ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

குன்றக் குறவர்களின் வாழ்வியலும்; உட்பிரிவுகளும்

ச. சசிக்குமார் எம்.ஏ. எம்.பில்., முனைவர் பட்ட ஆய்வு மாணவர், பழங்குடி மக்கள் ஆய்வு மையம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 10 Feb 2022 Read Full PDF

கட்டுரையாளர்: ச. சசிக்குமார் எம்.ஏ. எம்.பில்., முனைவர் பட்ட ஆய்வு மாணவர், பழங்குடி மக்கள் ஆய்வு மையம்,  தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

நெறியாளர்: முனைவர் எம்.ஏ. சிவராமன் எம்.ஏ. எம்.பில்., பி.எச்.டி.,  துறைத் தலைவர்,  பழங்குடி மக்கள் ஆய்வு மையம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

ஆய்வுச் சுருக்கம்

குறிஞ்சி நிலம் எனப்படும் மலையும் மலை சார்ந்த பகுதிகளில் வாழ்ந்த குன்றக்குறவர்கள் (KundraKuravar) பண்டைகால தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த குன்றக் குறவர்களை கானவன், குன்றவன், வேடர் எனவும் வேடுவர் எனவும் மறுபெயர் கொண்டு அழைப்பர். வேட்டையாடி உணவு உற்பத்தி செய்த பண்பாட்டினை கொண்டவர்களாக குன்றக்குறவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை சங்ககால இலக்கியங்களில் குறிப்பிடுகின்றன. விருந்தினருக்கு தேனும், தினையும் வழங்கி விருந்தோம்புகின்ற குன்றக்குறவர்கள் வாழ்வியலையும் அவர்களின் உட்பிரிவுகள் குறித்தும் ஆய்வு செய்வதுமே இக்கட்டுரையின் நோக்கம்.

திறவுச்சொற்கள்

குறிஞ்சிநில மக்கள், குன்றக்குறவர், குன்றவன், கானவன்

முன்னுரை

தமிழ்ச் சமுதாயத்தைப் பொறுத்தவரை தமிழர்களின் வாழ்வும் பண்பாடும் நிலங்களைச் சார்ந்து இருந்தன என்பதைச் சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்துகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து நிலங்களாக தமிழ்ச் சமுதாயம் பிரிக்கப்பட்டிருந்தது.

அந்த ஐவகை நிலங்களுள் மலையும் மலையைச் சார்ந்த இடமான குறிஞ்சியில் வாழ்ந்த மக்கள் ‘குன்றுவர்கள்’ என்று அறியப்பட்டிருந்தனர். ஆண்களை ‘குன்றுவன்’ என்றும், பெண்களை ‘குன்றுவத்தி’ என்றும் அழைக்கப்பட்டார்கள். ஆக மலைகளின் மைந்தர்கள், மலைவாழ் மண்ணின் மைந்தர்கள் என்று குன்றுவ மக்களை குறிப்பிடலாம். இன்று அந்தக் குன்றுவ மக்களின் பெயர் மருவி “குறவர்” என்று தற்போது அழைக்கப்படுகிறார்கள்.

மலைகளில் கூட்டம் கூட்டமாகக், குழுக்களாகக் குழுமி வாழ்ந்த குன்றுவ மக்கள் இன்று பல இடங்களில் சிதறிக் கிடக்கிறார்கள். தற்போது இனப்பெயரான குறவர் என்ற பெயரே 27 பெயர்களாகச் சிதறிக் கிடக்கின்றனர். குறிப்பாக மலைக் குறவன், குறவன், தலையாரி, காவல்கார குறவர், உப்புக் குறவர், தப்பைக் குறவர், கந்தர்வக்கோட்டை குறவர், ஈஞ்சிக் குறவர், களிஞ்சி தப்பைக் குறவர், காள குறவர், மோண்டா குறவர், கொரவர், கருவேப்பில்லை குறவர், தோகைமலை குறவர், மேல்நாடு குறவர், கீழ்நாடு குறவர், காதுகுத்தி குறவர், பச்சகுத்தி குறவர், வேடர் மற்றும் வேடுவர் என பல பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். இதனால் இடஒதுக்கீடு அடிப்படையில் குறவர் இன மக்கள் பிரிக்கப்பட்டு பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ஆகிய பிரிவுகளில் வைக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சங்ககாலத்தில் குன்றக்குறவர்கள்

குன்றக்குறவர்களைப் பற்றி அறிந்த கொள்வதற்கு சங்ககால இலக்கியங்கள் பேருதவியாக இருக்கிறது. சங்ககாலத்தில் வேட்டையாடி உணவு சேகரிக்கும் இனக்குழுச் சமூகம் பற்றி அறிவதற்கு போதிய சான்றுகள் உள்ளன. சங்ககாலத்தில் இத்தகு வாழ்க்கை முறையை வேட்டுவர், கானவர், குறவர், எயினர் முதலான இனக்குழுவினர் கொண்டிருந்தனர். எனினும் இவர்களிடையே தொழிற் பிரிவுகள் இருந்தன என்று தெரிகிறது.

சங்ககாலத்தில் இனக்குழுச் சமூகம் (aboriginal/tribal society) என்ற அடிப்படையில் மூன்று நிலைகளில் பகுக்கப்பட்டிருந்தனர்.

  1. வேட்டையாடி உணவு சேகரித்தவர்கள்
  2. வேட்டையாடி உணவு உற்பத்தி செய்தவர்கள்
  3. வேட்டையாடி ஆநிரை கவர்ந்தவர்கள்

இதில் இரண்டாம் நிலையில் உள்ள வேட்டையாடி உணவு உற்பத்தி செய்தவர்கள் என்ற பண்பாட்டு மாற்றத்தைக் கொண்டவர்களாக இருந்தவர்கள் குன்றக்குறவர்கள். இவர்கள் கானக்குறவர், புனக்குறவன், பல்கினைக் குறவர், மலைஉறை குறவர், குடிக்குறவர், கானவன், சிறுகுடிக் கானவன், புனவன், நாடன், குன்றுவன் என்றெல்லாம் அழைக்கப்பட்டுள்ளனர்.

குன்றக்குறவர்கள் மலைப்பகுதிகளில் விவசாயம் செய்யத் தலைப்பட்டவர்கள். என்றாலும் வேட்டைத் தொழிலைக் கைவிடவில்லை. அதாவது மலைகளிலும், மலைச்சரிவுகளிலும் அவர்கள் இட்ட பயிர்களை அழிக்க வந்த காட்டு விலங்குகளை வேட்டையாடினார்கள். எனவே உண்மையான வேட்டை எனும் நிலையிலிருந்து மாறி விவசாயத்தைக் காப்பற்றுவதற்கான வேட்டை எனபதாக உருமாறியது. இதனை சங்க நூல்கள், புறநானூறு தெளிவுபட எடுத்துக்கூறுகிறது என்பதை,

கானவர்

கரிபுனம் மயக்கிய அகன்கண் கொல்லை,

ஐவனம் வித்தி, மையுறக் கவினி,

ஈனல் செல்லா ஏனற்கு முழமெனக்

கருவி வானம் தலைஇ    (புறம்.154)

என புறநானூற்றின் 159வது பாடல் குறிப்பிடுகின்றது.

ஆக, ‘வேடர்’ சமூகத்திலிருந்து ‘குன்றக்குறவர்’ சமூகம் பெருமளவு மாற்றம் பெற்ற ஒரு சமூகம் எனக் கருதலாம். இவர்கள் விவசாய காலத்தில் பயிரிடுவதையும், விவசாயம் செய்ய முடியாத பருவகாலங்களில் வேட்டையாடுதலையும் முதன்மை தொழிலாகக் கொண்டிருந்தனர். வேட்டையில் கிடைத்த இறைச்சியை அம்மக்கள் சமமாக பகிர்ந்து கொண்டனர். இச்செய்திகளை பின்வரும் நற்றினைப் பாடல் மூலம் விளங்க முடிகிறது.

      கானவன் எய்த முளவுமான் கொழுங்குறை

     தேம்கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு

     காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும் (நற், 85; 8-10)

முள்ளம்பன்றியை வேட்டையாடிய கானவன் இறைச்சியை தம் சிறுகுடியினருக்கு மகிழ்ச்சியுடன் பகுத்துக் கொடுத்ததை இந்த பாடல் தெளிவுபடுத்துகிறது. மற்றுமொரு பாடலிலும் இது தொடர்பான செய்தியினை அறியலாம்.

      கானவன்

     வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை

புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி

குடி முறை பகுக்கும் நெடு மலை நாட (நற், 336; 3-6)

ஆண் பன்றியை வேட்டையாடிய கானவர்கள் குறிஞ்சி நில மனையோள் தன் குடிமுறைக்குப் பகுத்துக் கொடுத்தான் என்பதை இப்பாடல் எடுத்துக்காட்டுகிறது.

குன்றக்குறவர்களின் வாழ்க்கை முறைகள்

"தமிழரின் முதற்திணையான குறிஞ்சி மக்களுள் ஒருவர்களான குறவர்களின் பழக்கவழக்கங்கள் மிகப்பரவலாக இன்றும் அறியமுடிகின்றது.

திணைநிலைச் சமூகத்தில் கல்லும், வில்லும், கைத்தடியும் கொண்டு வேட்டையாடித் திரிந்த மனிதன் உணவுக்காக தானிய சாகுபடி முயற்சியில் ஈடுபட்டான். அப்போது அவன் பயிர் சாகுபடி பற்றி ஏதும் அறியாத நிலையில்தான் இருந்தான். அந்நிலையில் அனுபவம் சில பாடங்களை அவனுக்குக் கற்றுக் கொடுத்திருக்கும். கட்டாந்தரையில் விதைகளைப் போட்டால் பறவைகள் அவற்றைப் பொறுக்கித் தின்றுவிடுதல் கூடும். எறும்புகளும் இழுத்துச் சென்றுவிடும். மேலும் மழைபெய்யும் போது மழைநீர் விதைகளை அரித்துச் சென்றுவிடுதல் கூடும். எனவே நிலத்தைக் கிளறிப் புழதியாக்கி அப்புழுதியில் விதைகளை விதைக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டான். இந்நிலையில் நிலத்தில் கிடக்கும் கிழங்குகளைத் தின்பதற்காகப் பன்றிகள் மண்ணைத் தோண்டிக் கிளறிப் புழுதியாக்கியிருப்பதைக் கண்டான். அவ்வாறு பன்றிகளால் கிளறிப் புழுதியாக்கப்பட்ட இடங்களில் குன்றவர் மழைக்காலத்தில் தினை விதைத்தனர். அப்படி விதைத்த தினை முளைத்து வளர்ந்து விளைந்தது. இதனை,

அருவியார்க்கும் கழைபயில் நனந்தலைக்

  கறிவளரடுக்கத்து மலர்ந்த காந்தட்

 கொழுங்கிழங்கு மிளரக் கிண்டி,கிளையோடு,

கடுங்கண் கேழல் உழுத பூழி,

நன்னாள் வருபதம்நோக்கி,குறவர்

உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை

முந்து விளையாணர்    (புறம்.168)

 

அருவி ஒலித்துப் பாயும் மூங்கில் வளர்ந்த அகன்ற இடத்தையுடைய மிளகுக்கொடி வளரும் மலைச்சாரலினிடத்து மலர்ந்த காந்தளினது கொழுவிய கிழங்கு பிறழக் கிளறித் தன் இனத்தோடு கூடித் தறுகண்மையுடைய பன்றிகள் உழுத புழுதியில் நல்ல நாள் வந்த செவ்வியைப் பார்த்துக் குறவர் அந்நிலத்தை உழாமல் அதுவே உழவாக வித்திய பரிய தோகையுடைய சிறிய தினை முற்பட விளைந்த புதிய வருவாயாகிய கதிர் என்பதாகக் குறிப்பிடுகிறது.

மேலும் குன்றக்குறவர்கள் தேனையும் கிழங்கையும் விற்றுப் பண்டமாற்றாக, மீன் நெய்யினையும் நறவையும் பெறுவர். உடும்பிறைச்சியோடு, கடமான் தசை, முள்ளம் பன்றியின் ஊன், மூங்கில் குழாயில் ஊற்றி வைத்த தேனிறல், நெய்யால் செய்த கள், புளிப்புச் சுவையுடைய உலையாக ஏற்றி ஆக்கிய மூங்கிலரிசிச் சோறு, பலாவிதையின் மாவு ஆகியவற்றை நல்கி மலைவாழ்நர் விருந்தோம்புவர் என மலைபடுகடாம் கூறும். இதே நிலையினை மீனாட்சியம்மை குறத்திலும் காணமுடிகின்றது.

செழித்த கொடியிலிருந்து வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்து குறவர்கள் உணவாக உட்கொள்கின்றனர். மலையின்கண் உள்ள குறிஞ்சி மலரை முல்லைக் கொடியில் வைத்துத் தொடுத்தும், பசுந்தழையையும் மரவுரியையும் ஆடையாக உடுத்திக் கொள்கின்றனர். விருந்தினருக்கு தேனும், தினையும் வழங்கி விருந்தோம்புகின்றனர் என்று இச்சமூகத்தினரின் பழக்க வழக்கங்களை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

தொழில்

குன்றக் குறவர்கள் மலையும் மலை சார்ந்த இடத்தில் வாழ்ந்து வந்ததினால் மலைத்தேன் எடுப்பது, தினை மாவு சேகரிப்பது, வேட்டையாடுவது, மூங்கில் மரங்களை வெட்டி, அதை நன்கு சீவி தப்பை குச்சிகளாக பிரித்து மூங்கில் கூடையாக பின்னுவது, கோழிகள் அடைக்கும் பஞ்சாரம் எனப்படும் கூடுகளை பின்னுவது, மூங்கில் முறம் செய்வது, போன்ற தொழில்கள் செய்தார்கள். இந்த சமுதாய பெண்களுக்கு கைரேகை பார்த்து பலன் சொல்லும் ஆற்றலும் இருந்தது.

பழக்க வழக்கங்கள்

வேட்டையாடிய மான் இறைச்சி, தேன், தினை மாவு, மூங்கில் கூடை, மருத்துவ குணம் கொண்ட வேர்கள், பச்சிலைகள், போன்ற பொருட்களை மலையில் இருந்து எடுத்து வந்து மலையை சுற்றி உள்ள நகரங்களில் விற்பனை செய்வார்கள். அதற்கு பதிலாக நகரத்தில் கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற உணவு பொருட்களை வாங்கி செல்வார்கள். மலையில் இருந்து வரும் பொழுது ஆண்களும், பெண்களும் சேர்ந்து வருவார்கள். நகரத்திற்குள் வந்தவுடன் ஒரு பகுதியில் கூடாரம் அமைத்து, சிறு, சிறு குழுக்களாக வியாபாரத்திற்கு செல்வார்கள்.

குறத்தியரின் குறி சொல்லும் திறன்

குறத்தியர் குறி சொல்லும் தொழிலை நன்கு கற்றவர்கள். அது அவர்களுக்கு குலத்தொழில். இப்பெண்களின் குறி சொல்லும் திறமையை குற்றாலக் குறவஞ்சி மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது. குறவ இனப் பெண்கள் கைரேகை பார்க்கலியோ.!!! என்று கூவி, கூவி வீதிகளில் சுற்றுவர். நகரத்தில் உள்ள பெண்மணிகள் இவர்களின் வருகையை ஆவலுடன் எதிர் பார்ப்பர். ஏனெனில் இவர்கள் கூறும் பலன்கள் அப்படியே பலிக்கும் என முழு நம்பிக்கை வைத்திருப்பார்கள்.

கைரேகை பார்க்கும் பொழுது இந்த சமுதாய பெண்கள் தான் வாழும் மலைகளின் சிறப்புகளையும், அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் பாட்டாக பாடி பலன் சொல்வார்கள்.ஆண்களுக்கு வலதுகையையும், பெண்களுக்கு இடது கையும் பார்த்து குறிசொல்லுவர். அவர்கள் ஜக்கம்மா தேவியையும், குறளிப் பேயையும் வசப்படுத்திக் குறி கணிப்பர். அவர்கள் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் குறியின் மூலம் கணித்துச் சொல்லும் ஆற்றல் கொண்டவர்கள். மனக்குறி, உடற்குறி, கைக்குறி, விழிக்குறி, சொற்குறி போன்ற பலவகையான குறிகளை சொல்வதில் வல்லவர்களாகவும் திகழ்ந்தனர்.

மன்னவர் தமக்கு வலதுகை நோக்கி

இன்னகை மடவார்க் கிடதுகை பார்த்துக்

காலமுன் போங்குறி கைப்பல னாங்குறி

மேல்இனி வருங்குறி வேண்டுவோர் மனக்குறி

மெய்க்குறி கைக்குறி விழிக்குறி மொழிக்குறி (குற்றா குற:35)

என்று குற்றாலக் குறவஞ்சி குறவர் இனப் பெண்களின் குறி சொல்லும் திறமையை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது

குறிப்பிட்ட நாட்களில் தங்களுடைய வியாபாரத்தை முடித்து கொண்டு மீண்டும் மலையை நோக்கி சென்று விடுவர். சமூகநீதிக்கு முன்மாதிரியாக திகழும் தமிழ்நாட்டில் குறவர் மக்களின் இன்றைய வாழ்க்கைச் சூழல் மிக அவலமான நிலையில் உள்ளது என்பதை குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.

குன்றவர்களின் மொழி

மலைகளிலும் மலைசார்ந்த குன்றுகளிலும் வாழ்ந்த தொல்குடியின மக்களான குன்றக்குறவர்கள் பேசிய பேச்சு மொழியை “குர் மொழி” என்றும், “குளுவமொழி”என்றும் கூறுவார்கள். குறவர் என்ற சொல்லின் குறுக்கமே “குர்” என்று ஆகி குர்மொழி ஆனது. குளுவன் என்றால் மலைப்பகுதிகளில் வாழும் குறவர் என்பதே பொருள். ஆகவே குர்மொழி அல்லது குளுவமொழி குன்றக்குறவர்களின் மொழியாகும்.

எடுத்துக்காட்டாக அம்மாவை, “அம்மா ” என்றும், அப்பாவை “அவ்பா ” என்றும் மகனை “மவுனு ” என்றும், பெரிய அண்ணனை “பெர்ண்ணு ” என்றும், மகளை “மகா ” என்றும், பெரிய அக்காவை “பெரிக்கா ” என்றும், மூத்த மருமகளை “நங்கா ” என்றும், மைத்துனியை “மர்ச்சினிச்சி ” என்றும், அத்தையை “அட்டா ” என்றும், மாமாவை “மாமா ” என்றும், தந்தை வழி பாட்டாவைத் “தாத்தா ” என்றும், தாய்வழிப் பாட்டியை “அம்மம்மா ” என்றும் அழைக்கிறார்கள். இப்பெயர்ச் சொற்கள் முழுமையாகத் தமிழ் மொழியை வேராகக் கொண்டவை. பல சொற்கள் திரிந்தும், மருவியும் இருக்கின்றன ஒலிவடிவத்தில்.

குறவர்கள் ஆதி மொழியான தமிழை அறிந்திருந்தாலும், இவர்களுக்கென்று சங்கேத சொற்கள் உண்டு. இந்த பாசைகளை வெறும் பேச்சளவில் தான் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

சங்கேத சொற்கள்

காவலர் - வாளான் (அ) வாளான்டி

மனிதன் - பூத்தை

அந்த – அச்சு

அந்த மனிதன் - அச்சு பூத்தை

சோறு - மருக்கம்

பெரிய மனிதர்கள் - பெருமாச்சி பூத்தை

பெண்கள் - பொம்பூத்தை

ஆண்கள் - ஆம்பூத்தை

இரு - இருசு

போ - பிச்சு

கறி - பச்சம்பு

பணம் - கவயம்

காசு - சொனியம்

சாப்பிடு - மோச்சு

வீடு - பெரடு

தண்ணீர் - உமுண்டி

சாராயம், கள் - வேண்டி

நாய் - காவா

கோழி - பொருப்பத்தான்

பன்றி - மூசுவான்

பூனை - காஞ்சுவான்

உறவுமுறைகள்

தமிழ்க் கடவுளாக அறியப்படும் முருகப் பெருமானை குல தெய்வமாக வணங்கி வருகிற குன்றக் குறவர்கள் நான்கு குலங்களை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அந்த குலங்கள் முருகன் வழிபாடு செய்வதில் இருந்து உருவானதாக தெரிகிறது. அதாவது முருகன் வழிபடும் பொழுது முருகன் சிலையினை ஒருவர் குளிப்பாட்டுவதும், மற்றொருவர் அந்த சிலைக்கு அலங்காரம் செய்வதும், இன்னொருவர் பூசை செய்யும் நேரத்தில் மணி அடிப்பதும், மற்றொருவர் முருகனுக்கு காவடி எடுத்தும் வருவர். இந்த நடைமுறை ஆண் மலைகளில் வழிபாடு செய்துள்ளனர். இந்த பூசையின் அடிப்படையில் தான் இவர்கள் தங்களுக்குள் உறவு முறைகளை பிரித்திருக்கிறார்கள்.

அந்த வகையில் முருகனின் மேலைத்தொட்டு குளிப்பாட்டியவர் "மேலுத்தர்" என்றும், (முருகனுக்கு அலங்காரம் செய்தவர்) சந்தனம் பூசியவர் "சாத்தப்பாடியர்" என்றும், முருகனுக்கு பூசை செய்யும் பொழுது மணி அடித்தவர் "மாணிப்பாடியர் என்றும் முருகனுக்கு காவடி எடுத்தவர் "காவடியர்" என்றும் தங்களுக்குள் 4 குலங்களாக பிரித்து, முருனை குளிப்பாட்டும் போதும், சந்தனம் தடவும் போதும், முருகனின் உடம்பை தொடுவதால் அதன்படி மேலுத்தர், சாத்தப்பாடியார் ஆகிய இரு பிரிவினரும் அண்ணன் தம்பிகளாகவும், மணியடித்தும், காவடி தூக்கி திருவிழாவை முடித்துக் கொடுப்பதால் மாணிப்பாடியர், காவடியர் ஆகிய இரு பிரிவினரும் அண்ணன் தம்பிகளாகவும் பிரித்து கொண்டார்கள். அண்ணன் தம்பிகளாக பிரித்து கொண்ட குலத்தினர் மற்ற குலத்தினரை மாமன், மைத்துனராக உறவு வைத்து கொண்டார்கள்.

தற்போதைய நகர வாழ்க்கை

மலைகளில் வாழ்ந்து வந்த குன்றக்குறவர்கள், தொடர்ந்து பெய்து வரும் மழையினாலும், காட்டு மிருகங்களின் அச்சுருத்தத்தினாலும், பச்சிளம் குழந்தைகளை பேணி காப்பதற்காகவும், தாங்கள் செய்து வரும் தொழிலுக்கு சரியான வருமானம் இல்லாததாலும் சிறுக, சிறுக மலைகளை விட்டு நகரங்களை நோக்கி வரத்தொடங்கினர். நகரங்களில் வாழ்வதற்கு சரியான இருப்பிடம் இல்லாத காரணத்தினால் ஊருக்கு வெளியே ஒதுக்கு புறமாக வாழ துவங்கினர்.

 அப்போது அவர்களின் பிரதான தொழில் நகரத்தில் வசிக்கும் பெண்களுக்கு காது வளர்த்து விடுதல் போன்ற தொழிலை ஆண்கள் செய்து வந்தார்கள். அதாவது; பெண்களின் விருப்பத்திற்கு ஏற்ப காதை குத்தி, சோளதட்டையை அந்த ஒட்டையில் வைத்து விடுவார்கள். பிறகு அந்த காது சிறுதாக, சிறுதாக காதின் அடிப்பகுதி கீழ் நோக்கி வளர ஆரம்பிக்கும். நன்றாக வளர்ந்த பிறகு அந்த ஒட்டையில் தங்கத்தினால் செய்யப்பட்ட தண்டட்டி, பாம்படான், புனுக்கெட்டான் என பெயரிடப்பட்ட உலோகங்களை காதில் அணிவர்.

காது வளர்ந்து வரும் வரை இந்த சமுதாய மக்கள் தான் அவர்களின் இல்லத்துக்கு சென்று பராமரிப்பு செய்து இருக்கிறார்கள். பெண்கள் வழக்கம் போல் கைரேகை பார்க்கும் தொழிலை பார்த்து வந்தார்கள். கூடை முறம் பின்னுதல்,பனை மரத்தில் இருக்கும் பனை ஒலையை எடுத்து ஒலைகொட்டான், கிளுகிளுப்பை, விளக்குமாரு, போன்றவைகளையும் விற்பனை செய்திருக்கிறார்கள். ஆனாலும் இவர்களின் வறுமையை போக்குவதற்கு சரியான வருமானம் கிடைக்கவில்லை.

குறவர்களின் சமுதாய வளர்ச்சி

இந்தியா விடுதலை அடைந்த பிறகு சமூக நலனில் அக்கறை கொண்ட தலைவர்கள், குற்ற பரம்பரையினர் என்ற சட்டத்தை நீக்கம் செய்தார்கள். அந்த சட்டம் நீக்கப்பட்டு விட்டாலும், அந்த சட்டத்தினால் முழுதும் பாதிக்கப்பட்ட இந்த குறவர்கள் வருமானம் இன்றி சமுதாயத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் தான் இருந்தார்கள்.

குறவர்களின் உட்பிரிவுகளும் அவர்களின் நிலையும்

பல பிரிவுகளில் பிரிக்கப்பட்ட குறவர்கள் தற்சமயம் தமிழ்நாட்டில் 4 விழுக்காடு மட்டுமே உள்ளனர். இவர்களில் படிப்பறிவு பெற்றவர்கள் 1 விழுக்காடு என்றளவிலே உள்ளனர். மீதமுள்ள 3 விழுக்காடு மக்கள் படிப்பறிவு இல்லாததால் வேளாண்மை உள்ளிட்ட கூலித் தொழிலில் ஈடுபடுகின்றனர். சிலர் சொந்தமான நிலங்களைக் கொண்டு நல்ல நிலையிலும் உள்ளனர். அதே சமயத்தில் இந்த சமுதாயத்தில் படித்தவர்கள் ஒரு சிலர் அரசாங்க பணிகளில் இருந்து வருகிறார்கள். ஒரு சிலர் அரசியலிலும் தன் பங்கை நிலை நாட்டியுள்ளனர்.

திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் போது அன்றைய முதல்வர் திரு. கருணாநிதி அவர்களால் 1969-ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி தமிழ்நாட்டுக்கான முதலாவது மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் தலைவராக சுங்கத்துறை ஆட்சியராக இருந்து ஓய்வுபெற்ற அதிகாரி ஆ.நா.சட்டநாதன் நியமிக்கப்பட்டார். ஆணையத்தின் உறுப்பினர்களாக மாவட்ட அமர்வு நீதிபதிகள் சின்னப்பன், ஜமால் உசேன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் இயக்குனர் அலுவல் வழியாக ஆணையத்தின் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 16 ஆம் தேதி ஆணையத்தின் பணிகள் தொடங்கின.

அந்த சட்டநாதன் தலைமையிலான குழு அளித்த தமிழ்நாடு பிற்பட்டோர் நலக்குழு அறிக்கை - பாகம் ஒன்றில், அத்தியாயம் 9 இல், 21 வகையான குறவர் இனப்பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

அதே சட்டநாதன் குழுவின் அறிக்கையில், இத்தனை காலமும் கவனிக்கப்படாமலிருந்த இந்த மக்களை, முறைப்படி ஷெடியூல் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று அங்கீகரிப்பதன் மூலம் அரசாங்கம் இவர்கள் கடந்த காலத்தில் புறக்கணிக்கப்பட்டிருந்ததற்கு இப்போதாவது ஈடுசெய்வதாக அமையும். செடியூல் வகுப்பினர் பட்டியலில் குறவர் என்ற பெயர் இருக்கிறது. அப்படி இருந்தும் கூட சம்பந்தப்பட்ட எல்லா அலுவலர்களுமே அதைக் கவனிக்காமல் விட்டு விட்டார்கள். செடியூல் வகுப்புப் பட்டியலில் உள்ள எண் 2 - குறவர் என்னும் குறிப்பும், பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட குறவர் என்னும் இனமும் ஒன்றாகக் கருதப்படவில்லை. இத்தவறு வருந்தத்தக்க ஒன்றாகும். குறவர் சாதி செடியூல் வகுப்புப் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பது தெளிவு என்று அழுத்தமாகப் பதிவு செய்திருந்தது சட்டநாதன் குழுவின் அறிக்கை.

குறவர், இனமக்கள் கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட மக்களாக இருக்கிறார்கள் என்று சொல்லும் இவ்வறிக்கை செ­ட்யூல் வகுப்புப்பட்டியலில் உள்ள குறவர் என்றும், பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட குறவர் என்றும் இருவகையினராகக் கூறி இவர்களை ஒன்றாகக் கருதாதது வருந்தத்தக்கது என்று கூறுகிறது. இதுதான் இம்மக்களின் அடிப்படை பிரச்சினையே! பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட குறவர் என்பவர்கள் குற்றப்பரம்பரையினர் என்று ஆங்கில அரசால் முத்திரை குத்தப்பட்டவர்கள்.

மலைகளில் இருந்து விரட்டப்பட்ட மக்கள் பல்வேறு இடங்களில், பல்வேறு தொழில்களைச் செய்து நிரந்தர குடியிருப்பு இல்லாமல் அலைந்து திரிந்ததால், அவர்கள் (திருட்டு போன்ற) குற்றத் தொழில் செய்பவர்கள் என்று சொல்லி, பகலில் எங்கிருந்தாலும், இரவில் காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டதால் இவர்கள் குற்றப்பரம்பரையினர் என்று முத்திரை குத்தப்பட்டார்கள். பின்னர் இம்மக்கள் குற்றப்பரம்பரைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டார்கள். அப்படி நீக்கப்பட்டபோது இவர்கள் சீர்மரபினர் பட்டியிலில் சேர்க்கப்பட்டுவிட்டார்கள். சிலர் தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலும் சேர்க்கப்பட்டனர்.

எடுத்துக்காட்டாக “கொரவர்” என்ற பெயர் சீர்மரபினர் பட்டியிலிலும், “குறவன்/ சித்தனார்” என்ற பெயர்கள் தாழ்த்தப்பட்டவர் பட்டியலிலும், “மலைக்குறவன்” என்ற பெயர் பழங்குடியினர் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

சட்டநாதன் குழு அறிக்கையில் காணும் 21 பிரிவு மக்களையும், ஒரே இனமாக, ஒரே பழங்குடி இனப் பட்டியலில் சேர்ப்பதற்குப் பதிலாக, சீர்மரபினர், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் பிரித்து சேர்க்கப்பட்டுள்ளதால், இம்மக்களுக்கான அடிப்படை உரிமைகளை அரசிடமிருந்து முறையாகப் பெறமுடியவில்லை என்பது நிதர்சனம்.

சீர்மரபினர், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் குறவர் இனமக்கள், அவர்களுக்குரிய பழங்குடியின அடையாளத்தை இழந்து வாழ வேண்டிய சூழல் ஏற்படுகின்றது என்பது அம்மக்களின் மனக்குமறலாக இருக்கிறது. அதுமட்டுமன்று, சாதிச் சான்றுகள் பெறுவதிலும் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதனால் இம்மக்களின் கல்வி, அரசுப்பணி, பிற அரசு நலத்திட்ட உரிமைகள் அனைத்துமே பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மொத்தத்தில் இச்சமூகம் முன்னேற்றத்திற்கு இச்சாதிப்பிரிவுகள் பெரும் தடையாக இருக்கின்றன.

ஆகவே, சட்டநாதன் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும், ஆத்தூர் கீழ்நாடு கொறவர், ஆத்தூர் மேல்நாடு கொறவர், சிங்க கொறவர், கங்கையபாடி கொறவர், தொப்ப கொறவர், டாபி கொறவர், இஞ்சிக் கொறவர், கலிங்கி தேபி கொறவர், கல கொறவர், கொண்ட கொறவர், பொன்னை கொறவர், சேலம் மேல்நாடு கொறவர், சேலம் உப்புக் கொறவர், சக்கரை தமதை கொறவர், சாரங்கபள்ளி கொறவர், தல்லி கொறவர், தொகமலைக் கொறவர், வடுகர்பட்டி கொறவர், வேட்டை கொறவர், வரகனேரி கொறவர் ஆகிய 21 பெயர்களையும் ஒரே இனப்பெயராகக் குறவர் என்றே அழைக்கப்பட வேண்டும், பழங்குடி இனப்பட்டியலில் சேர்க்கப்படவேண்டும் என்ற அந்த மக்களின் நியாயமான வேண்டுகோளை மத்திய - மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்பது காலத்தின் அவசியமாகும்.

முடிவுரை

சங்ககாலம் தொட்டு இலக்கியங்களிலும் செவ்வியல் பனுவல்கள் மற்றும் தொல்லியல் தரவுகளிலும் காணப்பெறும் திணைக்குடி மக்களான குன்றக்குறவர்களின் தற்போதைய வாழ்நிலை மிகவும் கவலைக்குரியதாக இருப்பது கண்கூடு. சமூகநீதி அடிப்படையில் இடஒதுக்கீடு பெறுவதில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைவிட, பழங்குடி மக்களுக்கே முன்னுரிமை பெறக்கூடிய இடத்தில் உள்ளனர். குறவர் இன மக்களிடமிருந்து ஆட்சித்தலைவர், காவல்துறைத் தலைவர், உயர் பொறியியல், மருத்துவ மற்றும் பிற அதிகாரிகளாகவோ எவரும் அடையாளப்படுத்தக் கூடிய வகையில் இதுவரை வரவில்லை என்பதே குறவர் மக்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதியாக உள்ளது.

அதற்கான காரணம் சட்டநாதன் குழு பரிந்துரையின்படி இம்மக்கள் “கொறவர்” என்று அழைக்கப்படாமல் குறவர் என்றே அரசு பதிவு செய்ய வேண்டியது அவசியமான ஒன்று. 1921 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது குறவர் என்றே எழுத்தமைப்பில் இருந்துள்ளதாக சட்டநாதன் குழு அறிக்கை கூறுகிறது. பிறகு ஆங்கிலேயரின் உச்சரிப்பு வசதிக்காகக் கொறவர் என்றும், குறவர் என்றும் இம்மக்கள் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.

இந்த சமூக அநீதியில் இருந்து அவர்களை மீட்டெடுக்க பிரிந்து கிடக்கும் குறவர் இனப்பெயர்களை ஒற்றைக் குடைக்குள் ஒருங்கிணைத்து ஒரே அடையாளம் கொண்ட பெயராக அறிவிக்க வேண்டும். அத்தோடு இந்த மக்களின் சமூக அவலங்களைக் களையவும், இவர்களுக்கான சமூக நீதி கிடைக்கவும் அரசு ஆவன செய்ய வேண்டும்; ஏனைய சமூகங்களும் இவர்களுக்குத் துணை நிற்க வேண்டும் என்பதே அம்மக்களின் எதிர்பார்ப்பு.

துணைநூற்பட்டியல்

  1. தர்ஸ்டன், எட்கர் (தமிழில் க.ரத்னம்), 1986-2005 (1909), தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
  2. K.S. சிங் (1997), இந்தியாவின் மக்கள் (People of India), இந்திய மானிடவியல் மதிப்பாய்வகம், கொல்கத்தா
  3. சட்டநாதன் குழு ஆய்வறிக்கை (1970), தமிழ்நாடு அரசு
  4. பக்தவச்ல பாரதி (2014), இலக்கிய மானிடவியல், அடையாளம் வெளியிட்டகம், திருச்சி.
  5. பக்தவத்சல பாரதி.., (2005), மானிடவியல் கோட்பாடுகள், அடையாளம் பதிப்பகம், திருச்சி.
  6. புறநானூறு
  7. புலியூர் கேசிகன், குற்றாலக் குறவஞ்சி, சாரதா பதிப்பகம், சென்னை. (2009)