் திருவிளக்கினை சிவபெருமானாக கொண்டு பாடுகிறார்.

ஞானச் சுடர் விளக்காய் நின்றவன்

விறகிற் றீயினன் பாலிற் படு நெய்யோன்

மறைய நின்றுளான் மாமணிச் சோதியான்

என்று திருநாவுக்கரசர்  சிவனை வணங்குகிறார்.

தமிழர்கள் ஒளியை இறையாக பாவித்து அதை வழிபட்டு வந்துள்ளனர் என்பதை தமிழ் இலக்கிய மரபு வெளிப்படுத்துகிறது. உலகிலுள்ள  பல்வேறு மக்களும் தினகரன், திங்கள், தீ என்ற முச்சுடர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார்கள் ஏன்பதற்கு ஏராளமான சான்றுகள் உள. எகிப்திய மக்கள் அமன் என்ற பெயரால் சூரியனைக் கடவுளாக வழிபட்டு வந்தனர். பபிலோன் மக்களிற் பலர் ஹபில் சிவா என்றும் ரபு சிவா என்றும் இருதெய்வங்களை வழிபட்டு வந்தனர். அங்கும் சிவா என்ற சொல்லுக்கு ஒளி என்றே பொருள் கொள்ளப்பட்டது. பபிலோன் நாட்டில் நிப்பூர் என்னும் ஊரில் பெரிய ஞாயிற்றுக் கோயில் இருந்து வந்தது. கிறித்துவர்கள் ஞாயிற்றுக் கிழமையை ஒரு சிறந்த நாளாகக் கொண்டாடுவது கதிரவன் வழிபாட்டிலிருந்து எழுந்த கருத்தேயாகும். எபிரேய மக்கள் நிறை உவா நாட்களைப் போலவே ஞாயிற்றுக் கிழமையிலும் பலி செலுத்தி வந்தார்கள். எனவே ஞாயிற்றுக் கிழமையின் முதன்மை ஞாயிறு வழிபாடு காரணமாக எழுந்ததேயாம்.(அ.இராகவன், ப 43,1964) உலக நாகரிக தொல்குடி மக்கள் அனைவரிடமும் ஒளி வழிபாடு சிறந்து விளங்குகிறது.

நந்தா விளக்கு – சாவா மூவா பேராடு

          சோழர் கால கல்வெட்டுகளில் நந்தா விளக்கு, நுந்தா விளக்கு, நொந்தா விளக்கு, திருநுந்தா விளக்கு முதலான பெயர்கள் காணப்படுகின்றன. கோயில்களில் இரவும் பகலும் அணையாமல் எரியும் விளக்கிற்கு நந்தா விளக்கு என்று பெயர். தமிழ்ச் சமூகத்தில் விளக்கிற்கென தனித்த பண்பாட்டு வரலாறு உண்டு. சோழர்கள், பாண்டியர்கள் காலத்தில் திருவிளக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதை கல்வெட்டுகள் நமக்கு பகர்கிறது. திருவிளக்கு எரிய தேவையான நெய்யை கோயில்களில் வழங்குவதற்கு அவ்வூரை சுற்றியுள்ள மன்றாடிகளிடம் ஆடு, பசு, எருமைகள் வழங்கப்பட்டதை ராஜ ராஜ சோழனின் திருவிளக்கு கல்வெட்டு மூலம் அறிகிறோம். 90, 48, 16, 25,12, 32 என விளக்கெரிக்க தேவையான நெய்யின் அளவை பொறுத்து ஆநிரைகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. திருவிளக்கிற்காக வழங்கப்பட்ட ஆநிரைகளில் ஆடுகளே அதிக அளவில் தானமாக வழங்கப்பட்டுள்ளது. உழக்கு, ஆழாக்கு முதலான முகத்தல் அளவைகள் கொண்டு நெய் வழங்கப்பட்டுள்ளது. விளக்கெரிக்க வழங்கப்பட்ட ஆநிரைகள் எண்ணிக்கை என்றும் குறையாமல் இருப்பதற்காக அவற்றிற்கு சாவா மூவா பேராடுகள் என்ற பெயரில் அவை மன்றாடிகளிடம் வழங்கப்பட்டுள்ளன.

மன்றாடிகள்

          தமிழ்நாட்டு முல்லை நில மேய்ச்சல் சமூக மக்களை ஆயர், இடையர், கோவலர், அண்டர், பொதுவர் முதலான பெயர்களில் இலக்கியங்களில் அழைக்கப்பட்டுள்ளனர். நந்தா விளக்கிற்காக அளிக்கப்பெற்ற சாவா மூவா பேராடுகளை மன்றாடி - இடையர்களிடம் வழங்கியதாக கல்வெட்டுக்கள் வழி அறிகிறோம். மன்றாடி - மன்றம் என்கிற சொல்லை ஆராய்ந்தால் அச்சொல் சங்க காலம் தொட்டு கால்நடைகளோடு இணைத்தே  பேசப்பட்டு வந்துள்ளது. மன்றிலிருந்து மன்றம் வந்தது. உண்மையாயின் மன்றும், மன்றமும் ஒரு பொருள் குறித்த சொற்கள் மன்று தொடக்கத்தில் பசுத்தொழுவாக நிலைபெற்றிந்தது. பசுத் தொழுவிலேயே மக்களும் வாழ்ந்திருக்க வேண்டும்: அதனுடைய எச்சமாக மலையாள நாயர் சமூகத்தில் மன்றம் என்பது குடி என்ற பொருளில் வழங்கியுள்ளது. மன்றம் வருவாய் அளிக்கும் நிலப்பகுதியாக கருதப்பெற்றது. சங்க இலக்கியத்தில் மன்று பற்றிக் கூறும் போதெல்லாம் அங்கு மாட்டு மந்தை தங்கியிருந்தது என்று தான் பாடல்கள் கூறுகின்றன.

 முல்லை வியன்புலம் பரப்பி, கோவலர்

குறும்பொறை மருங்கின் நறும்பூ அயர

பதவு மேயல் அறுந்து மதவு நடைநல் ஆன்

வீங்கு மான் செருத்தல், தீம் பால் பிலிற்ற

கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும்

கன்று காணாது; புன் கண்ண செவி சாய்ந்து

மன்று நிறை பைதல் கூர பல உடன்

கறவை தந்த கடுங்கால் மறவர்

கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ

முதுவாய்ப் பெண்டின் செதுகாற் குரம்பை

மடமயில் அன்னஎன் நடைமெலி பேதை

தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள்

வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கண்

சேக்கோள் அறையும் தண்ணுமை

கேட்கநள் கொல்?                                     (அகநானூறு 63)

இந்தப்பாடல் அடிகளில் ஆநிரை கவர்ந்த மறவர்கள் தங்கள் சிறுகுடி மன்றில் நிரையை நிறைத்தனர்( ர. பூங்குன்றன், ப.37, 2016). அகநானூற்றில் செய்யுள் 377 வெட்சிப்பூசலில் மன்றம் பாழ்பட்டு நின்றதைப் பற்றிக் கூறப்படுகின்றது. மன்றம் தாக்குதலுக்கு உள்ளானதற்குக் காரணம் அங்கு ஊரின் செல்வம் என்று கருதப்பட்ட மாட்டு மந்தைகளும் மிகுந்து விளங்கின. புறம் 387.ம் பாடலில் மன்ற நிறையு நிரையெங்கோ என்று சிறப்பித்துக் கூறுவது மன்றிற்கும் ஆநிரைக்கும் இடையிலான தொடர்பினை வலியுறுத்துகின்றது( ர. பூங்குன்றன், ப.83, 2016). சங்க கால மேய்ச்சல் சமூகமான ஆயர்-இடையர்களை சோழர் கால கல்வெட்டுகள்  மன்றாடிகள் என்றே பெருமளவில் குறிப்பிடுகின்றன. சோழ மன்னர்கள் மன்றாடிகளுக்குப் பல சலுகைகளை அளித்திருந்தனர். நகரங்களில் மன்றாடிகளுக்கெனத் தனித் தெருக்கள் அமைந்திருந்தன. ஆயர்களுக்குச் சோழ மன்னர்கள் ஆட்சியில் வழங்கப்பட்ட உரிமைகளை அவர்கள் வீடு கட்டும்போது இருபுறமும் வாசற்படிகள் அமைத்துக்கொள்ளலாம். நன்மை தீமைகளுக்குச் சிவிகையேறலாம். சாவு ஊர்வலத்தின் போது மேல்வளைவுள்ள பாடைகட்டி அதன் மேலேயே பச்சைப்பட்டு, புலியூர்ப்பட்டு என்பனவற்றைக் கட்டிக் கொள்ளலாம். நன்மை தீமைகளுக்குப் பேரிகை கொட்டலாம் என விக்கிரம சோழனது 13 ஆம் ஆட்சியாண்டில் பிறப்பிக்கப்பட்ட ஆணை பட்டியலிட்டுக் கூறுகிறது. மன்றாடிகள் தமக்குள் இணைந்து மன்றாடிக் கலனை என்ற அமைப்பை உருவாக்கியிருந்தனர். இவர்கள் இடைமறை இடைப் பாட்டம் போன்ற வரிகளைச் செலுத்தினர். ஊர் அவைகளின் நடவடிக்கைகளில் பங்கேற்றனர். மன்றாடிகளில் நாட்டு மன்றாடிகள் என்ற ஒரு பிரிவினர் இருந்தமையையும், மன்றாடிகளுக்கென மன்றாடி வாரியம் ஒன்று இருந்தமையையும் கல்வெட்டுகளால் அறிய முடிகிறது.

சோழர்காலத்தில் சாவா மூவா பேராடு என்கிற திட்டம் கோயில்களில் எப்பொழுதும் விளக்கெரிய வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட ஒன்றாக காணப்படுகிறது. சங்க காலம் தொட்டு சிறந்து இருந்த தமிழ்நாட்டு மேய்ச்சல் வாழ்வு அத்திட்டம் சிறந்து விளங்க காரணமாக இருந்துள்ளது. தமிழர்களிடம் இருந்த சுடர் வழிபாட்டு முறை இன்று வரை மக்களால் பின்பற்றக் கூடிய ஒன்றாக காணப்படுகிறது.

தமிழர்களின் ஒளி வழிபாடு சங்க காலம், பக்தி இயக்க காலம் என பல்வேறு காலங்களில் சிறந்து காணப்பட்டதை போல சோழர் காலத்திலும் சிறந்து விளங்கியுள்ளது. விளக்கேற்றும் நிகழ்வு அறமாக கடைப்பிடிக்கப் பட்டுள்ளது. குற்றசெயல்களில் ஈடுபட்டவர்களுக்கு கோயில்களில் விளக்கேற்றல்தண்டனையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் கோயில்களில் திருவிளக்கு பண்பாடு சிறந்து விளங்க மேய்ச்சல் சமூகத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் நிறைந்த ஒன்றாக காணப்படுகிறது.

பயன்பட்ட நூல்கள்

  1. அ. இராகவன்., 1964, தமிழ்நாட்டுத் திருவிளக்குகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட், சென்னை – 2.
  2. இரா. நாகசாமி., 1969, தஞ்சைப் பெருவுடையார் கோயில் கல்வெட்டுகள் (முதற்பகுதி), தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு.
  3. ர. பூங்குன்றன்., 2016, தொல்குடி வேளிர் வேந்தர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட், சென்னை 600 098.
  4. ர. பூங்குன்றன்., 2016, தொல்குடி- வேளிர் – அரசியல்,  Heritage Treasure Publishers

Reference

  1. A. Ragavan., 1964, Tamilnattu Thiruvilakkugal, New century book house private lit, Chennai – 2.
  2. R. Nagasamy., 1969, Tanjore Bharahateswar Kovil Kalvettu (Vol -1), Tamilnadu Arasu Tholporul Ayvuthurai veliyidu.
  3. R. Poongunran., 2016, Tholgudi velir vendar, New century book house private lit, Chennai – 600 098.
  4. R. Poongunran., 2016, Tholgudi - velir – arasiyal, Heritage Treasure Publishers.