அக்டோபர் 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

இசையும் சமூக விமர்சனமும் (Music and Social Descent)

வ. விக்டர், முனைவர்ப் பட்ட ஆய்வாளர், கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி      | நெறியாளர்: முனைவர். ஆக்னஸ் ஷற்மீலி, இணைப்பேராசிரியர், கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி ( V.Victor, Research Student, Kalaikaviri College of Fine Arts, Tiruchirappalli | Guide: Dr.D.Agnes Sharmeeli, Associate Professor, Kalaikaviri College of Fine Arts, Thiruchirappalli 10 Oct 2024 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்

பொது சமூக அரங்கில் நிகழ்கின்ற அனைத்தையும் எல்லா மனிதராலும் அப்படியே ஏற்றுக்கொள்ள இயலாது. நிகழ்பவை  சமூகத்திற்கு தீமை விளைவிப்பவையானால் அவற்றை விமர்சிப்பது  சமூக அக்கறையுள்ளோரின் இயல்பு. விமர்சனம் பேச்சிலும், எழுத்திலும், இசையிலும், சித்திரங்களிலும், பிற கலை வடிவங்களிலும் வெளிப்படுத்தப்படுகிறது. இசையில் விமர்சிப்பது பெரும்பாலும் குரலிசையில் அதாவது பாடல்களில் விமர்சிப்பதென்றே எடுத்துக்கொள்ளலாம். மக்கள் பாடகர்கள் தங்கள் பாடல்கள் வழியாக எவ்வகைகளிலெல்லாம் சமூகத்தை விமர்சித்துள்ளார்கள் என்பதை அவர்களது பாடல்களோடு ஆய்வு செய்வதே இதன் நோக்கமாகும்.

முதன்மைச் சொற்கள்: விமர்சனம், குரலிசை, மேலாதிக்கம், மறைமுகமான செய்தி, எதிர்ப்புணர்வு

                                                                                      Abstract

People cannot accept each and everything which happens in the society. It’s the very nature of the people who has the social concern to criticize the social evils. Criticism can be expressed by way of writing, speech, music, arts and etc. Usually the criticism in music is done by singing. This article tries to explore how the people’s singer had criticized in their songs.

The Prime Terms: Criticism, vocal, domination, hidden transcript, Descent

முன்னுரை 

மனித சமூகத்தின் இயல்பான நாட்டங்களில் ஒன்று இசை. இந்த இசையை மனிதனிடத்திலிருந்து பிரிக்க இயலாது எவ்வாறெனில் மனிதனின்  பிறப்பு முதல் இறப்பு வரை தனது இசையோடு கூடிய பந்தம் நிலைத்திருக்கிறது. ஒரு மனிதனின் வாழ்வில் எல்லா சூழல்களுக்கும், நிகழ்வுகளுக்கும் வெவ்வேறு இசை இசைக்கப்படுகிறது. இவ்வாறு மனிதனின் வாழ்வில் இன்றியமையாத ஒரு கூறாக அமைந்துள்ள இசை என்பது என்னவென அறிதல் தேவையாகிறது.

இசை என்பது பாடுவதற்காக அல்லது இசைக்கருவிகளில் வாசிப்பதற்காக ஒழுங்கமைவு செய்யப்பட்ட ஒலிகளின் நிரல்களே ஆகும். இசைக்கருவிகளின் மூலமாகவோ, குரலிசையாலோ, கணினியின் துணையுடனோ அல்லது இவை அனைத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டாலோ மக்கள் கேட்க வேண்டும் என்ற நோக்கோடு  ஒருங்கமைக்கப்படுகின்ற ஒலிகளே இசையாகும். இத்தகைய பொருள்படும் இசை சிலருக்கு மருந்து சிலருக்கு போதை, இவ்வுலகில் போதைக்கு அடிமையாகாதவர்கள் கூட இசைக்கு அடிமையாவர்.

லியோ டால்ட்டாய் என்ற ரஷ்ய எழுத்தாளர் “இசை என்பது உணர்ச்சிகளின் சுருக்கம்”  என்கிறார். அவரது கூற்று முற்றிலும் உண்மை என்பதை இசை வழியாக எல்லா சமூகத்தினரும் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர் என்பதிலிருந்து புரிந்துகொள்ளலாம். மனித உணர்ச்சிகளாகிய அன்பு, இரக்கம், சோகம், வேதனை, கோபம், கொண்டாட்டம், ஆக்ரோஷம், எதிர்ப்புணர்வு ஆகியவற்றை பாடல்களிலோ அல்லது கருவி இசையிலோ வெளிப்படுத்துகின்றனர் என்பதைக்கொண்டு புரிந்து கொள்ளலாம்.

தமிழக நாட்டார் வழக்காற்று மரபில் வாழ்வின் பல்வேறு கணங்களில் தங்கள் உணர்ச்சிகளை பாடல்களாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். எந்த கணங்களில் பாடல்கள் பாடப்படவில்லை என்று காண்பதரிது. ஒரு குழந்தை பிறந்தபோதும், அழும்போதும், தூங்கச் செல்லும்போதும், விளையாடும்போதும், பருவமடையும் சடங்குகளிலும், திருமணத்தின்போதும், தொழிற்களங்களிலும், இறப்பிலும் பாடல்கள் பாடப்படுகின்றன.[1] இவையாவும் மேற்கூறப்பட்ட உணர்ச்சிகளின் வெளிப்பாடேயன்றி வேறொன்றுமில்லை.

தங்கள் வாழ்க்கை வட்டத்திலே பாடுகின்ற பாடல்களைக் கடந்து அடுத்த நிலையில் சமூகத்தைக் குறித்து பாடுகின்ற தன்மை வெளிப்பட்டது. சமூகத்தைக் குறித்து பாடுபவர்கள் பலவகைப்படுவர் அவற்றை சுருக்கமாக இரண்டு விதமாக வகைப்படுத்தினால் முதல்வகை இருக்கிற சமூகத்தை அப்படியே பாடுவது, இரண்டாவது இருக்கிற சமூகத்தின் குறைகளை விமர்சித்துப் பாடுவது. இரண்டு வகைகளிலும் பாடுவதென்பது வெவ்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவே அமைகின்றன.

இசையும் சமூக விமர்சனமும்

விமர்சனம் என்பது ஒரு கருத்தை, செயலாக்கத்தை, படைப்பை, நபரை அல்லது அமைப்பை மதிப்பீடு செய்து முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஆகும். விமர்சனம் என்பது ஒன்றன் பயன், விலை, நன்மை தீமை, படைப்பின் தரம் இவற்றை முன்வைக்கிறது. இந்த வரிசையில் நாம் வாழுகின்ற சமூகத்தை பல நிலைகளில் விமர்சித்து பாடல்களாக கட்டமைத்து மக்களுக்கும் ஒட்டுமொத்த உலகுக்கும் பரவலாக்கம் செய்வதே பாடல்கள் வழி சமூக விமர்சனத்திற்கான நோக்கமாகும்.

மனிதனை பாதிக்கக்கூடிய காரணிகளில் ஒன்று மேலாதிக்கம். வரலாற்றில் மேலாதிக்கத்தின் அழுத்தத்தை உணர்ந்த சமூகங்கள் அதை தாங்க முடியாமல் தங்களது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தியிருக்கின்றன. இவற்றை நேரடியாகச் சொல்ல இயலாமல் அல்லது சொல்லுகின்ற சக்தியற்றிருக்கின்றபோது மறைமுகமாக எதிர்த்திருக்கின்றன. இவ்வாறு மறைமுகமாக எதிர்ப்பதை ஜேம்ஸ் ஸ்காட் என்ற சமூகவியல் அறிஞர் மறைமுகமான செய்தி (Hidden Transcript) என்கிறார். மேலும் அவர் இவை மறைந்த களத்தில்  (offstage) உருவாக்கப்படும் என்கிறார். அதிகாரியோ அல்லது ஆதிக்கவாதியோ நேரடியாகப் பார்க்கின்ற வண்ணம் அல்லாமல் மறைந்த ஒரு களத்தில் இத்தகைய மறைமுகமான செய்திகள் உருவாக்கப்படும். Hugh Tracey “நேருக்கு நேராக சொல்ல இயலாதவற்றை பாடல்கள் மூலமாக சொல்ல இயலும்” என்கிறார். வடசென்னையில் சேரிப்பகுதிகளில் சாதாரண மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய விஷயங்களைக் கொண்டு தாங்களாகவே பாடுகின்ற பாடல்கள்தான் கானா பாடல்கள். கானா பாடல்கள் சிறந்த விமர்சனத்தைக் உள்ளடக்கிய பாடல்களாகும்.

இக்கட்டுரையில் இசை வழியாக எந்தெந்த விதங்களில் சமூகமானது விமர்சிக்கப்படுகிறது என்று பார்க்கலாம். விமர்சனம் என்ற பொருளில் இசையை அணுகுகின்ற போது பெரும்பாலும் குரலிசையே முதன்மையாகக் கொண்டிருக்கின்றது. எனவே குரலிசை அல்லது பாடல்கள் மூலமாக சமூகமும், சமூக அமைப்புக்களும் எந்தெந்த வகைகளில் விமர்சிக்கப்படுகின்றன என்பதை கீழே காணலாம்.

இசைக்கின்ற பாடலின் உள்ளடக்கம்

பாடலின் உள்ளடக்கம் என்பது பாடல் வரிகளில் வெளிப்படும் பொருண்மையைக் குறிப்பதாகும். பாடல்களின் வரிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இசையோடு இணைந்து செல்கின்ற வரிகளே அழகான பாடலை உருவாக்க இயலும். இவ்வாறு சமூகத்தைக் குறித்த மனிதனின் உணர்வுகள் தான் வெவ்வேறு வகைகளில் பாடல்களை உருவாக்குகின்றன. இப்பாடல்கள் பெரும்பாலும் நாட்டார் பாடல்களாகவும் மக்கள் பாடல்களாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

1.    எதார்த்தத்தை வெளிப்படுத்தும் வகையில் சமூகத்தை விமர்சனம் செய்யும் பாடல்கள்

சமூகத்தை விமர்சிக்கின்ற பாடல் வகைகளில் சமூகத்தில் இருக்கின்ற நிலைமையை அதாவது எதார்த்தத்தை அப்படியே எடுத்துச் சொல்லுகின்ற பாடல்கள் ஏராளம் உள்ளன.

 “முப்பது வருஷம் ஒழச்சி ஒழச்சி முக்காப்படியும் மிஞ்சல

மூல மூலக்கி கடன வாங்கி  மூச்சுத் திணறுது வழியில்ல

என்ற கே.ஏ.குணசேகரனின் பாடல் விவசாயப் பெருங்குடியின் நிலைமையை அப்படியே விளக்கி மக்களிடத்தில் விழிப்புணர்வை உருவாக்குகின்ற அற்புதமான பாடலாகும். இந்த பாடல் ஒரு சிறந்த நாட்டுப்புற மெட்டில் விவசாயிகளின் வாழ்க்கை நிலையை சித்தரிப்பதோடு கே.ஏ.குணசேகரனின் உணர்வுபொங்கிய குரலில் கேட்பவர்களைத் திரும்பிப்பார்க்கத் தூண்டும் பாடலாகவும் அமைந்துள்ளது.

முக்கா முழம் நெல்லுப்பயிரு முப்பது கெசம் தண்ணிக் கிணறு

நிக்காமத்தான் தண்ணி இறைச்சேன்

நெல்லுப்பயிரும் கருகிப் போச்சு என்ற கே.ஏ.குணசேகரனனின் இப்பாடலும் விவசாயி தனது நிலைமையை விவரிக்கின்ற பாடலாக அமைகின்றது. இப்பாடலின் இறுதியில் “மாட்டுக்குத்தான் உழவில்ல மக்களுக்குத்தான் உணவில்ல மாடா நாம பாடுபட்டும் நம்ம நிலமை விடியல” என்று வருகிறது. விவசாயிகளை மறந்து கார்ப்பரேட்டுகளை முன்னிலைப்படுத்தி விவசாயிகளின் போராட்டங்களை சற்றும் பொருட்படுத்தாமல் ஆளுகின்ற அரசியல் தலைவர்களுக்குச் சேரவேண்டிய பாடல். மக்கள் தங்கள் வாழ்வில் தேவைகளை நிறைவேற்றுமளவுக்கு பணம் வந்துவிட்டால் அன்றாட உணவுக்காக உழைக்கின்ற விவசாயிகளை மறந்துபோகிறபோது மக்களுக்கும் தேவையான ஒரு பாடலாகும். இதுபோன்று எதார்த்தத்தை வெளிப்படுத்தும் வகையில் சமூகத்தை விமர்சனம் செய்யும் பாடல்கள் தமிழில் மட்டுமல்ல பிறமொழிகளிலும் ஏராளம் காணக்கிடக்கின்றன. இப்பாடல்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன.

2.   உணர்வைத் தூண்டும் வகையில் சமூகத்தை விமர்சனம் செய்யும் பாடல்கள்

மக்கள் பாடல்களில் மிகுந்திருக்கின்ற ஒரு தன்மை என்னவெனில் பாடலைக் கேட்கின்ற மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்புவதாகும். அவ்வாறு தட்டி எழுப்புவதற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. சமூகத்தில் தாங்கள் சந்திக்கின்ற நிகழ்வுகள், பிரச்சனைகள் இவற்றின் அடிப்படையில் இவ்வுணர்வு அவல உணர்வாகவோ, கோப உணர்வாகவோ, எதிர்ப்புணர்வாகவோ வெளிப்படுகின்றது.

2.1. அவல உணர்வை வெளிப்படுத்துதல்

சமூக அவலத்தை பாடுவது மக்களுக்கு விழிப்புணர்வைத் தூண்டுகின்ற ஒரு வழிமுறையாகும். பகட்டான திட்டங்களும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளும் மக்கள் கண்களை மறைக்க தங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற அவலங்களையே உணர்ந்திராக சாதாரண மக்களுக்கும், பெரிய நெருக்கடிகளை சந்திக்காமல் தன்னிறைவடைந்த மக்களுக்கும் சமூகத்தைப் பற்றி அறிவதற்கு இப்பாடல்கள் மிகவும் தேவையாகின்றன.

   ”ஆசயா இருக்குதுங்க பள்ளியில படிக்க - இந்த

  ஆசைய தீர்க்க என்ன வழி

  எந்த வழியுமே தெரியலிங்க

என்ற பாடல் ஏழைக் குடும்பத்துப் பெண் குழந்தை கல்வி கற்பதற்கு இருக்கின்ற தடைகளை வேதனையோடு எடுத்துச் சொல்லி படிப்பதற்கான வழியை தேடிப்போகிறேன் என்று ஒரு குழந்தையே முயற்சி எடுப்பது போன்ற கருத்தை எளிய விதத்தில் ஆனால் நெஞ்சை நெருடும் விதமாக அமைந்துள்ளதுள்ளார் பாடலாசிரியர். கல்வி நிலையங்கள் ஆயிரம் இருந்தாலும் படிப்பதற்கான குடும்பச் சூழல், பொருளாதார வசதி இவை இருந்தால் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற ஒரு சமூக அவலத்தை விவரிக்கின்ற பாடல் நிச்சயமாக பெரும் மாற்றத்தை நோக்கி அழைப்பதாக அமைந்துள்ளது.

புள்ள தூங்குது இடுப்புல பூன தூங்குது அடுப்புல

மழவந்தா நனையுறோம் வெயில் வந்தா காயுறோம்

நம்ம நாட்டு நடப்புல நம்ம நாட்டு நடப்புல

வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்த ஏழைக் குடும்பங்கள் படுகின்ற வேதனையை மிகவும் உணர்ந்து பாடுகின்ற பாடலாகும். மக்கள் பாடகர் சின்னப்பொண்ணின் மெல்லிய குரல் கேட்பவரின் இதயத்தைத் தட்டுகிறது.

சமூக எதார்த்தத்தை உணர்த்துவதோடு சமுதாயத்தில் செயல்படத் தூண்டுகின்ற பணியும் சமூக அக்கறையுள்ளவர்களுக்கு உரியது. தங்கள் கடமையை உணர்ந்த மக்கள் பாடகர்கள் எதிர்வினையாற்றத் தூண்டும் விதத்தில் பாடல்களை கட்டமைத்துள்ளார்கள். கீழே கொடுக்கப்படும் பாடல் கானா பாலாவின் பாடலாகும்.

சமத்துவம் பிறந்தது சட்டத்த படித்தது

சாதியை ஒழித்தது சரித்திரம் படைத்தது

பெரம்பூரின் மன்னனாக வாழ்ந்தது

புத்தூரில் தெய்வமாக உறங்குது

என்ற கானா பாடல் 05.07.2024 அன்று கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் க்காக பாடப்பட்ட பாடலாகும். ஆம்ஸ்ட்ராங் என்ற தலைவரின் நற்பண்புகளை குறிப்பாக அவரது ஆற்றல், தலைமைத்துவம்,  வள்ளன்மை போன்றவற்றை தத்ரூபமாகச் சொல்லி “அன்பாக அதிகாரத்த வென்றவரு அன்பான தம்பிகளை விட்டுச் சென்றவரு” என்று முடிகின்ற பாடல் மிகவும் உணர்வுப்பூர்வான பாடல் மட்டுமல்ல இவரைக்குறித்துத் தெரியாத சாதாரண மக்களும் எளிதில் அறிந்து கொள்ளச் செய்யக்கூடிய பாடலாகும்.

2.2.  கோப உணர்வை வெளிப்படுத்துதல்

சமூக நீதி, சமூக அக்கறை இவற்றின் மேல் நம்பிக்கை உள்ள மனிதர்கள் இருக்கின்ற நிலையை அப்படியே சொல்வதுடனோ, மிக எளிதாக பாடுவதுடனோ நின்று விடுவதில்லை. இந்த சமூத்தில் காணப்படுகின்ற அவலங்களைக் கண்டு கொதித்தெழுகிற மனிதர்களாகவும், சமூக அமைப்பைக் கோபத்தோடு கேள்வி கேட்கக் கூடியவர்ளாகவும் மாறுகிறார்கள். இசை வழியாக விமர்சனம் செய்பவர்கள் கோபத்தை உரிய வார்த்தைகளில் புனைவார்கள் உதாரணமாக ஆதிக்க சமூகத்தில் அடிமைகளாக, ஓடுக்கப்பட்டவர்களாக இருக்கின்ற மக்களை ஒருங்கிணைப்பதற்கும், ஆட்சியாளர்களைச் சாடுவதற்கும் வலிமையான வார்த்தைகளை கையாளுகிறார்கள். செவிகளில் ஓங்கி ஒலிக்கக் கூடிய வார்த்தைகளாக கட்டமைக்கிறார்கள். மக்கள் பாடகர் கோவன் எழுதி இசையமைத்துப் பாடிய

ஆயிரங்காலம் அடிமை என்றாயே

அரிசனுண்ணு பேரு வைக்க யாரடா நாயே

என்ற ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக கோபத்தோடு பாடக்கூடிய இப்பாடலில் ஒருவரின் கோப வெளிப்பாடு வலுவாக காணப்படுகிறது. அடக்குகின்ற வர்க்கத்தை நாயே என்று அழைக்கும் அளவுக்கு ஒரு சமூக விமர்சகர் தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார். ஒடுக்கப்பட்ட மக்களை அரிசன் என்று அழைக்கின்ற எல்லாரையுமே இப்பாடல் சாடுகிறது. கோபத்தை வெளிப்படுத்தினாலும் எந்த தனி நபரையோ, சாதியையோ, கட்சியையோ சுட்டிக்காட்டாமல் அதேநேரத்தில் மறைமுகமாக சொல்லுகின்ற விதத்தில் அமைந்துள்ளது இப்பாடல்.

மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா

ஒன்ன போல அவனபோல எட்டு சாணு ஒசரமுள்ள

மனுஷங்கடா நாங்க மகுஷங்கடா

கவிஞர் இன்குலாப் எழுதி தலித் சுப்பையா அவர்களின் இசையில் பல மேடைகளில் பாடப்பட்ட முக்கியமான ஒருபாடலாகும். நாங்கள் எவ்விதத்திலும் மற்றவர்களைவிட குறைந்தவர்கள் அல்ல என்று உறுதிபடச்  சொல்லுகின்ற இப்பாடல் கோபத்தோடு பாடக்கூடிய மற்றுமொரு சமூக விமர்சனப் பாடலாகும்.

வெட்டருவா எடடா எடடா ரத்தம் கொதிக்குதடா - இந்த

சட்டமும் சர்க்காரும் தடுத்தா வெட்டி எறிந்திடடா

என்ற கோவனின் பாடல் கோபத்தினுடைய உச்சகட்டத்திலிருந்து பாடப்பட்ட பாடலாக தென்படுகிறது. மேற்கூறிய பாடல்களின் வார்த்தைகளும் அதற்கேற்ற இசையும் மிகவும் பொருத்தமாகவும் சமூக அக்கறையோடு கோபத்தை வெளிப்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளதைக் காணலாம். இவ்வாறு சமூகத்தை விமர்சித்து பாடல்கள் கட்டமைக்கின்ற போது தனது கோபத்தை வெளிக்கொணர்கிறார்கள் மக்கள் பாடகர்கள்.

2.3.  எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் பாடல்கள்

தான் வாழுகின்ற சமூகத்தில் தீமைகள் மேலோங்கும்போது சமூகத்தை நேசிக்கின்ற எல்லா மனிதர்களிடத்திலும் இயல்பாகவே ஒரு எதிர்ப்புணர்வு எழுவதுண்டு. பாடல்களில் தங்கள் எதிர்ப்புணர்வை வெளிப்டுத்துவது நேரடி விளைவைத் தருவதில்லை என்பதால் சமூகத்தின் மேலுள்ள எதிர்ப்புணர்வை பாடல்கள் வழியாக வெளிப்படுத்துகின்றனர். இவர்கள் பாடல்கள் எழுதுகின்றபோதும், அதற்கு மெட்டமைக்கின்றபோதும், அதுபோன்று அப்பாடலை பாடுகின்றபோதும் தங்கள் எதிர்ப்புணர்வை உணரும் விதத்தில் அதற்குரிய உணர்ச்சியோடு இவற்றை செய்யவேண்டும். அவ்வாறு முழுமைபெறுகின்ற பாடல்கள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

பொறுமை பொறுமை ஒன்றே பெண்களுக்கு பெருமை என்று

பேசுகின்ற பெரிய மனுஷன் முகத்தில் எல்லாம் காறித்துப்பு

தயக்கம் வேணாண்டி பெண்ணே கலக்கம் வேணாண்டி

என்ற பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான இப்பாடல் மூலம் தனது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துகின்றார் பாடலாசிரியர். தொடர்ந்து இந்த பாடலின் மூன்றாவது அடியில் ஏழைங்க பிரிஞ்சு நின்னா எப்போதுமே தீங்குதான்

எதிர்த்து நின்னா போதும் தாங்காது பூமிதான் என்ற வரிகள் அடிமைத்தனத்தை  ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்பதையே வலுவாகச் சொல்வதை புரிந்து கொள்ள முடிகின்றது.அரசியல் என்றாலே ஓட்டு அரசியல்தானா என்ற மக்களின் குமுறலுக்கு பதில்கொடுக்கிற ஒரு பாடலாக மக்கள் அதிகாரத்தினரின் அமைப்பினரின் சிறந்த ஒரு பாடல்

ஓட்டுப்போடாதே போடாதே புரட்சி செய் - பொய்

வாக்கை நம்பாதே நம்பாதே கிளர்ச்சி செய் என்ற பாடலின் தொடக்க இரு வரிகள் ஜனநாயகத்தைச் சொல்லி பிழைப்பு அரசியல் செய்யும் ஓட்டு அரசியலை நேரடியாக விமர்சிக்கின்ற வரிகளாக இருக்கின்றன. சாதாரண மக்களை வாக்கு வங்கிகளாக மட்டும் கருதுகின்ற அரசியல்வாதிகள் மக்களை தொடர்ந்து வஞ்சிக்கின்ற சூழலில் எழுதப்பட்ட பாடல் இது. இப்படி ஒரு ஓட்டு வேண்டாம் என்ற நிலைப்பாட்டுடன் செயல்பட்ட மக்கள் அதிகாரம், மக்கள் தங்கள் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்த ஓட்டு அரசியலை புற்க்கணிக்க வேண்டும் என்று வலுவாகச் சொல்லுகின்ற பாடல்.

3.    நகைப்புக்குள்ளாக்கும் வகையில் சமூகத்தை விமர்சனம் செய்யும் பாடல்கள்

நகைச்சுவையோடு அல்லது நையாண்டி செய்து பாடல் இசைப்பது என்பது மக்களால் விரும்பப்படுகின்ற ஒன்றாகும். நகைச்சுவை தான் ஒருவருக்கு பூரணமாக மனிதத்தன்மையைக் கொடுக்கும். நகைக்கத் தெரியாதவன் அரை மனிதனாகக் கருதப்படுவான். தனி மனிர்களைப்போலவே சில தேசத்தவர்களது பண்பாட்டின் இயல்பும் நகைச்சுவையால் தெரியத்தகும் [2]. நையாண்டி செய்தல் வெவ்வேறு காரணங்களுக்காக அமையலாம். ஆனால் பொதுவாக சமூக விமர்சனப் பாடலில் நையாண்டி செய்தல் என்பது சமூத்தில் காணப்படும் அவலத்தை, கேலிக்கூத்தாகும் அரசியலை, சமயங்களில் காணப்படும் மக்கள் விரோத போக்கை கேட்கின்ற மக்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டுகின்ற பாடல் இவ்வகையில் கட்டமைக்கப்படுகிறது.

அடி என்னம்மா தேவி சக்கம்மா

உலகம் தலைகீழா தொங்குது நியாயமா

சின்னஞ்சிறுசெல்லாம் சிகரெட்டு குடிக்குது

சித்தப்பன் மார்கிட்ட தீப்பெட்டி கேக்குது

இப்பாடல், கேட்பவரை எளிதில் கவர்வது மட்டுமல்லாமல் செய்தியானது எளிதாக மனதில் நிற்கும் விதத்திலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் காணப்படும் நிலைமையை நகைச்சுவை கலந்து எடுத்துச் சொல்வதால் அது நேரடி விமர்சனமாக தோன்றாமல் மறைமுக விமர்சனமாக புலனாகிறது.

ஆறறிவு மனுஷனுக்கு சாதி எதுக்கு

பேருக்கு பின்னால வாலு எதுக்கு

நாங்கள் சாதியைக் கடந்தவர்கள், என்று பலரும் மார்தட்டிக் கொண்டாலும் உள்மனதில் மறைந்திருக்கும் சாதிய உணர்வே மனித உறவுகளில் வெளிப்படுவதைக் காணலாம். தாங்கள் வாழுகின்ற கிராமங்களில் மட்டுமல்ல பணியாற்றுகின்ற இடங்களில், பள்ளிகளில், கோவில்களில் என்று அனைத்திலும் சாதிபார்த்தே உறவுகளைத் தீர்மானிக்கின்ற சமூகத்திற்கு  இப்பாடல் எழுப்புகின்ற கேள்வி மிகவும் சிந்திக்க வைக்கிறது ஆனால் நகைச்சுவை உணர்வோடு  எழுதப்பட்ட வரிகள் சாதியை நேரடியாகச் சாடினாலும் உணர்வுகளைப் புண்படுத்தாத வண்ணம் எளிதில் மக்களைச் சென்றடைகிறது.

வரிக்கு மேல வரிய போடுற அரசாங்கம்

நம்ம வாழ்வ கெடுத்து வறுமையாக்குற அரசாங்கம்

மக்கள் அதிகாரம் கலைக்குழுவின் மக்கள் பாடகர் கோவன் இசையில் கலைக்குழுவின் பாடகர் செல்வராஜ் பாடிய இப்பாடல் மக்கள் மேல் அரசு சுமத்துகின்ற கொடுமையான வரிச்சுமையைப் பற்றியே சொல்கிறது. தொடர்கின்ற வரிகள் நடப்பில் இருக்கின்ற வரிகளையும் இப்படியே போனால் வருங்காலத்தில் எதற்கெல்லாம் வரிபோடுவர்கள் என்பதையும் நையாண்டி செய்வதாக இப்பாடல் அமைந்துள்ளது. இடையில் இன்னும் ஏதாவது வரி இருக்கா சொல்லுண்ணே என்று வசனமாக கேட்க அதுவா? சனவரி… பிப்ரவரி.. என்று பதிலளிக்க  ஒங்களுக்கு ரொம்பதாண்ணே லொள்ளு என்று மறுபதிலளிக்கும்  வசனங்கள் பாடலின் போக்கை மாற்றுவதோடு கேட்கத் தூண்டுவதாக அமைகிறது. இப்படி நையாண்டி செய்து விமர்சிக்கின்ற பாடல்கள் அரசின் பொருளாதாரக் கொள்கையைப் பற்றி தெள்ளத்தெளிவாகப் புலப்படுத்துகிறது.

4.   அறிவுறுத்தி வழிகாட்டும் வகையில் சமூகத்தை விமர்சனம் செய்யும் பாடல்கள்

இருக்கின்ற சமூகத்தை, சமுதாய அமைப்பை பாடல் மூலமாக விமர்சிப்பவர் யாருக்காக இதைச் செய்கிறாரோ அவர்களுக்கு சில பாடங்களை பாடல் வழியாகக் கற்றுக் கொடுக்கவும் வேண்டும். இது ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட பிரிவினருக்கும் ஏன் ஒடுக்குகின்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய

காடு களைந்தோம் - நல்ல

கழனி திருத்தியும் உழவு புரிந்தும்

நாடுகள் செய்தோம்- அங்கு

நாற்றிசை வீதிகள் தேற்றவும் செய்தோம்

வீடுகள் கண்டோம் - அங்கு

வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்

பாடுகள் பட்டோம் - புவி

பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம்

பாரதிதாசனின் இந்த வரிகளை மக்கள் அதிகார இயக்கத்தின் பாடகர் கோவன் வீர உணர்வூட்டுகின்ற மெட்டமைத்து உழைக்கும் மக்களின் நிலைமை அன்றும் இன்றும் ஒன்றே என அறிவுறுத்தி பாடலின் இறுதியில் எங்கள் சேவைக்கெல்லாம் இது செய்நன்றி தானோ? என்று கேட்கின்ற கேள்வி உழைப்பைச் சுரண்டுகின்ற அத்தனைபேரையும் விமர்சிப்பதாக அமைந்துள்ளது.

பொண்ணு பொறக்குமா ஆணு பொறக்குமா

பத்து மாசமா போராட்டம் - அதுவும்

பொண்ணா பொறந்தா கொன்னுடுவேனுண்ணு

புருஷன் பண்ணுறான் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தின் சில பகுதிகளில் நிலவிய பெண்சிசுக் கொலைக்கெதிரான ஒரு சமூக விமர்சனப் பாடல் இது. பெண்சிசுக் கொலைகள் அதிமாக நடப்பிலிருந்த காலகட்டத்தில் வெளியிடப்பட்ட இப்பாடல் தமிழ்ச்சமூகத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இருக்கிற செய்தியைச் சொல்லி பெண்களை அறிவுறுத்துவதாக அமைந்திருக்கின்ற பாடலாகும். இப்பாடலின் இசை உணர்வுப்பூர்வமான, பாடுகின்ற போது கண்களில் கண்ணீர் வரச்செய்யும் விதத்தில் அற்புதமாக இசையமைக்கப்பட்ட ஒரு பாடலாகும். 

பாடல் மூலமாக சமூக விமர்சனத்தை முன்வைக்கின்ற போது அதே பாடலில் ஒரு தீர்வு அல்லது பிரச்சனையைக் கையாள வழிகாட்டுதல் கொடுப்பதென்பது கேட்கின்ற மக்களுக்கு ஒரு நிறைவைக் கொடுக்கக் கூடியதாகவும் அமைகிறது. அறிவுறுத்தலோடு மக்களை சிந்திக்கத் தூண்டுவதும் அதோடு ஒரு உயரிய வழியைக் காட்டுவதும் மக்கள் பாடல்களில் பின்பற்றப்பட்டு வருகின்ற ஒரு வழிமுறையும் கூட. கீழ்காணும் பாடல் இந்த சமுதாயத்தில் எத்தனையோ கல்வி நிலையங்கள் இருந்தாலும் ஏழைகளுக்கு ஏன் இன்னும் கல்வி கிடைக்கவில்லை என்ற கேள்வியை எழுப்புகின்ற ஒரு பாடல். இப்பாடலை மக்கள் பாடகர் கங்கை குமார் எழுதி  இசையமைத்து பல மேடைகளில் ஒலித்த பாடலாகும்

காண்வென்டு காலேஜின்னு

கல்விச்சாலை வந்துங்கூட

நாங்க மட்டும் இன்னும் ஏங்க படிக்கல

அது ஏந்தாண்ணு கேட்பதற்கு ஆளில்லே

இப்பாடலில் கல்விநிலை குறித்து கேள்வியோடு தொடங்கி மக்களை அறிவுறுத்தி விட்டு பாடலின் இறுதியில் உழைக்கும் வர்க்கம் ஒன்றாக இணைந்து உலகத்தை மாற்ற வேண்டுமென்ற தீர்வை இந்த பாடல் கொடுக்கிறது, அவ்வரிகளை கீழே காணலாம்

இந்த கல்விக் கொள்கை மாறி

வாழ்க்கை கல்வி மலர வேணும்

வர்க்க பேதமின்றி நாம வாழணும்

அதற்கு உழைக்கும் வர்க்கம் எல்லாம்

ஒண்ணா சேருவோம் - இந்த

உலகத்தையே உருப்படியா மாத்துவோம்

5.   மாற்று வழிகளை முன்வைக்கும் வகையில் சமூகத்தை விமர்சனம் செய்யும் பாடல்கள்

கோபத்தை மட்டும் வெளிப்படுத்துவதோ, எதிர்ப்புணர்வை மட்டும் வெளிப்படுத்துவதோ விடுதலைக்கான முழுமை அல்ல மாறாக எதிர்ப்புணர்வோடு விடுதலைக்கான வழிகாட்டுதல் என்பது மக்களை ஒருங்கிணைப்பதற்கும், போராட்டப் பாதையில் கட்டியெழுப்புவதற்கும் உறுதுணையாக அமையும்.

சாதிய அடிமைத்தனத்தால், செய்யும் தொழிலின் அடிப்படையில் உள் முரண்பாட்டோடு வெவ்வேறு சாதிகளாய் பிரிந்திருக்கின்ற ஒடுக்கப்பட்ட மக்களில் சிலரை மையமமாகக் கொண்டு மக்கள் பாடகர் கோவன் இசையமைத்த பாடல் வெட்டுப் பட்டு செத்தோமடா மேலவளவுல

வெந்து மடிஞ்சோமடா வெண்மணியில என்ற பாடலில் வெட்டியான், தோட்டி, அம்பட்டன், வண்ணான் என்றெல்லாம் ஓடுக்கப்பட்ட மக்கள் அழைக்கப்படும் நிலையைச் சுட்டிக்காட்டி ஓந்துணிய தொவைக்கும் போது வண்ணாரப்பய நான் ஒனக்கு சேத்து ஓந்திமிர வெளுப்போம் அப்ப என்ன பேரு எங்களுக்கு என்று முடிவுறும் பாடல் அடிமைத்தனத்தில் வாழுகின்ற மக்களுக்கு புதிய வழியைக் கற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது.

பணிந்து போக மாட்டோம் - எவனுக்கும் பயந்து வாழ மாட்டோம்

தலித்து என்று சொல்வோம் - எவனுக்கும்  தலைவணங்கமாட்டோம் என்ற பாடல் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதோடு

அடங்கி வாழ்வது அடிமைத்தனம் - அதை

அடித்து நொறுக்குவது தலித்து குணம் என்று ஒவ்வொரு அடியின் நிறைவிலும் முடிப்பது ஒரு புரட்சி வழியைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

6.   சமூக விமர்சனத்தை நிகழ்த்தும் முறையில் வெளிப்படுத்தல்

களத்திலும், தெருவிலும், மக்கள் மேடைகளிலும் பாடல் நிகழ்த்துவதென்பது சாதாரணமாக வெகுசன ஊடகங்களில் நிகழ்த்துவது போன்றதல்ல, மேலும் திரைப்படம் சார்பான ஒரு ஆடலும் பாடலும் அல்லது திரையிசைக் கச்சேரி போன்றதும் அல்ல. கலை இரவு மேடைப் பாடல்கள், சாதாரண வீதிகளில் பாடுதல் என்பது முற்றிலும் வித்தியாசமானது. எனவே மக்கள் பாடகர்கள் பாடல் நிகழ்த்துதலில் சில முறைகளை, உத்திகளை கையாளுகிறார்கள்.

தலித் சுப்பையாவின் குழுவானது குழுவாக பாடுதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், குறைந்தபட்சம் இசைக்கருவிகளை பயன்படுத்தியும் நிகழ்த்துகிறார்கள். கே.ஏ.குணசேகரன் சில நாட்டுப்புற கலை வடிவங்களை நிகழ்த்தி இடையிடையே பாடல்களைப் பாடுவார். மக்கள் அதிகாரம் அமைப்பின் பாடகர் கோவன் தனது பாடும் முறையில் தானே முன்னின்று பாட பின்னணியில் சில பாடகர்கள் பின்பாட்டு பாடும் வண்ணம் தெலுங்கானா போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்த கத்தர் என்ற மக்கள் பாடகரைப் பின்பற்றி ஒரே ஒரு பறைமட்டும் இசைத்து பாடக்கூடிய முறையை கையாளுகிறார்.

இவ்வாறு இவர்கள் தங்கள் பாடல்களை நிகழ்துதலில் வேறுபாடுகள் இருந்தாலும் பாடலை சமூக விமர்சனத்துக்கான ஒரு கருவியாக கொண்டிருக்கின்ற இவர்கள் யாவரும் இன்னும் இங்கே பெயர் குறிப்பிடப்படாத சில பாடகர்களும் தங்கள் உடல் அசைவு, பயன்படுத்துகின்ற கலை வடிவங்கள், வாசிக்கின்ற இசைக்கருவிகள் இவையாவற்றிலும் விமர்சிக்கின்ற தன்மைகளை வெளிப்படுத்துகின்றனர்.

முடிவுரை

இசையும் சமூக விமர்சனமும் என்ற இக்கட்டுரையின் நிறைவாக நாம் அறிவதென்னவெனில் காலங்காலமாக சமூகத்தை விமர்சிக்கின்ற வழிமுறையை பலரும் கையாண்டிருக்கின்றார்கள். சில தமிழ் திரையிசைப் பாடல்கள் இதை செய்திருக்கின்றன. மக்கள் வாழ்வியலை பிரதிபலிக்கும் நாட்டார் பாடல்களிலும், மக்களை விடுதலைப் பாதையில் வழிநடத்தும் மக்கள் பாடல்களும் சமூகத்தை விமர்சிப்பதில் வெவ்வேறு உத்திகளையும் கையாண்டிருக்கின்றன என்பதை நாம் காண்கின்றோம். எனவே ஒருங்கமைக்கப்ட்ட ஒலிகளாலான இசை என்பது மனித மனங்களின் மருந்தாகவும், மனித உணர்ச்சிகளின் சுருக்கமாகவும், மனிதனை கற்பனை உலகில் சஞ்சரிக்கச் செய்கின்ற ஒரு ஊடகமாகவும் இருந்தாலும் மனிதனின் விடுதலை வாழ்வுக்கு வித்திடுகின்ற ஒரு கருவியாகவும் திகழ்கின்றது. 

 

துணைநின்ற நூல்கள்

1.    லூர்து தே. 2008: நாட்டார் வழக்காற்றியல் சில அடிப்படைகள்: பாளையங்கோட்டை: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்.

2.    Scott,James C. 1990: Domination and the Arts of Resistance: Hidden Transcripts: Yale University.

3.    1996: சமர்ப்பா: விழிப்புணர்வுப் பாடல்கள்: மொசைக் சமூக சிந்தனை செயல் ஆய்வு மையம்: மதுரை.

4.    பிரிட்டோ வி. 1996: திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்ட அருந்ததியர் பாடல்கள்: தஞ்சாவூர்: நாட்டுப்புறவியல் துறை: தமிழ்ப்பல்கலைக் கழகம். (ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக அளிக்கப்பெற்ற ஆய்வேடு)

கட்டுரைகள்

1.    பிரிட்டோ வி. இசைத்தலில் ‘குடி’ யும் குடி சார்ந்த எண்ணங்களும் விழுமியங்களும்.

2.    பிரிட்டோ வின்சென்ட்: அடித்தள மக்களும் தமிழிசையும்.

 


[1] 91,Nj.Y}h;J>ehl;lhh; tof;fhw;wpay; rpy mbg;gilfs;>ehl;lhh; tof;fhw;wpay; Ma;T ikak;> ghisaq;Nfhl;il>2008.

[2] v];.itahGhpg;gps;is>jkpoh; gz;ghL>nrd;id 1968>150