அக்டோபர் 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

மக்கள் பாடகர்களின் சமூக நிலை (The Social Status of People’s Singers)

வ. விக்டர், முனைவர்ப் பட்ட ஆய்வாளர், கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி      | நெறியாளர்: முனைவர். ஆக்னஸ் ஷற்மீலி, இணைப்பேராசிரியர், கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி ( V.Victor, Research Student, Kalaikaviri College of Fine Arts, Tiruchirappalli | Guide: Dr.D.Agnes Sharmeeli, Associate Professor, Kalaikaviri College of Fine Arts, Thiruchirappalli 10 Oct 2024 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்

உலகில் காணப்படும் பலவகைப் பாடகர்களில் மக்கள் பாடகர்கள் தனித்தன்மையும் தனிச்சிறப்பும் வாய்ந்தவர்கள். சமூகப்படிநிலை அமைப்பில் ஆதிக்க வர்க்கத்தினரால் அடிமைத்தனத்திற்குள்ளாகும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடல்களை பாடுகின்ற சமூக அக்கறை கொண்டவர்களே அவர்கள். சமூகத்தை முன்னேற்ற வேண்டுமென்ற நோக்கம் கொண்ட அப்பாடகர்களின் சமூகநிலை எவ்வாறு அமைந்துள்ளது என்பதைக்குறித்து ஆராய்வதும் அப்படிப்பட்ட மக்கள் பாடகர்களின் மேம்பாட்டுக்காக பரிந்துரைப்பதுமே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முதன்மைச் சொற்கள்: மக்கள், பாடகர், சமூகநிலை, நாட்டார், வாழ்வியல்

Abstract

People’s Singers are unique and special among all the kinds of singers in the world. They are the one who sing with social concern towards the oppressed and depressed in the hierarchical society. This article tries to explore the social status of these singers and to propose suggestions for their upliftment.  

The prime terms: People, Singers, Social Status, Folklore, life.

 

சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினரும் வெவ்வேறு நிலைகளில் வாழ்பவராவார். அவர்கள் பிறந்து வளர்ந்த சூழல்கள் அடிப்படையிலோ, அவர்கள் செய்கின்ற தொழில் அல்லது அவர்களது சேவையின் அடிப்படையிலோ, சமூக, பொருளாதார, அரசியல் பின்னணியின் காரணமாகவோ வெவ்வேறு நிலைகளில் வாழ்கின்றார்கள். இக்கட்டுரையின் மையமாகத் திகழ்கின்ற மக்கள் பாடகர்களின் சமூக நிலை குறித்து அறிவதற்கு பின்புலமாக பொதுவாக பாடகர்கள் என்ற பிரிவினர் எந்தெந்த நிலைகளில் வாழ்கின்றார்கள் என்பதை அறிவது தேவையாகிறது. 

பாடகர்களின் வகைகள்

1.1. தொழில்முறைப் பாடகர்கள்

தொழில்முறைப் பாடகர்களை Professional singers  என்று கூறுகின்றோம். இவர்கள் பாடுவதையே தொழிலாகக் கொண்டு வாழ்பவர்களாவர். இவ்வகைப் பாடகர்கள் பெரும்பாலும் தமிழிசை அல்லது கர்நாடக இசை அல்லது மேற்கத்திய இசை முறையில் குரலிசையை கோட்பாடு (Theory) மற்றும் செய்முறை (Practical) வழியில் பயின்றவர்களாவர். தொழில்முறைப் பாடகர்கள் கோட்பாட்டளவில் பயின்றதோடல்லாமல் ஒலிப்பதிவுக்காக தனிப்பயிற்சியும் பெற்றிருக்கின்றார்கள். இவர்கள் முக்கியமாகத் தங்கள் பாடலுக்கேற்ற கூலியை நிர்ணயம் செய்து அதைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஊடகங்களில் இவ்வகைப் பாடகர்களுக்கு அங்கீகாரமும் அதே வேளையில் போதிய அளவுக்கு ஊதியமும் கிடைக்கப்பெறுவதால் இவர்களது பொருளாதார நிலை உயர்ந்துள்ளது. அதோடு சமூக அங்கீகாரம் மற்றும் மதிப்பு பெற்றவர்களாகவும் திகழ்கின்றார்கள்.

1.2. களப்பாடகர்கள்

களப்பாடகர்களை களத்தில் பாடகர்கள் எனவும் அழைக்கலாம். இங்கே களம் என்பது பாடுகின்ற இடத்தை அல்லது சூழலைக் குறிக்கிறது. இவர்கள் வாழ்வியல் களத்திலிருந்து தங்கள் அனுபவங்களை அதாவது வாழ்க்கைச் சூழலை களமாகக் கொண்டு பாடுபவர்களாவர்.

தாங்கள் செய்யும் தொழிலில் இயல்பாக எழுகின்ற பாடல்கள், உறவு சார்ந்த பாடல்கள், கடமை சார்ந்த பாடல்கள் எனத் தாங்கள் சார்ந்திருக்கின்ற இடத்திற்கேற்ப, சூழலுக்கேற்ப பாடுகின்ற பாடல்களை இவ்வகையில் பார்க்கலாம். இந்த வகையில் தாய் தன் பிள்ளைக்குப் பாடுகின்ற தாலாட்டும், விவசாயி தன் உழைப்புக்கு, களைப்பைப் போக்க பொழுதுபோக்கிற்கு பாடுகின்ற விவசாயப் பாட்டு, மீனவர் வலையிழுக்கும் போது அல்லது படகில் செல்லத் துடுப்பு செலுத்தும் போது பாடுகின்ற ஏலேலோ பாட்டு, கூலிக்காக அல்லாமல் இறந்தோருக்காக இயல்பாகப் பாடுகின்ற ஒப்பாரிப்பட்டு போன்றவை களப்பாடகர்களால் பாடப்படும் பாடல்கள் எனலாம். இவ்வகைப் பாடகர்களும் இந்தக் காலத்தில் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் பாடுவதற்கான வாய்ப்பு பெறுகிறார்கள்.

1.3. நாடோடிப் பாடகர்கள்

நாடோடிப் பாடகர்கள் என்பவர்கள் தங்கள் பாடல்களை ஒரே இடத்திலோ, ஒரே பகுதியிலோ நிறுத்திக்கொள்ளாமல் ஓரிடத்திலிருந்து இடம் பெயர்ந்து வெவ்வேறு இடங்களுக்குச் சென்று தேவைக்கேற்றாற்போன்று தத்துவப்பாடல்களை பாடக்கூடியவர்களாவர். நாடோடிப் பாடகர்கள் பெரும்பாலும் தொழில்முறைப் பாடகர்களல்ல.

பவுல் (Baul) என அழைக்கப்படும் மேற்குவங்கத்திலுள்ள நாடோடிப் பாடகர்கள், புத்த சமய ஆன்மீக வழியாகிய சகஜா (Sahaja) மற்றும் இஸ்லாமிய சூஃபிகள் வழியும் கலந்த ஆன்மீகப் பாணர்கள் அல்லது பாடகர்கள் என்ற நாடோடிப் பாடகர்களாவர்.

அதுபோலவே ஃபக்கீர்கள் எனப்படுபவர்கள், தனது ஆய்வுக் கட்டுரையில் முனைவர் ஆக்னஸ் சர்மீலி  பக்கீர்களைக் குறித்து “இஸ்லாமிய இரவலர் பிரிவினருள் இசை மூலம் சமய நெறிகளைப் பரப்பி யாசகம் புரிந்து, கிடைக்கும் பொருள்களைக் கொண்டு, துறவிகள் போன்று எளிமையான வாழ்க்கை வாழும் நாட்டார் இசைக்கலைஞர்களே ஃபக்கீர்கள்”. என்கிறார். (2012,44) இவ்வகைப் பாடகர்கள் சார்ந்திருக்கின்ற சமயத்தில் அங்கீகாரம் பெறுகிறார்கள் ஆனால் பொருளாதாரத்தில் பெரிய அளவில் முன்னேறியவர்கள் அல்ல.

1.4 மக்கள் பாடகர்கள்

சாதாரண மக்களை எளிதில் சென்றடையக் கையாளப்படும் கலைகளையும், மக்கள் வாழ்வியலை உள்ளடக்கியுள்ள கலைகளையும், உழைப்பைப் பின்னணியாகக்கொண்ட உழைக்கும் மக்களின் கலைகளையும் மக்கள் கலைகள் என்கிறோம். பல மக்கள் கலாச்சாரங்களில் உழைப்போடு தொடர்புடைய இயற்கையோடு மக்கள் நிகழ்த்துகின்ற சடங்குகள், வேட்டைக்குச்  செல்லுமுன் நிகழ்த்துகின்ற மாதிரி வேட்டைகள், விவசாயிகள் மழைக்காக இயற்கையின் ஒலிகளை எழுப்பி செலுத்துகின்ற வழிபாடுகள், மீன்பிடிக்கச் செல்லுகின்றபோது இயல்பாகவே அமைகின்ற அசைவுகள் இவையாவும் காலப்போக்கில் கலைவடிவங்களாகவும், கலைகளின் அசைவுளாகவும் மாறி மக்கள் கலைகளாயின. இவ்வாறு உழைப்போடு தொடர்புடைய இசையில் இயல்பாகவும் சிலநேரங்களில் தேவைக்கேற்றார்போன்றும் மக்களுக்கான வார்த்தைகளை இணைத்து உருவாவதே மக்கள் பாடல்களாகும்.

மார்க்சியப் பார்வையில் மக்கள் என்றால் ஒடுக்கப்பட்ட மக்களையே குறிக்கிறது. இந்த உலகம் மக்களை இரண்டாக பிரித்து வைத்திருக்கிறது. வர்க்க அடிப்படையில் ஏழை பணக்காரன் என்றும், சாதிய அடிப்படையில் தாழ்த்தப்பட்டவன் உயர்ந்தவன் என்றும், இன அடிப்படையில் கருப்பர் வெள்ளையர் என்றும், ஆட்சி உறவின் அடிப்படையில் அடிமை ஆண்டான் என்றும் பிரித்தே பார்க்கிறது இந்த சமூகம். இதில் பாதிக்கப்பட்டவர் யாரோ, உரிமை பறிக்கப்பட்டவர் யாரோ, நிலமோ, பணமோ இல்லாதவர் யாரோ அவர்களைத்தான் “மக்கள்” என்கிறார் மக்கள் பாடகர் லெனின் சுப்பையா. எனவே மக்கள் பாடகர்கள் மேற்குறிப்பிடப்பட்ட மக்களுக்காக, அவர்களது பிரச்சனைகளையும், அதற்கான காரணங்களையும், அவற்றிற்கான தீர்வுகளையும் தங்கள் பாடல்கள் வழியாகச் சொல்வதால் மக்கள் பாடகர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

மக்கள் பாடகர்கள் வெளிப்படையாக சமூக விமர்சனங்களையும், எதிர்ப்புணர்வையும் பாடல்கள் வாயிலாக வெளிப்படுத்துவதோடு சமூக மாற்றத்தையே நோக்கமாகக் கொண்டு பாடல்களை படைப்பாக்கம் செய்கின்றவர்கள். மக்கள் விடுதலையை முதன்மையான இலக்காகக் கருதி அர்ப்பண உணர்வோடு  வாழ்கின்றவர்கள். இத்தகைய பாடகர்களே மக்கள் வாழ்வியலின் ஒரு கூறாக இருக்கின்ற அவர்களின் பிரச்சனைகளை, குறிப்பாக அவர்களது சமூக, அரசியல், பொருளாதார பிரச்சனைகளைப் பாடல்களாக நிகழ்த்தி மக்கள் மனதில் பதியவைத்துள்ளனர். இவர்கள் மெத்தப் படித்த அறிவாளிகளோ, அல்லது மிகப்பெரும் முதலாளித்துவ பின்னணி கொண்டவர்களோ அல்ல என்று மக்கள் பாடகர் கோவன் நேர்காணலில் விளக்கமளிக்கிறார்.

இவ்வாறு தங்கள் வாழ்வை அர்ப்பணித்து இப்பணியைச் செய்கின்ற மக்கள் பாடகர்களின் சமூக நிலை என்ன என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மக்கள் பாடகர்கள் என்ற வரையறைக்குட்பட்ட பாடகர்களுள் சிலர் தமிழ்ச் சமூக மேம்பாட்டிற்காகப் பல பகுதிகளில் செயல்பட்டவர்களாவர். விழுப்புரம் மாவட்டம் முகையூரைச் சர்ந்த திரு.எ.பி.நாயகம், வேடந்தாங்கலைச் சேர்ந்த தம்பதியர் மணிமாறன் மற்றும் மகிழினி மணிமாறன், புதுச்சேரியைச் சேர்ந்த தலித் சுப்பையா, சிவகங்கையைச் சேர்ந்த கே.ஏ.குணசேகரன், திருச்சியைச் சேர்ந்த கோவன், கோவில்பட்டியைச் சேர்ந்த அமலி போன்றோர் தங்களது காலத்தில் தாங்கள் வாழ்ந்த பகுதிகளிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தங்களது பாடலால் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களாவர்.

இவர்கள் பெண்ணடிமைத்தனத்தைச் சாடியும், குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டியும், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தியும், மதவாதப் போக்குகளை கண்டித்தும், பாலியல் வன்முறைகளை எதிர்த்தும், சாதிய அடக்கு முறைகளை அகற்ற வேண்டியும், அரசியல் அநாகரிகங்களை கேள்விக்குட்படுத்தியும் பல்வேறு பாடல்களை இயற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கி சமூக மாற்றம் காண விழைந்தவர்களாவர். இவர்களுடைய சமூக நிலை குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்.

மக்கள் பாடகர்களின் சமூக வாழ்வியல் நிலை

தமிழகத்தில் சாதியப் படிநிலை அமைப்பைச் சார்ந்தே மக்கள் வாழ்வும் வாழ்வியல் கூறுகளும் அடங்கியிருக்கின்றன. சாதியப் படிநிலையில் ஒருவன் எந்த இடத்தில் இருக்கிறானோ அந்த இடத்தை, சாதியைக் கொண்டே அவனுடைய மொழி, இலக்கியம், கலை, அறிவு ஆகிய அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளும் மதிப்பிடப்படுகின்றன. குறிப்பிட்ட சாதியினர் அல்லது குழுவினருடைய மொழி ‘தேவபாஷை’யாகவும் மற்றொரு பிரிவினரின் மொழி ‘நீஷபாஷை’ யாகவும் மேலாதிக்கப் பார்வையோடு தரநிலையில் இழிவுபடுத்தப்படுகின்றனர். (2012, தனஞ்செயன், 27.)

“இந்து அறநிலைத் துறைக்கு உட்பட்ட கோயில்களின் விழாக்களில் தலித் மக்களின் கலைகளான ஜிம்ப்ளா மேளம், தண்டோரா, பறையிசை இவை அனுமதிக்கப்படுவதில்லை” என்று தனஞ்செயன் கூறுகிறார். நாட்டார் கலைகளுக்கு இடம் ஒதுக்குவதைப் போல மக்கள் பாடகர்களுக்கும் கோவில்களில் தகுந்த இடமும் வாய்ப்பும் கொடுக்கப்படுவதில்லை. கே.ஏ.குணசேகரன் என்ற மக்கள் பாடகரின் கூற்றுப்படி “சாதிய ஏற்றத்தாழ்வு மற்றும் குடிஊழிய முறையின் சுமைகளைத் தாங்க முடியாமல் பல ஆண்டுகளுக்கு முன்னால் கலைஞர்கள் பலர் தங்கள் தங்கள் வட்டாரங்களை விட்டுவிட்டு புதுக்கோட்டை தஞ்சாவூர் உள்ளிட்ட நகர்ப் புறங்களில் குடியேறி நையாண்டி மேளம், கரகாட்டம் குறவன் குறத்தி ஆட்டம் என்று தங்கள் நிகழ்துகைத் தொழிலைத் தொடர்கின்றனர்” இதேபோல மக்கள் பாடகர்கள் பலரும் நகரம் நோக்கி புலம்பெயர்ந்துள்ளனர்.

மக்கள் பாடகர் அமலி என்பவர் செம்மணிக் கலைக்குழுவில் இணைந்து பாடத் துவங்கியபோது தனது சொந்த சகோதரனே “அது எப்படி பெண் மேடையேறி பாடுவது?” என்று பாடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அதையும் கடந்து மக்கள் பாடகராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் பாடகர்கள் தங்களது மாற்று அரசியலுக்காகக் கடுமையான அடக்குமுறைகளுக்கும், தாக்குதல்களுக்கும், வீணான வழக்குகளுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். இவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்பது சிலருக்கு புதியதாகவே உள்ளது. மக்கள் பாடகர் கோவன் நேர்காணலில் “என்னைப் போன்ற மாற்று அரசியல்வாதிகள், புரட்சியாளர்கள் போராளிகள் சமூக அக்கறையுள்ளவர்கள் அடக்குமுறைகளையும், வழக்குகளையும், தாக்குதல்களையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சமூகக் கோட்பாடுகளைப் படித்ததினால் இந்த அடக்குமுறையை எதிர்த்து வாழ்ந்து காட்டவேண்டும். இதே களத்தில் நிற்க வேண்டும் என்கிற மனஉறுதி என்னிடத்தில் இருக்கிறது, அதனை சோதனை என்று கூட வைத்துக் கொள்ளலாம்,” என்கிறார். இன்றைய சமுதாயத்தில் மக்கள் பாடகர்கள் பல நெருக்கடிகளுக்குள்ளாகின்றார்கள் என்பதை இவ்வாறு அறிய முடிகிறது.

மக்கள் பாடகர்களின் சமூக பொருளாதார நிலை

மக்கள் பாடகர்களின் பொருளாதார வாழ்வு என்பது மிகவும் பின்தங்கிய நிலையிலே உள்ளது. பாடலை மட்டுமே முழுநேரப்பணியாகக் கொண்டிருக்கிற மக்கள் பாடகர்களால் இன்றைய சமூகத்தில் ஒரு சமூக அந்தஸ்தோடு கூடிய உயர்நிலை வாழ்க்கை வாழ முடியவில்லை. பாடுதலை ஒரு பகுதிநேரப் பணியாகவும் அதோடு வருமானம் ஈட்டக்கூடிய வேறொரு தொழிலோ அல்லது வியாபாரமோ இருந்தால் மட்டுமே தங்கள் குடும்பத்தைக் கட்டிக்காக்க முடிகின்றது.

இன்று விளையாட்டுத் துறையிலும் ஒருசில விளையாட்டுகளில் குறிப்பாக கிரிக்கெட், இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளில்  வெற்றி பெறுபவர்களுக்கு கிடைக்கும் கூலியும், பரிசுத் தொகைகளும் மிகப்பெருமளவில் இருப்பது போன்று கபடி போன்ற விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கப்பெறுவதில்லை. அதேபோல மேற்கத்திய இசை, செவ்வியல் இசைக் கலைஞர்கள் அல்லது பாடகர்களுக்கு கொடுக்கப்படும் தொகையைப்போல அல்லாமல் மிகவும் குறைவாகவே நாட்டார் பாடகர்கள் மற்றும் மக்கள் பாடகர்களுக்கும் கொடுக்கப்படுகின்றது என்பது மக்கள் பாடகர்களின் மிகவும் பின்தங்கிய பொருளாதார வாழ்வுக்குக் காரணமாகிறது.

மக்கள் பாடகர்களின் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்பவர் ஒரு தொகைக்கு ஒத்துக் கொண்டு அந்நிகழ்ச்சி நிகழ்த்தி முடிந்த பின்பு ஒத்துக்கொண்ட தொகையை விட குறைவான தொகையைக் கொடுத்து கேவலப்படுத்துகின்ற நிலை இருக்கிறது. இங்கே மக்கள் பாடகர்கள் மதிக்கப்படுவதில்லை என்பதும் தங்களது உழைப்புக்கேற்ற கூலி கொடுக்கப்படுவதில்லை என்ற இருவித தாக்குதல்களுக்கு உள்ளாகின்றார்கள்.

மக்கள் பாடகர்கள் என்ற அடையாளத்தைப் பெற்றவர்கள் பெரும்பாலும் வேறெந்த தொழிலும் செய்யத் தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள். இது குறித்து மக்கள் பாடகர் கோவன் கீழ்கண்டவாறு கூறுகிறார்.

பாடுவதைத் தவிர வேறு மாற்று தொழில் செய்யத் தெரியாது. அதனால் இழப்பதற்கும் ஒன்றுமில்லை. வாழ்க்கையின் இனிமையும் இதுவே! முழு நேரமாக இந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் செயல்படுவதால் நல்லெண்ணம் கொண்ட தோழர்கள் எங்கள் அமைப்புக்குத் தரும் நிதியிலிருந்து எனது  அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி எளிமையான வாழ்க்கை மட்டுமே நடத்தமுடிகிறது. அந்த எளிமையான வாழ்க்கைக்கு  நாம் நம்மை உட்படுத்திக் கொள்ள வேண்டும். இதை தாண்டி எனக்கு பெரிய எதிர்பார்ப்புகள் கிடையாது. இதனால் பிழைப்பு கெட்டுப் போய்விட்டது என்கிற ஏமாற்றம் எதுவும் இல்லை. பொருளாதார நெருக்கடி கொடுத்து இதிலிருந்து வெளியேறிவிடலாம் என்பதில்லை. என்கிறார்.

மக்கள் பாடகர் கோவன் கூறிய கருத்தையொட்டியே பின்தங்கிய பொருளாதார நிலையில் வாழ்வதன் காரணமாக குறிப்பிடப்பட்டத் தொகையை பெறமுடியாமல் போனாலும் அத்தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் செய்ய முன்வர இயலவில்லை என்பது ஒருபுறமிருக்க சன்மான இழப்பு ஏற்படுவதை பொருட்படுத்தாமல் கொள்கைத் தெளிவோடும், காசுக்காகத் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மறுக்கும் கலைஞர்களும் இருக்கின்றனர் என்று அ.தனஞ்செயன் கூறுகிறார்.

மக்கள் பாடகர்கள் தங்கள் சமூக பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய இடத்திலே உள்ளனர் என்பதை மேற்கண்ட உதாரணங்கள் எண்பிக்கின்றன. ஆயினும் அவர்களது ஏழ்மையும் வறுமையும் அவர்கள் கொண்டிருக்கின்ற கொள்கை, செயல்வேகம், விடுதலைச் வேட்கை, சமூக அக்கறை, நீதியுணர்வு ஆகியவற்றில் எந்தவித சமரசப் போக்கிற்கும்  வழிவகுக்கவில்லை என்பதும் தெளிவாகிறது.

மக்கள் பாடகர்களின் சமூக பண்பாட்டு நிலை

மக்கள் பாடகர்கள் தங்களது பண்பாடு சார்ந்த சமயம், கல்வி, சடங்குகள், நடைஉடை, மொழி போன்ற தளங்களில் எவ்வாறு பங்கேற்க முடிகிறது, ஈடுபட முடிகிறது என்பதைப் பற்றிப் பேசுவதே இப்பகுதியின் முக்கியத்துவம்.

தமிழ்ச் சமூகம் இன்று திரைப்படத் துறையின் நடிகர்களை பண்பாட்டு நாயகர்களாக முன்னிலைப்படுத்துகிறது.  அரசு வழங்குகின்ற விருதுகள் திரைத்துறைக்கு அதிகமாகக் கொடுத்து மக்கள் கலைஞர்கள் பாடகர்களுக்கு பெயரளவிற்கு கொடுக்கும் வழக்கம் கலைஞர்கள் மத்தியில் சமூக விரிசலையும், ஏற்றத்தாழ்வையும் ஏற்படுத்துகிறது.

மக்கள் பாடகர்களின் பண்பாட்டுச் சூழலைப் பற்றிக் கூறுகின்ற அமலி முன்னைய காலத்தில் வாழ்க்கை எப்போது விடியும் என்ற எதிர்நோக்கும் எதிர்பார்ப்பும் இருந்தது. பொழுதுபோக்கை முன்னிலைப்படுத்தாத காலமாக இருந்ததால் பாடல்கள் மனக்கண் முன்பாக திரையிட்டு நின்றது. இப்போது அவ்வாறு இல்லை மேடையில் என்ன பாடலை பாடவேண்டும் என்று நிர்பந்திக்கிற மக்கள் குறிப்பிட்ட பாடல்களை வேண்டாம் என பாதியிலே நிறுத்திவிடவும் செய்கிறார்கள். என்று பாடுகின்ற தளத்தில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களைப் பற்றிச் சொல்லுகிறார்.

பாடுகின்ற தளங்களில் என்ன பாடல் பாடுகிறார்கள் என்பதை வைத்து எதிர்ப்புக்களை இவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. காதல் பாட்டுப் பாடினால் கைதட்டுகிறவன் கருத்துப் பாடலைப் பாடுகின்றபோது அல்லது சித்தாந்த பாடல்களைப் பாடுகின்றபோது உற்சாகப்படுத்துவதில்லை. மக்கள் பாடகி மகிழினி மணிமாறன் அவர்கள் இதுபற்றி கூறும்போது “திரைப்படத்தில் பாடிப் புகழ்பெற்ற எனக்கு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா சென்று பாடிய எனக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் எளிதான ஒரு கச்சேரிக்கூட அமையவில்லை. ஏன் அவ்வாறு புதிய வாய்ப்பு அமையவில்லை என்றால் அங்குள்ள கோவில் தர்மகர்த்தாக்கள் எல்லாம் எங்களது வளர்ச்சியில் பெருமைப்பட்டார்களேயன்றி எங்களை சமூத்தில் இன்னமும் அங்கீகரிக்கவில்லை. தொழில் ரீதியாகக் கலைஞர்களை முடக்கம் செய்வது என்பது தான் சமூக எதார்த்தம்” என்று வேதனையோடே சொல்கிறார்.

மக்கள் பாடகிகள் என்றால் அவர்கள் பெண் என்பதால் சந்திக்கின்ற பிரச்சனைகள் வேறு. தங்களது குடும்பம் தொடங்கி பாடுகின்ற களம் வரை அவர்கள் அடக்குமுறைக்கும் அடிமைத்தனத்துக்கும் கேலிப்பேச்சுக்கும் உள்ளாகிறார்கள். பொதுப் பேருந்தில் பயணிக்கின்ற போது அவர்கள் காதை எட்டுகின்ற ஏளனப்பேச்சுகள் அவர்களை மனம் உடையச் செய்கின்றது. மக்கள் பாடகிகள் மகிழினி மற்றும் அமலி போன்றோர் இதை அனுபவப்பூர்வமாகவே சந்தித்தவர்களாவர்.

நாட்டார்கலைஞர்கள் தாங்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள இயலாமல் தங்கள் கிராமங்களை விட்டு நகர்புறங்களில் சென்று குடியமர்கிறார்கள் என்ற மக்கள் பாடகர் கே.ஏ.குணசேகரன் அவர்களின் கூற்று இங்கே மக்கள் பாடகர்களுக்கும் பொருந்துகிறது. சொந்த ஊரில் மக்கள் பாடகர்கள்மேல் ஒடுக்குதல் தொடர்வதாலும், உரிய அங்கீகாரம் கிடைக்காததாலும், நிகழ்ச்சிகளை நடத்துகின்ற வாய்ப்பின்மையாலும் இவர்களும் நகர்ப்புறம் நோக்கி நகர்கிறார்கள் என்பதை மேற்கூறப்பட்டுள்ள பாடகர்கள் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது.

மக்கள் பாடகர்கள் இன்று 

மக்கள் பாடகர்களின் வாழ்வியல் கூறுகளை களத்தில் சென்று நோக்கும் போது இன்றளவும் அவர்களது வாழ்வில் வளர்ச்சி என்பது எல்லோருக்கும் கைக்கூடவில்லை என்றே சொல்ல வேண்டும். மக்கள் பாடகர்கள் தங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளை இதே துறையில் வளர்த்தெடுப்பதில் இருக்கின்ற சிரமங்களையும் தெரிந்துகொள்கிறோம். வெகுசன ஊடகங்களின் தாக்கமும், சமூக ஊடகங்கள் வழியாகவே இன்று இவற்றை செய்யமுடியும் என்ற கட்டாயமும் முன்னைய பாணியில் இப்பணிகளைச் செய்வது சாத்தியமில்லாமல் போகிறது. சென்னை போன்ற சில மாநகரங்களில் இன்று பிரபலமாக இருக்கின்ற கானா பாடகர்களை மக்கள் பாடகர்களின் புதிய பரிணாமம் என்று சொல்ல முடியும். ஏனென்றால் அவர்களது மொழியில் அதாவது செம்மைப்படுத்தப்படாத அவர்களது வாழ்க்கை மொழியில் பாடுவது முதன்மைப்பண்பாக அமைந்துள்ளது. கானா பாடகர்கள் இன்று ஏராளம் பேர் இருந்தாலும் திரைப்பட வாய்ப்பு கிடைக்கப்பெற்ற அறிவு, பாலா, உலகநாதன் போன்ற ஒருசிலர் மட்டுமே சமூகத்தில் அங்கீகரிக்கப்படுகிறார்கள் மேலும் பொருளாதாரத்திலும் ஓரளவுக்கு உயர்ந்துள்ளார்கள்.

மக்கள் பாடகர் என்ற அடையாளத்தோடு ஒரு அரசுச் சம்பளம் பெறுகின்ற ஆசிரியையாகிய அமலி போன்றோருக்கு மக்கள் பாடகர் என்பதனால் கிடைக்காத முகவரி தனது அரசுப் பணியால் கிடைத்திருக்கிறது ஆனாலும் தொடர்ந்து மக்களுக்காக பாடுவதை நிறுத்தவில்லை என்பது பெருமையோடு பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

மணிமாறன் மற்றும் மகிழினி மணிமாறன் போன்றோர் தங்களது சொந்த ஊரில் தான் அங்கீகாரம் இல்லை என்றாலும் திரைத்துறையில் கிடைத்த வாய்ப்பின் மூலமாக தமிழகத்தில் சாதாரண மக்கள் மத்தியில் தங்கள் பாடல்களுக்கு கிடைத்திருக்கின்ற வரவேற்பை மிகப்பெரும் அங்கீகாரமாகக் கருதுகிறார்கள். முக்கியமாக சுனாமி, கஜா புயல் போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் நேரடியாகச்  சென்று பாடல் மூலம் ஆறுதல் சொன்னபோதும்,  கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் இணைய வழியில் பாடிய பாடல்கள் உரையாடல்கள் மூலமாகவும் மக்கள் மத்தியில் இவர்களுக்கு மதிப்பையும் மரியாதையையும் தேடித்தந்திருக்கிறது.

ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் இயக்க வரலாற்றில் தனது பங்களிப்பை பெரிதும் நல்கிய மக்கள் பாடகர் ஏ.பி.நாயகம் இன்றும் வறுமையில் வாழ்கிறார். விடுதலைக் குரல் என்ற கலைக்குழுவின் மூலம் மக்கள் பாடகராய் பயணித்து மடிந்த தலித் சுப்பையா வாழ்ந்த வரை வறுமையில்தான் வாழ்ந்தார்.

நாட்டார் கலைஞர்களையும், மக்கள் பாடகர்களையும் ஒருங்கிணைத்து தங்கள் கலைகளை மாநிலத் தலைநகரங்களிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் நிகழ்த்த வாய்ப்பளிக்கின்ற  கலை இலக்கிய மேடை நிகழ்ச்சிகள், கலை இரவுகள் போன்றவை வாழ்வு முழுவதும் கைகொடுப்பதில்லை. அது இவர்களது வாழ்வு உயர்வதற்கான ஒரு தீர்வாகவும் அமைவதில்லை.

ஆனால் கர்நாடகம் கேரளம் போன்ற மாநிலங்களில் செயல்படும் அரசு சார்ந்த நாட்டார் வழக்காற்றுக் கழகங்கள், நாட்டார் வழக்காற்று அருங்காட்சியகங்கள், ஆவணக் காப்பகங்கள் போல தமிழகத்திலும் இருந்திருந்தால் அது மக்கள் பாடகர்களுக்கும் ஒரு வழிகாட்டுதலாகவும் உயர்வுக்கான பாதையாகவும் இருந்திருக்கும்.

முடிவுரை

இக்கட்டுரையின் நிறைவாக மக்கள் பாடகர்கள் தங்கள் சமூக வாழ்வியல் நிலைகளில் உயர்ந்த நிலையில் இல்லை என்பதை உணரமுடிகிறது. ஆதிக்க அரசியல், வெறுப்பு அரசியல், ஆட்சியைத் தக்கவைக்கும் அரசியல் என்று தங்களை மட்டுமே பாதுகாக்க நினைக்கும் அரசமைப்பு கொள்கைகளும் செயல்பாடுகளும் நிறைந்த நாட்டில் மக்கள் பாடகர்களின் முன்னேற்றத்தில் சமூக ஆர்வலர்களும், சமூக போராளிகளும், சமூக நீதிக்காவலர்களும் குரல் கொடுக்க வேண்டும். காரணம் ஒட்டுமொத்த சமுதாயத்தில் குரலற்றோரின் குரலாகத் திகழ்கிறார்கள்.

துணைநின்ற நூல்கள்

1.    தனஞ்செயன் ஆ. 2012: தமிழ்ச் சமூகத்தில் நாட்டார் கலைஞர்கள், தீண்டாமையும் மனித உரிமைகளும் பாளையங்கோட்டை: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்.

2.    செயப்பிரகாசம், ரேவதி குணசேகரன் (தொகுப்பாளர்கள்) 2016: மக்கள் கலைஞர் கே.ஏ.குணசேகரன்: சென்னை: புலம்.

Reference

  1. Thananchayan A 2012 Thamil Samuhathil Nattar Kalaignarhal, Theendamayum Manitha Urimaihalum, Palayamkottai, Nattar Vazhakkattiyal Aaivu Mayyam.
  2. Seyapprahasam, Revathy Gunasekaran (Thohuppalarhal) 2016 Makkal Kalaiganr K.A.Gunasekaran: Chennai Pulam.